கோத்தபயாவைக் கொல்ல சதி?-தடுத்து விட்டதாக போலீஸ் அறிவிப்பு
கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தம்பியும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபயா ராஜபக்சேவைக் கொல்லத் திட்டமிடப்பட்டிருந்த சதியை முறியடித்து விட்டதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் நிமல் மெடிவக கூறுகையில், தற்கொலைப் படைத் தாக்குதல் மூலம் கோத்தபயா ராஜபக்சேவைக் கொல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்காக வைக்கப்பட்டிருந்த தற்கொலைப் படையினரின் சாதனங்கள், வெடிபொருட்கள், கையெறி குண்டுகள் ஆகியவற்றை வடக்குக் கொழும்பு புறநகரான முத்வால் என்ற இடத்தில் ஒரு வீட்டிலிருந்து கைப்பற்றியுள்ளோம்.
மனித வெடிகுண்டு மூலம் கொரில்லாத் தாக்குதலை நடத்தி கோத்தபயாவைக் கொல்வது. ஒருவேளை அதில் அவர் காயமடைந்தால், மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கோத்தபயாவைக் கொண்டு செல்லும்போது இறுதித் தாக்குதலை நடத்தி அவரைத் தீர்த்துக் கட்ட விடுதலைப் புலிகள் சதித் திட்டம் தீட்டியிருந்தனர் என்றார்.
ஏற்கனவே 2006ம் ஆண்டு விடுதலைப் புலிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் தப்பியவர் கோத்தபயா என்பது நினைவிருக்கலாம்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடுக்கி விட்டு முழுமையாக அதைக் கண்காணித்து வழி நடத்தியவர் கோத்தபயாதான் என்பது குறிப்பிடத்தக்கது.