For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அணை: கருணாநிதி அறிவிப்பு-ஜெ. மகிழ்ச்சி!!

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக கருணாநிதி அறிவித்திருக்கிறார். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், "முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசுக்கு அனுமதியளித்து மத்திய அரசின் சார்பாக அதிகாரபூர்வமான உத்தரவு எதுவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை. அப்படியொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான ஆதாரத்தைக் காட்டினால் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கேரள அரசுக்கு மத்திய அரசு முல்லைப் பெரியாறு அணை பகுதியில் ஆய்வு நடத்த அனுமதி அளித்து விட்டதாக ஒரு முறைக்கு இரண்டு முறை பகிரங்கமாக அறிவிக்கிறார்.

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்து விட்டது குறித்து ஜெயராம் ரமேஷ் தன்னிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் பகிரங்கமாக அறிவிக்கிறார். இதைவிட என்ன ஆதாரம் கருணாநிதிக்கு தேவை என்று புரியவில்லை.

16.9.2009 அன்று நடைபெற்ற வன உயிரினங்களுக்கான தேசிய வாரியத்தின் நிலைக் குழுக்கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வருகிறது. இதை விட என்ன ஆதாரம் தேவை?.

அந்தக் கூட்டத்தின் நடவடிக்கை குறிப்புகளைப் பார்த்து கருணாநிதியால் தெரிந்து கொள்ள முடியாதா?. ஆதாரத்தை கேட்டுப் பெற வேண்டிய இடத்தில் இருக்கும் ஒரு முதல்வர் இது போன்று செய்தியை வெளியிடுவது நியாயமா என்பதை முதலில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டின் ஜீவாதார பிரச்சினையான முல்லைப் பெரியாறு விஷயத்தில் தமிழகத்திற்கு எதிராக, கேரள அரசுக்கு சாதகமாக பிறப்பிக்கப்பட்ட ஓர் உத்தரவை கூட, ஆதாரத்தைக் கூட கருணாநிதியால் பெற முடியவில்லை என்றால், ஏன் மத்திய அமைச்சரவையில் திமுக இன்னமும் நீடித்துக் கொண்டிருக்கிறது?.

கருணாநிதியின் நடவடிக்கைகளைப் பார்த்தால், தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசை தட்டிக் கேட்கபயந்து, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை மூடிமறைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறாரோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

22.9.2009 அன்று கருணாநிதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. கடிதம் எழுதி 15 நாட்களுக்கு மேலாகியும், பதில் கடிதம் கூட மத்திய அரசு எழுதியதாகத் தெரியவில்லை. இதிலிருந்தே மத்திய அரசு நிச்சயமாக கேரள அரசுக்கு அனுமதி அளித்திருக்கும் என்று கருணாநிதி யூகித்துக் கொள்ள வேண்டாமா?.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதன் மூலம் அணைக்கு ஆபத்து ஏற்படும் என்ற கேரள அரசின் கூற்று அடிப்படை ஆதாரமற்றது என, பல்வேறு அறிக்கைகளை ஆராய்ந்த பின் உச்ச நீதிமன்றம் தனது 2006ம் ஆண்டு தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்படுவதை சீர்குலைக்க வேண்டும், இடையூறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கேரள அரசு செயல்படுவதாக மத்திய நீர் ஆணையத்தின் அறிக்கை உட்பட பல்வேறு அறிக்கைகள் குறிப்பிடுவதையும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதன் காரணமாக அணைக்கு பாதிப்பு ஏற்படும் என்று எந்த அறிக்கையிலும் குறிப்பிடப்படவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், மத்திய அரசின் தற்போதைய உத்தரவு தேவையற்றது.

தமிழக அரசுக்கு சாதகமான அம்சங்கள் உச்ச நீதிமன்றத்தின் 2006ம் ஆண்டு தீர்ப்பிலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

மத்திய அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக கருணாநிதி நேற்று அறிவித்து இருக்கிறார். எது எப்படியோ, காலம் தாழ்த்தியாவது என்னுடைய கூற்றிற்கு மதிப்பளித்து 'கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு வழக்குதொடரும்' என்று கருணாநிதி அறிவித்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்த அறிவிப்பு, இதற்கு முன்பு பல்வேறு பிரச்சனைகளில் அறிவிக்கப்பட்டது போல் அல்லாமல், தமிழக மக்களுக்கு பயனளிக்கும் வகையில், உறுதியான செயல் வடிவம் கொண்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாக அமைய வேண்டும் என் பதில் திமுக அரசின் முதல்வசர் கருணாநிதி கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X