சென்னையில் இலங்கை தூதரகம் தேவையில்லை-சீமான்
சென்னை: தமிழர்களை பற்றி தவறாக பேசிய இலங்கை துணை தூதரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் இலங்கை துணைத் தூதரகமே தேவையில்லை. தமிழினத்துக்கான ஒரு தூதரகம் தான் இங்கு இருக்க வேண்டும் என இயக்குனர் சீமான் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சீமானின் தலைமையில் செயல்பட்டு வரும் நாம் தமிழர் இயக்கம் சார்பில் ஆழ்வார்பேட்டை இலங்கை துணைத் தூதரக அலுவலகத்தின் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் சீமான் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் தமிழர்களை கொச்சைப்படுத்திய பேசிய இலங்கை துணை தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். சிலர் ராஜபக்சேவின் உருவபடத்தை செருப்பால் அடித்தனர்.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் பேனர், புலி கொடி ஆகியவற்றை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தின்போது சீமான் பேசுகையில்,
ஈழத் தமிழர்களை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படுமா? என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு இலங்கை துணை தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி அது மிருகக் காட்சி சாலை அல்ல என்று வாய்க்கொழுப்புடன் பதிலளித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குவதாக வெளியான செய்திகள் தவறானது எனவும் கூறுகிறார். தமிழ்நாட்டுக்கே வந்து தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக, இழிவுபடுத்தி பேசும் அவரை இங்கு பணியாற்ற அனுமதிக்கக்கூடாது.
ஈழத்தமிழ் மக்கள் அனுபவித்து வரும் கொடுமைகளை தாங்க முடியாமல் வேதனை அடைந்து வரும் இந்த நேரத்தில் பொறுப்பு வாய்ந்த பதவியில் உள்ள அதிகாரி ஒருவர் இப்படி பேசியிருப்பதால் வேதனைக்கு ஆளாகியிருக்கிறோம்.
மாநிலம் தழுவிய போராட்டம்...
அவரை உடனடியாக மத்திய அரசும், தமிழக அரசும் வெளியேற்ற வேண்டும். தமிழ்நாட்டுக்கு இலங்கை துணை தூதரகமே தேவையில்லை. தமிழினத்துக்கான ஒரு தூதரகம்தான் இங்கே அமைய வேண்டும்.
வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை வெளியேற்றாவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் தமிழின உணர்வாளர்களை ஒன்றுதிரட்டி மிக பெரிய போராட்டங்களை நடத்துவோம் என்றார் சீமான்.