For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்- பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

Google Oneindia Tamil News

Satellite view of Tamil Nadu
சென்னை: குமரிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை திசை மாறி அரபிக் கடலுக்குப் போய் விட்ட போதிலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

வட கிழக்குப் பருவ மழை தமிழகம் முழுவதும் பெய்து வருகிறது. புதுச்சேரியும் மழைக்குத் தப்பவில்லை.

கடந்த நான்கு நாட்களாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும் உட்பகுதிகளிலும், புதுவையிலும் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வந்தது. குமரிக் கடலில் ஏற்பட்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையே இதற்குக் காரணம். மேலும், மன்னார் வளைகுடாப் பகுதியில் இது நிலை கொண்டிருந்ததால், பலத்த மழை கிடைத்தது.

ஆனால் நேற்று திடீரென இந்த புயல் சின்னம், வடக்கு நோக்கி நகர்ந்து அரபிக் கடலுக்குப் போய் விட்டது. இதனால் கேரளாவில் நல்ல மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

கேரளாவை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சிப் பகுதி மாவட்டங்களான கோவை, நெல்லை, திருப்பூர், தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கன மழை பெய்கிறது.

புயல் சின்னம் தமிழகத்தை நோக்கி வராமல் நகர்ந்து போய் விட்டதால் படிப்படியாக மழையின் அளவு குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நேற்று முதல் சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மழையின் வேகமும், அளவும் குறைந்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடலில் கிழக்கிலிருந்து மணிக்கு 45 - 55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே மீனவர்கள் கடலுக்குப் போவதைத் தவிர்க்க வேண்டும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்றார்.

18 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை...

தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழகம் முழுவதும் 18 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ஈரோடு, ராமநாதபுரம், கோவை, திருப்பூர், தேனி, சிவகங்கை, நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, கரூர், புதுக்கோட்டை, திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் தென்காசி கோட்டத்திற்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதேபோல புதுச்சேரியிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் ஒத்திவைப்பு...

கோவை பாரதியார் பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் சற்றே ஓய்ந்த மழை...

சென்னை நகரில் கடந்த நான்கு நாட்களாக விளாசித் தள்ளிய கனமழை நேற்று சற்று ஓய்ந்தது. நேற்று காலை முதல் லேசான மழை, அவ்வப்போது மட்டும் பெய்து வருகிறது.

இருப்பினும் நான்கு நாட்கள் பெய்த மழையால் தேங்கிய மழை நீர் வெள்ளம் இன்னும் பல பகுதிகளில் வடியவில்லை. இதனால் பல பகுதிகளிலும் இயல்பு நிலை திரும்பவில்லை. மழை மட்டும்தான் ஓய்ந்திருக்கிறதே தவிர மழை வெள்ளம் இன்னும் வடியாமலேயே உள்ளது.

வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதியில் உள்ள தாழ்வான பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்ததால் நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், வீடுகளில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.

வேளச்சேரி, ராம் நகருக்கு என்று விடிவு...?

லேசான மழை பெய்தாலே தண்ணீரில் மிதக்கும் பகுதிகளான வேளச்சேரி, தரமணி, மடிப்பாக்கம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இந்த முறையும் தவறாமல் வெள்ளம் வீடுகளுக்குள் பாய்ந்தது.

அதிலும் ராம் நகர் பகுதி கச்சத்தீவு போல சுற்றிலும் நீர் சூழ்ந்து காணப்படுகிறது. பல வீடுகளின் உள்ளே முழங்கால் அளவுக்கு வெள்ளநீர் தேங்கி இருந்தது. இதனால், வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ் போன்றவற்றை கட்டில் மேல் தூக்கி வைத்திருந்தனர்.

அதேபோல சென்னை நகரின் முக்கிய சாலைகள் அனைத்துமே குண்டும் குழியுமாக மாறிப் போய் போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாகனங்கள் தொடர்ந்து ஒரே வேகத்தில் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

தரமணியில் பெரியார் நகர், பம்மல் நல்லதம்பி தெரு, சோழமன்னன் தெரு ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் வீடுகளுக்குள்ளே புகுந்தது. இதேபோல், மடிப்பாக்கம் ராம்நகர், வேளச்சேரி விஜயநகர், ஏ.ஜி.எஸ். காலனி, சொக்கலிங்கம் நகர், கண்ணகி நகர், எம்.ஜி.ஆர். நகர் ஆகிய பகுதிகளையும் வெள்ளநீர் சூழ்ந்தது.

கார் மீது விழுந்த ஈச்ச மரம்...

தேனாம்பேட்டை செனடாப் சாலையில் கார் ஒன்றின் மீது பெரிய ஈச்ச மரம் விழுந்தது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது.

வடசென்னையில் சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இதனால் வட சென்னை சிறு தீவு போல் காணப்படுகிறது. வீடுகளில் புகுந்த மழைநீரை வாளியை கொண்டு இறைத்து வெளியேற்றி வருகின்றனர்.

வியாசர்பாடி கணேசபுரம் ரெயில்வே பாலத்தின் கீழ் 5 அடிக்கு தேங்கியிருக்கும் மழைநீர் இன்னும் வடியாமல் அப்படியே இருக்கிறது. இதனால் அந்த பகுதி வழியாக பிராட்வே செல்லும் பஸ்கள் அனைத்தும் பேசின்பிரிட்ஜ் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பேசின்பிரிட்ஜ் பாலம் கடந்த சில நாட்களாக போக்குவரத்தில் சிக்கி தவிக்கிறது. இங்குள்ள ஜீவா பாலத்தில் தண்ணீர் தேங்காமல் இருப்பது மட்டுமே வாகன ஓட்டிகளுக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருக்கிறது.

அதே நேரத்தில் வியாசர்பாடி கணேசபுரம் பாலத்தை கடக்க முடியாமல் தவித்த பொது மக்களை தீயணைப்புபடையினர் மிதவை ரப்பர் படகு மூலம் ஏற்றி சாலையின் மறு முனையில் விட்டனர்.

வட சென்னையில் உள்ள கொருக்குபேட்டை, பார்வதிபுரம், மாதவரம், பேசின்பிரிட்ஜ், பிராட்வே, கண்ணதாசன்நகர், மகாகவி பாரதியார் நகர், கொடுங்கையூர், பெரம்பூர், மூலக்கடை, கொளத்தூர் ஆகிய பகுதிகளில் சாலைகளில் தேங்கியிருந்த மழைநீர் மெல்ல வடிய தொடங்கியுள்ளது.

கொரட்டூர் பத்மாவதிநகர் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக புழல் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் காலடிப்பேட்டையில் குண்டு குழியுமான சாலையில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நின்றது. இதன் காரணமாக வாகனங்கள் ஊர்ந்தப்படியே சென்றன. எர்ணாவூர் மேம்பாலத்தின் மழையின் காரணமாக மண்சரிவு ஏற்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X