For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மும்பை மெயிலில் டாக்டரிடம் கொள்ளையடித்த மயக்க பிஸ்கட் கும்பல்

Google Oneindia Tamil News

சென்னை: ரயிலில் பயணம் செய்த டாக்டருக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து, வைர மோதிரம், செல்போன், பர்ஸ் உள்ளிட்டவற்றை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மும்பையில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட மும்பை மெயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு காலை 5.20 மணியளவில் வந்து சேர்ந்தது.

ரயில்வே போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டபோது, ரயில் பெட்டிக்குள் வாலிபர் ஒருவர் மயங்கிய நிலையில் படுத்திருந்ததை பார்த்தனர்.

அவரை சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மயக்கம் தெளிந்த வாலிபர் தன்னுடைய செல்போன், சூட்கேஸ் எல்லாம் எங்கே என பதறினார். பின்னர் அவரிடம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவரது பெயர் யாஷ்ராஜ் (27), புனேயைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. யாஷ்ராஜ் ஒரு டாக்டர். புனேயில் உள்ள வேர்ல்ட் வெல்னஸ் பாரம் என்ற அமைப்பில் மண்டல இயக்குனராக பணிபுரிகிறார் என்பதும் தெரியவந்தது.

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ரயில் வந்த போது அவருடன் பயணம் செய்த ஒருவர் பிஸ்கட் கொடுத்ததாகவும், அதை சாப்பிட்ட பின்னர் தனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் போலீசாரிடம் யாஷ்ராஜ் கூறினார்.

போலீசார் தொடர்ந்து விசாரித்தபோது, ரயிலில் இருந்த மர்ம கும்பல் யாஷ்ராஜுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து அவரிடமிருந்த வைர மோதிரம், சூட்கேஸ், செல்போன், கேமரா மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து விசாரிக்க போலீஸ் படை மும்பை விரைந்துள்ளது. இதுகுறித்து, ரயில்வே போலீஸ் எஸ்.பி பன்னீர்செல்வம் கூறுகையில், 'சென்னை-மும்பை மெயிலில் மட்டும் 3 அல்லது 4 கும்பல்கள் இதுபோல தொடர்ந்து கைவரிசை காட்டிக்கொண்டிருக்கின்றனர்.

இதில் ஒரு கும்பல் குன்டக்கல் அல்லது ரேணிகுண்டாவில் ஏறுவதாக தெரிகிறது. இதுபோல நூற்றுக்கணக்கான வழக்குகள் உள்ளன. சமீபத்தில் இதுபோன்ற ஒரு சம்பவத்தில் தமிழ்நாடு போலீசாரின் தொழில்நுட்ப உதவியுடன் மகாராஷ்டிர போலீசார் ஒருவனை மடக்கினார்கள் என்றார்.

ரயிலில் பயணம் செய்யும்போது அறிமுகம் இல்லாதவர்கள் எதையாவது கொடுத்தால் குறிப்பாக பிஸ்கட், குளிர்பானம் போன்றவற்றை வாங்கி சாப்பிடக் கூடாது. இதுகுறித்து ரயில்வே போலீஸார் தொடர்ந்து பயணிகளுக்கு எச்சரித்து வருகின்றனர். அப்படியும் சிலர் சம்பந்தம் இல்லாதவர்கள் 'அன்போடு' கொடுக்கும் பிஸ்கட் உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டு இப்படி நகை, பணத்தை பறி கொடுத்து வருகின்றனர்.

இந்தத் தொடர் கொள்ளைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது பயணிகளின் கையில்தான் உள்ளது. உஷாராக இருந்தால் நிச்சயம் நம்மை யாரும் ஏமாற்ற முடியாது. எனவே பயணத்தின்போது பயணிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது மிக மிக முக்கியம்.

--

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X