For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முழு ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் பாஜக-திருநாவு

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவிலிருந்து வருத்தத்தோடு விலகுகிறேன். அதே நேரத்தில் காங்கிரஸில் மகிழ்ச்சியோடு இணைகிறேன் என்றார் முன்னாள் மத்திய இணையமைச்சர் திருநாவுக்கரசர்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர் முதன்முறையாக தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார்.

அவரை நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் காங்கிரசார் அவரை பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

காங்கிரஸ் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்து போட்டு முறையாக கட்சியில் இணைந்த அவருக்கு காங்கிரஸ் உறுப்பினர் அடையாள அட்டையை தங்கபாலு வழங்கினார்.

அப்போது நிருபர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்,

காங்கிரஸ் கட்சியில் இணைந்தது மகிழ்ச்சியாக இருந்தாலும் பாஜகவில் இருந்து விலகுவது வருத்தமாகவே உள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் ஈர்க்கப்பட்டு அவர் அழைத்ததன்பேரில் 2002ல் பாஜகவில் இணைந்தேன்.

கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் சேரவில்லை. வாஜ்பாய் நிரந்தரமாக அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு பாஜக முழுமையாகவே ஆர்.எஸ்.எஸ்ஸின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது.

ஜின்னா குறித்து கருத்து தெரிவித்த பிறகு அத்வானியும் கட்சி தலைவர் பதவியில் இருந்து கண்ணீருடன் வெளியேற வேண்டி வந்தது.

இப்போது அடுத்த தலைவர் யார் என்பதைக்கூட முடிவு செய்ய முடியாத நிலையில் பாஜக உள்ளது.

தமிழகத்தில் பாஜகவை முஸ்லிம்கள், கிருஸ்துவர்கள், தலித்துகள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களும் தங்களுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத அன்னிய கட்சியாகவே பாஜவைப் பார்க்கின்றனர். தமிழகத்தில் பாஜகவுக்கு கடந்த காலமும் இல்லை, எதிர்காலமும் இல்லை.

8 முறை வெற்றி பெற்ற தொகுதியில் கூட பாஜக சார்பில் போட்டியிட்டு என்னால் வெற்றிபெற முடியவில்லை.

தமிழகம்தான் எனது அரசியல் களம். ஆனால் மக்களவைத் தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியை எனக்கு ஒதுக்க மறுத்துவிட்டனர். எனவே அதை சரிகட்ட எனக்கு மத்திய பிரதேசத்தில் ராஜ்யசபா எம்.பி பதவி கொடுத்தனர். அங்கு எம்பியாக இருந்து கொண்டு தமிழக மக்களுக்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. தமிழகத்தில் பாஜகவை வளர்க்க முயன்றேன். அதுவும் முடியவில்லை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு நானேதான் பாஜகவிலிருந்து ஒதுங்கி இருந்தேன்.
பொன்.ராதாகிருஷ்ணன் கட்சியின் துணைத் தலைவர் என்ற முறையில் ஏதாவது அறிக்கை விட்டாக வேண்டும். எனவே தான் என் மீது குறை கூறியுள்ளார்.

பாஜகவில் என்னை மிகவும் மரியாதையாக நடத்தினார்கள், இல.கனேசன் உள்ளிட்ட அனைவரும் அன்போடு நடந்து கொண்டார்கள். ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட தலைவர்களை நேரில் சந்தித்து தெரிவித்த பிறகே காங்கிரஸில் இணைந்தேன்.

ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், தங்கபாலு உள்ளிட்ட அனைத்து தலைவர்களுடன் இணைந்து தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்கப் பாடுபடுவேன்.

டிசம்பர் முதல் வாரத்தில் திருச்சியில் இணைப்பு விழா நடைபெறும். சோனியா காந்தி அல்லது ராகுல் காந்தி ஆகியோரில் ஒருவர் அதில் பங்கேற்பார்கள் என்றார்.

அதிமுகவில் இருந்து அழைப்பு வந்ததா? திமுகவில் சேர அழைப்பு வந்ததா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, அதிமுகவில் தற்போது தொய்வு இருப்பதால் அந்த கட்சியில் நான் சேரவேண்டும் என்று அங்குள்ள தொண்டர்கள் விரும்புகிறார்கள்.

ஆனால், ஜெயலலிதாவுடன் உள்ள கருத்து வேறுபாட்டால் அந்த கட்சியில் சேர்ந்தால் சரியாக இருக்காது. அதிமுகவில் சேர்ந்தால் எப்போது விலக்குவார்கள் என்றும் தெரியாது என்றார் திருநாவுக்கரசர்.

தங்கபாலு கூறுகையில்,

காங்கிரஸ் இயக்கம்தான் தேசத்துக்கு உகந்த இயக்கம் என்று கொள்கைரீதியாக, லட்சியரீதியாக கட்சியில் இணைந்துள்ளார் திருநாவுக்கரசர். அவருக்கு சரியான நேரத்தில் உரிய பங்களிப்பு வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் எந்த கோஷ்டியும் கிடையாது என்பதை தெளிவாக சொல்லிக் கொள்கிறேன். சோனியா காந்தி தலைமையை ஏற்று அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். எனவே காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

திருநாவுக்கரசருடன் பாஜகவின் முன்னாள் நிர்வாகிகள் சொர்னா சேதுராமன், ஏ.சி.முத்துக்கண்ணன், தமிழ்செல்வன், பி.பி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நேற்று காங்கிரசில் இணைந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X