For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொன்சேகாவுக்கு கட்சிகள் எதிர்ப்பு: ரணிலை களமிறக்க முடிவு?

Google Oneindia Tamil News

Fonseka and Ranil
கொழும்பு: அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்துவதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழர் கட்சிகள் மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்துள்ள அந்த நாட்டு எதிர்க்கட்சிக் கூட்டணி, தற்போது ரணிலையும் தேர்தலில் களமிறக்க தீர்மானித்துள்ளதாம்.

இலங்கை அதிபர் தேர்தலில் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியவண்ணம் உள்ளன. இதை உறுதிப்படுத்துவது போல சமீபத்தில் பொன்சேகாவும் ராஜினாமா செய்தார்.

ஆனால் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழர் கட்சிகளின் ஒப்புதலையும் இதுதொடர்பாக பெற வேண்டும். ஜேவிபியின் ஆதரவையும் பெற வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் மதிக்காமல் பொன்சேகாவை நிறுத்தக் கூடாது என்றும் அவர் கூறி வருகிறார்.

ஆனால் தமிழ் மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதை விளக்கிக் கூற வேண்டியதில்லை. உண்மையில் ராஜபக்சேவை விட தமிழர்களுக்கு எதிராக மிகக் கொடூரமாக செயல்பட்டவர் பொன்சேகாதான்.

ராஜபக்சே இதைச் செய்யுங்கள் என்று உத்தரவிட்டால் கூடுதலாக மேலும் பல பாதகங்களைச் செய்தவர்கள்தான் பொன்சேகாவும், ராஜபக்சே தம்பியான கோத்தபயாவும்.

சரணடைய வருவோரை ஈவு இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொல்லுங்கள் என்று உத்தரவிட்டவர்கள்தான் இந்த இருவரும். விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன், பூலித்தேவன் உள்ளிட்டோர் வெள்ளைக் கொடியுடன் சரணடைய நிராயுதபாணியாக வந்தபோது ஈவு இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டவர்கள் இவர்கள் இருவரும்தான்.

மேலும் தமிழ் மக்களை கூட்டம் கூட்டமாக கொத்துக் குண்டுகளையும், அபாயகரமான ஆயுதங்களையும் கொண்டு கொன்று குவித்தது பொன்சேகா தலைமையிலான ராணுவம்தான்.

அத்தோடு நில்லாமல் படுகாயமடைந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை கூட்டம் கூட்டமாக புல்டோசர்கள், டேங்குகளை வைத்து ஏற்றிக் கொன்றதும் பொன்சேகா தலைமையிலான ராணுவம்தான்.

இப்போது ராஜபக்சேவுக்கும், பொன்சேகாவுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பொன்சேகா மற்றவர்கள் கண்ணுக்கு நல்லவர் போல மாற்றிக் காட்டப்பட்டு வருகிறார், அவ்வளவுதான். ஆனால் ராஜபக்சேவும், பொன்சேகாவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்ற கருத்தில் தமிழர்கள் தொடர்ந்து உறுதியாகவே உள்ளனர் என்பதே உண்மை.

இதை அறிந்துதான் ரணில் விக்கிரமசிங்கே, தமிழர்களின் நம்பிக்கையையும் பெற்றவரைத்தான் பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என உறுதியாக கூறி வருகிறார்.

இதன் காரணமாகவே இதுவரை பொன்சேகாவுக்கு ஆதரவாக முக்கிய தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு வாய் திறக்காமல் உள்ளது. சமீபத்தில் வடக்கில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்தக் கூட்டமைப்பே பெரும் வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்.

தமிழ் மக்களுக்கு ரணில் மீது ஓரளவு நல்ல அபிப்ராயம் உள்ளது. ராஜபக்சே அளவுக்கு கொடூரமானவர், ஈவு இரக்கமற்றவர் அல்ல ரணில் என்பது தமிழர்களின் கருத்து.

எனவே வருகிற அதிபர் தேர்தலின்போது ஒரு வேட்பாளருக்குப் பதில் இருவரை நிறுத்தும் முடிவுக்கு எதிர்க்கட்சிக் கூட்டணி வந்துள்ளதாம்.

அதாவது சிங்களர்களின் வாக்குளைப் பிரிக்கும் வகையிலும், தமிழர்களின் வாக்குகளை பெறும் வகையிலும் இருவரை வேட்பாளராக நிறுத்துவது. ராஜபக்சேவுக்கு எதிரான சிங்களர்களின் வாக்குகளைப் பிரிக்க பொன்சேகாவை பயன்படுத்திக் கொள்ளவும், அதேசமயம், தமிழர்களின் வாக்குகளை பெருமளவில் கவர ரணிலையும் வேட்பாளராக நிறுத்த அது தீர்மானித்துள்ளது.

ரணிலுக்கு சிங்களர்கள் மத்தியிலும் ஓரளவு செல்வாக்கு இருப்பதால் சிங்களர்கள் வாக்கு முழுமையாக ராஜபக்சேவுக்குப் போகாமல் மூன்று பேருக்குமாக பிரியும். அப்போது அதிகபட்ச வாக்குகளை ரணிலும், பொன்சேகாவும் பிரிப்பார்கள் என்பதால் முடிவு நமக்கே சாதகமாக அமையும். அதேசமயம், தமிழர்களின் வாக்குகள் நிச்சயம் ராஜபக்சேவுக்குக் கிடைக்காது. மாறாக ரணில் பக்கம் சாயும்.

இப்படி நடந்தால் நிச்சயம் பொன்சேகா அல்லது ரணில் ஆகியோரில் ஒருவருக்கு வெற்றி கிடைக்கும் என்பது எதிர்க்கட்சியினரின் கணிப்பு.

எனவே அதிபர் தேர்தலில் பொன்சேகாவுடன் சேர்த்து, ரணிலையும் நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது ஒரு காரணம் என்றால் பொன்சேகாவை முழுமையாக நம்பவும் எதிர்க்கட்சியினர் தயாராக இல்லையாம். காரணம், வெற்றி பெற்ற பின்னர் அவர் ராணுவத்தின் துணையுடன் ராணுவ ஆட்சியாளராக மாறி விடக் கூடிய வாய்ப்புகள் இருப்பதால், அவருக்கு முழுமையான அளவில் மரியாதை தந்து விடாமல் தவிர்க்கவே ரணிலையும் களத்தில் இறக்க அவர்கள் தயாராகி வருவதாக தெரிகிறது.

இரு வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவில் அனுமதி கோரப்படவுள்ளதாம்.

இப்படி இலங்கை எதிர்க்கட்சிகள் ஒரு கணக்கைப் போட்டுக் கொண்டிருக்கின்றன. மறுபக்கம் ராஜபக்சே இந்தியாவின் உதவியுடன் வேறு கணக்கில் ஈடுபட்டிருக்கிறார். இதில் எந்தக் கணக்கு பலிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கூட்டுப் படை புதிய தலைவர் ரோஷன்:

இந் நிலையில் பொன்சேகா ராஜினாமா செய்த இலங்கை முப்படைக் கூட்டுத் தலைவர் பதவிக்கு விமானப் படைத் தலைவர் ரோஷன் குணதிலகேவை நியமித்து அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X