For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்து தீவிரவாதம்- ப.சி பேச்சால் ராஜ்யசபாவில் அமளி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: தீவிரவாதம் குறித்து ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், இந்து தீவிரவாதம் என்று குறிப்பிட்டதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு அமளியில் ஈடுபட்டனர்.

ராஜ்யசபாவில் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான விவாதத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பதில் அளித்துப் பேசினார்.

அவர் பேசுகையில்,

எல்லை தாண்டிய தீவிரவாதத்தின் மையப்புள்ளி, ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ளது. இந்தியாவும் இந்த பிராந்தியத்தில் உள்ளதால், நாம் தீவிரவாத தாக்குதலுக்கு எளிதில் இலக்காகும் நிலையில் இருக்கிறோம்.

சில மாதங்களுக்கு முன்பு எத்தகைய தாக்குதல் அபாயம் இருந்ததோ, அதே நிலைதான் இப்போதும் நீடிக்கிறது.
மேலும், இந்தியாவுக்கு எதிராக லஸ்கர்-இ-தொய்பா போன்ற தீவிரவாத இயக்கங்கள், தங்கள் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து வருகின்றன. இந்த இயக்கங்கள், அல்-கொய்தாவுடன் கூட்டணி அமைத்துள்ளன. இதனால் இந்தியா, தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் அபாயத்தில் உள்ளது.

மும்பை தாக்குதலுக்கு பிறகு, கடந்த ஓராண்டாக எவ்வித தாக்குதலும் இந்தியாவில் நடைபெறவில்லை. இதற்கு நமது அதிர்ஷ்டமே காரணம். தீவிரவாதிகளுக்கு தங்கள் தாக்குதலை வெற்றிகரமாக நடத்த, அவர்கள் பக்கம் ஒருதடவை அதிர்ஷ்டம் இருந்தால் போதும். ஆனால், அவர்களின் தாக்குதலை முறியடிக்க, நமது பக்கம் ஒவ்வொரு தடவையும் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும்.

கடந்த ஓராண்டாக எந்த தாக்குதலும் நடக்கவில்லை என்பதற்காக, நமது பாதுகாப்பு ஏற்பாடுகளை குறைத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால், நமது எதிரிகள் தங்கள் நடவடிக்கையை மாற்றிக்கொள்ளவில்லை. எனவே, நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

தாக்குதலை முறியடிக்கும் அளவுக்கு நமது படைகளுக்கு திறமை உள்ளது. ஏதாவது தாக்குதல் நடந்தால், நமது பதிலடி விரைவாகவும், வலிமையாகவும் இருக்கும்.

முஸ்லிம் தீவிரவாதமாக இருந்தாலும், இந்து தீவிரவாதமாக இருந்தாலும் மத்திய அரசு சகித்துக் கொள்ளாது.

அசாம், மணிப்பூரைத் தவிர, மற்ற வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் குறைந்துள்ளது. உல்பா தீவிரவாதிகள், பேச்சுவார்த்தைக்கு வருவதாக, இன்னும் சில நாட்களில் அரசியல் அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளனர். அவர்கள் வன்முறையைக் கைவிட்டால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது.

காஷ்மீரில், தீவிரவாத சம்பவங்கள் குறைந்துள்ளன. அப்பாவிகளும், பாதுகாப்பு படையினரும் பலியாவது குறைந்துள்ளது. அங்கு பாதுகாப்பு பொறுப்பை மாநில போலீசாரிடம் ஒப்படைத்து விட்டு, மத்திய படைகளை படிப்படியாக வாபஸ் பெற உள்ளோம் என்றார்.

சிதம்பரம் தனது பேச்சின்போது இந்து தீவிரவாதம் என்று குறிப்பிட்டதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். இதையடுத்து அவர்களுக்கும், ப.சிதம்பரத்திற்கும் இடையே கடும் விவாதம் நடந்தது.

பாஜகவினருக்குப் பதிலளித்து ப.சிதம்பரம் பேசுகையில், பாஜகவை திருப்திப்படுத்துவதற்காக எனது வாதத்தை மாற்றிக் கொள்ள முடியாது. எனது வாதம் என்னவென்றால் மதத்தை வைத்து தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவோர் குறித்துதான். அவர்கள் இந்து அமைப்புகளாக இருந்தாலும் சரி, இஸ்லாமிய அமைப்புகளாக இருந்தாலும் சரி. தீவிரவாதத்தை யார் தூண்டினாலும், ஈடுபட்டாலும் பொறுத்துக் கொள்ள முடியாது.

நான் ஒட்டுமொத்த முஸ்லீ்ம்களையும், இந்துக்களையும், அல்லது பிற மதத்தினரையும் குறை கூறவில்லை. மத தீவிரவாத கருத்துக்களைக் கொண்டோர்தான் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், இது மிக முக்கியமான பொருள். நான் இந்த முக்கியமான பிரச்சனையுடன் 24 மணி நேரமும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றார் ப.சிதம்பரம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X