For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மே இறுதியில் மின் வினியோகம் சீராகும்: கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக ஆட்சிக் காலத்தில் கூடுதல் மின் உற்பத்திக்கான முயற்சியைத் தொடங்கி இருந்தால் இப்போது மின்சார தட்டுப்பாடு இருந்திருக்காது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அதே நேரத்தில் மே மாத இறுதியில் மின் வினியோகம் சீரடையும் என்றும் கூறியுள்ளார்.

மின்சார பிரச்சனை குறித்து மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, மின்வாரியத் தலைவர் சி.பி.சிங், எரிசக்தித் துறை செயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார் ஆகியோருடன் முதல்வர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர்
அவர் வெளியிட்ட அறிக்கையில்,

மின் பற்றாக்குறை, மின் வெட்டு ஆகியவை குறித்து நீண்ட நேரம் ஆய்வு நடத்தினேன். மின்வெட்டு காரணமாக தொழில்துறை அதிகமாகப் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சிஐஐயின் முன்னாள் தலைவர் சி.கே.ரங்கநாதனும் இந்த ஆய்வில் பங்கேற்று தொழில் துறை எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறது என்பதை எடுத்துரைத்தார்.

மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போகின்ற நிலையில் மின் உற்பத்தியின் அளவு அதற்கு சமமாக இல்லை. மின் உற்பத்தி என்பதை பொறுத்தவரை நினைத்த நேரத்தில் தொடங்கி விட முடியாது.

அதற்கான முயற்சிகளில் இந்த அரசு ஈடுபட்டு மின் உற்பத்திக்கான திட்டத்தைத் தொடங்கினால் கூட, மின் உற்பத்தி தொடங்கப்பட சில ஆண்டுகள் ஆகும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் அதற்கான முயற்சியைத் தொடங்கி இருப்பார்களேயானால் தற்போது மின் உற்பத்தி கூடுதலாகக் கிடைத்திருக்கும். இந்த உண்மையை உணர்ந்து தான் திமுக அரசு 2006ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு மின் உற்பத்திக்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

ஆனால், அதன் பயன் கிடைக்க இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகும். அத்தகைய தன்னிறைவு ஏற்படும் வரை இப்போதுள்ள பற்றாக்குறையைக் சரிக்கட்ட திமுக அரசு எந்த வகையில் எல்லாம் முயற்சிகளை மேற்கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு தேவையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

ஆனால், நமது பக்கத்து மாநிலங்களும் மின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. வட இந்திய மாநிலங்களிலிருந்து மின்சாரத்தைப் பெற்று தமிழகத்திற்குக் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தாலும் 4,800 மெகாவாட் அளவிற்குத்தான் கொண்டு வர இயலும். இந்த அளவு மின்சாரத்தை இப்போதே வாங்கி, பயன்படுத்தி வருகிறோம்.

மின் பற்றாக்குறையைப் பொறுத்து ஓரளவுக்கு உண்மை என்ற போதிலும் அதை மிகைப்படுத்தி எதிர்க்கட்சிகளின் சார்பில்நாள் முழுவதும் மின் வெட்டு, பற்றாக்குறை என்றெல்லாம் பேசப்படுகிறது. எனவே உண்மை நிலையை நான் விளக்கிட விரும்புகின்றேன்.

இப்போதுள்ள ஏற்பாட்டின்படி தற்போது சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வீட்டு உபயோகிப்பாளர்கள் மற்றும் குறைந்த அழுத்த சிறு மற்றும் குறு தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மின் வினியோகம் செய்யப்படுகிறது.

மின் வெட்டு என்பதே இந்தப் பகுதிகளில் இல்லை என்பது முழுக்க முழுக்க உண்மை.

தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வீட்டு உபயோகிப்பாளர்கள் மற்றும் குறைந்த அழுத்த சிறு மற்றும் குறு தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு 21 மணி நேரம் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதிகளுக்கு பகல் நேரத்தில் மட்டும் சுழற்சி முறையில் 3 மணி நேரம் மின் தடை செய்யப்பட்டு வருகிறது. எனவே நாளொன்றுக்கு 3 மணி நேரம் மட்டும்தான் மின்தடை செய்யப்படுகிறது.

அடுத்து விவசாயப் பயன்பாட்டிற்காக மும்முனை மின்சாரம் பகலில் 6 மணி நேரமும், இரவில் 3 மணி நேரமும் அதாவது நாளொன்றுக்கு 9 மணி நேரம் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகர் தவிர மற்ற இடங்களில் உள்ள உயரழுத்த தொழிற்சாலைகள் மற்றும் உயரழுத்த வணிக நிறுவனங்களுக்கு 70 சதவீதம் மின்சார வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் மற்ற மாநிலங்களில் எந்த அளவிற்கு மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது என்பதையும் விளக்கிட விரும்புகிறேன்.

நமக்குப் பக்கத்து மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் ஹைதராபாத் நகரில் நாளொன்றுக்கு 2 மணி நேரமும், அதன் மற்ற நகரப் பகுதிகளில் 4 மணி நேரமும் கிராமப்புறப் பகுதிகளில் 4 மணி முதல் 8 மணி நேரமும் மின் வெட்டு உள்ளது. தொழிற்சாலைகளுக்கு வாரத்திற்கு கிட்டத்தட்ட நான்கு நாட்களுக்கு மட்டுமே தேவையான மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆந்திரத்தில் விவசாயத்திற்கு 7 மணி நேரம் மட்டுமே மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரையில் பெங்களூர் மாநகரத்தில் நாளொன்றுக்கு 22 மணி நேரமும் மற்ற நகரங்களில் 20 மணி நேரமும், கிராமப் பகுதிகளில் 12 மணி நேரமும் மட்டுமே மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தொழிற்சாலைகளுக்கு 20 மணி நேரமும் விவசாயப் பயன்பாட்டிற்கு 6 மணி நேரமும் மட்டுமே மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொறுத்தவரை மும்பை மாநகரைத் தவிர மற்ற பகுதிகளில் நாளொன்றுக்கு 14 மணி நேரம் மட்டுமே மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயப் பயன்பாட்டிற்கு 8மணி நேரம் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பல வட மாநிலங்களில் மின் வினியோகம் இதை விடக் குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழகத்தின் மின்தேவை 10,500 முதல் 10,800 மெகாவாட் ஆகும். மின்சார வாரியம் மூலம் 9,800 மெகாவாட் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மின்சாரத் தேவையைச் சமாளிக்க 2000 மெகா வாட் மின்சாரம் வெளிச் சந்தையிலிருந்து அதிக விலைக்கு வாங்கி வினியோகம் செய்து வருகிறோம்.

மே மாத இறுதி வாக்கில் காற்றாலைகள் மூலம் அதிக மின் உற்பத்தி செய்யப்படும்போது மின் வினியோகம் சீரடையும்.

மின் பற்றாக்குறை என்பது பல மாநிலங்களிலே, ஏன் இந்தியா முழுவதும் உள்ள பிரச்சனை என்பதை இந்த அறிக்கையிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

எந்த அளவிற்கு இதனைச் சமாளிக்க முடியுமோ அந்த அளவிற்கு சமாளிக்க தமிழக அரசு தன்னால் முடிந்தவரை அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. ஓரளவிற்கு இதனால் தமிழக மக்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டபோதிலும் அதை எவ்வளவு சீக்கிரத்தில் சரி செய்ய முடியுமோ அந்தக் காலத்திற்குள் சரி செய்ய வேண்டுமென்று இன்றைய ஆய்வின்போது அதிகாரிகளுக்கெல்லாம் தெரிவித்திருக்கிறேன்.

பொது மக்களும் இந்த நிலையைப் புரிந்து கொண்டு அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X