For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் தொடர் மழை-பலி எண்ணிக்கை 5 ஆனது

Google Oneindia Tamil News

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள லைலா புயல் சென்னைக்கு வெகு அருகே நிலை கொண்டிருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்து வருகிறது. இடியுடன் கூடிய இந்த மழைக்கு தமிழகத்தில் இதுவரை 5 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தின் வடக்கு கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.

இந்த கன மழைக்கு இதுவரை மின்சாரம் தாக்கியும், இடி தாக்கியும் 5 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னை வேளச்சேரியில் மழை நீரில் அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்த பெண் என்ஜீனியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் ராகவன்பேட்டையில் கேபிள் டிவி வயர் அறுந்து கீழே விழுந்ததில் அதை மிதித்த ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே, டி.வெங்கடாபுரத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (48) என்பவர் நேற்று முன்தினம் மாலை கல்குவாரியில் தொழிலாளர்கள் வெடி வைக்கும் வேலையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது மழை வருவது போல் இருந்ததால் குவாரியில் வைத்த வெடியை எடுத்துக் கொண்டு தொழிலாளர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு சென்று விட்டனர்.

ஆனால், ஒரு வெடியை எடுக்காமல் விட்டு சென்று விட்டனர். இது தெரியாமல் வெடி இருந்த இடம் அருகே சிவசுப்பிரமணியன் நின்று கொண்டு இருந்தார். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. அந்த சமயத்தில் திடீர் என்று கல்குவாரியில் மின்னல் தாக்கியது. இதனால், தொழிலாளர்கள் எடுக்காமல் விட்டு சென்ற வெடி மின்னல் தாக்கியதும் பயங்கரமாக வெடித்தது. இதில் சிவசுப்பிரமணியன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலி ஆனார்.

கரூர் மாவட்டம் கடவூர் நடுக்களத்தை சேர்ந்த பரமசிவத்தின் மனைவி நாகம்மாள் (60). மழைக்காக மரத்தடியில் ஒதுங்கியபோது மின்னல் தாக்கி இறந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஒன்றியத்தில் சூறாவளி காற்றுடன் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மின்கம்பங்கள் சாய்ந்ததில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

செம்பட்டி பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் மின்சார கம்பி ஒன்று அறுந்து ரோட்டில் விழுந்து கிடந்தது. கணேசன் என்பவர் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து பலியானார்.

மதுரை மாவட்டத்திலும் பல இடங்களில் பலத்த சூறைக்காற்று வீசியது. கொட்டாம்பட்டி பகுதியில் முத்து என்பவர் வீட்டில் மின்னல் தாக்கியதில் அவரும், அவரது மனைவி, 2 மகன்கள், மகள் ஆகிய 5 பேரும் மயங்கி விழுந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பள்ளப்பட்டியில் முத்து என்பவர் வீட்டில் மின்னல் தாக்கியதில் வீடு தீப்பிடித்து எரிந்து நாசமானது. தீயை அணைக்க வந்த வண்டி எரிந்து கொண்டிருந்த வீடு அருகே வந்த போது பழுதாகி நின்றது. இதனால் தீயை அணைக்க முடிய வில்லை. பொது மக்கள் தீயணைப்பு வண்டியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

5000 கோழிகள் சாவு:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள கோதூர் கிராமத்தில் சூறைக்காற்று காரணமாக முத்துசாமி என்பவரின் கோழிப்பண்ணையில் இருந்த ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள் அரை கி.மீ.தூரம் பறந்து போய் விழுந்தன. பல ஷீட்டுகள் கோழிப் பண்ணைக்குள் விழுந்ததில் 5 ஆயிரம் கோழிகள் செத்தன. அந்தப் பகுதியில் இருந்த 24 மின்கம்பங்கள் சாய்ந்தன.

இதேபோல மதுரை மாவட்டம் உதினிப்பட்டி என்ற ஊரில் ரபீக் என்பவரது கோழிப்பண்ணையும் சூறைக்காற்றில் நாசமானது. இதில் 1000 கோழிகள் செத்தன. அதே பகுதியில் 4 மின்கம்பங்கள் சாய்ந்ததில் ஊர் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன.

திருப்பூர் மாவட்டத்திலும் பல இடங்களில் இடி, மின்னலுடன் சூறைக்காற்று வீசியது. பல்லடம் அருகே வீசிய பலத்த காற்றில் 5 மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. 150 உயரத்தில் அமைக்கப்பட்ட தனியார் டவர் ஒன்று சாய்ந்து அருகில் இருந்த கோழிப்பண்ணை சேதம் அடைந்தது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கொட்டியது. அப்போது பென்னாகரத்தில் இருந்து தர்மபுரி நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

ஏறுப்பள்ளி என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டிருந்தபோது ரோட்டோரம் இருந்த ஒரு புளிய மரம் வேரோடு சாய்ந்து பஸ் மீது விழுந்தது. இதில் சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

புதுச்சேரியில் நேற்று மாலை 6 மணி முதல் சுமார் 30 நிமிடம் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது.

புயல் எச்சரிக்கை கூண்டுகள்:

லைலா புயல் சென்னை அருகே வந்ததைத் தொடர்ந்து சென்னை, கடலூர், மற்றும் நாகப்பட்டினம் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

புதுச்சேரி, பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X