For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலி என்கெளண்டர்: சிபிஐயை தவறாக பயன்படுத்தவில்லை-பிரதமர்

Google Oneindia Tamil News

Parliament
டெல்லி: பரபரப்பான பிரச்சினைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.

விலைவாசி உயர்வு, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, மமதா பானர்ஜியின் செயல்பாடுகளால் நிலவி வரும் அதிருப்தி, ஸ்பெக்ட்ரம் ஊழல் உள்பட பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு தயாராக உள்ளன.

பாஜகவைப் பொறுத்தவரை சோராபுதீன் போலி என்கெளண்டர் விவகாரத்தில் சிபிஐயை தவறாகப் பயன்படுத்துவதாக கூறி பிரச்சனை எழுப்பவுள்ளது. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வையும் அது கிளப்பும். ரெட்டி சகோதரர்கள் தொடர்பாக காங்கிரஸின் போக்கைக்குக் கண்டனம் தெரிவித்தும் பிரச்சனை எழுப்பலாம்.

விலைவாசி உயர்வு, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவற்றை எழுப்பி புயலைக் கிளப்ப இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகியுள்ளன.

மேலும் தொடர்ந்து நடந்து வரும் ரயில் விபத்துக்கள், மமதா பானர்ஜியின் போக்கு ஆகியவற்றை வைத்து பிரச்சனை எழுப்ப அது முயலும்.

நக்சலைட் பிரச்சனையும் அனலைக் கிளப்பும் எனத் தெரிகிறது. பாகிஸ்தானில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு ஏற்பட்ட அவமானமும் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கலாம்.

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மீதான ஊழல் புகாரை ராஷ்டிரிய ஜனதாதளம், பாஸ்வானின் லோக் ஜன சக்தி ஆகியவை கிளப்பும் எனத் தெரிகிறது.

மகாராஷ்டிர மாநிலத்துடனான எல்லைப் பிரச்சினையை கர்நாடக உறுப்பினர்கள் கிளப்பலாம்.

பாப்லி அணை விவகாரத்தை தெலுங்கு தேசம் கையில் எடுக்கக் கூடும்.

அதேபோல தெலுங்கானா தனி மாநிலம் தொடர்பாக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அமளியை ஏற்படுத்தலாம்.

இந்தக் கூட்டத் தொடரில் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக திமுகவுக்கு நெருக்கடி தரும் வகையில் அதிமுக செயல்படும் எனத் தெரிகிறது. அதேசமயம், காங்கிரஸுக்கு நெருக்கடி தரும் வகையில் அது நடந்து கொள்ளாது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில்தான் அவர் மெயின் கேள்விகளுக்கு பதிலை ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு படிக்கலாம் என சபாநாயகர் மீரா குமார் தீர்வை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 27ம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும். எதிர்க்கட்சிகள் கிட்டத்தட்ட ஓரணியில் திரண்டு நிற்பதால் சபைக் கூட்டங்கள் எப்படி நடக்கப் போகின்றனவோ என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது.

சிபிஐயை தவறாக பயன்படுத்தவில்லை-பிரதமர்:

இந் நிலையில் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மன்மோகன் சிங் நிருபர்களிடம் பேசுகையில்,

குஜராத் அமைச்சர் அமீத் ஷா கைது செய்யப்பட்டதற்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சிபிஐ தன் கடமையை செய்துள்ளது. சிபிஐயை நாங்கள் தவறாகப் பயன்படுத்தவில்லை.

சோராபுதீன் என்கெளண்டர் வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நடந்து வந்தது. இது எதிர்க்கட்சிகளுக்கு நன்றாகவேத் தெரியும். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படிதான் சிபிஐ செயல்பட்டு வருகிறது. இதில் மத்திய அரசுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடர் அமைதியாகவும், பயனுள்ள வகையிலும் நடைபெறும் என்று நம்புகிறேன். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல முக்கிய விஷயங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

எல்லா பிரச்சனைகள் மீதும் விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்றார்.

முதல் நாள் கூட்டம் ஒத்திவைப்பு:

இந் நிலையில் மறைந்த உறுப்பினர்கள், முன்னாள் எம்பிக்களூக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடாளுமன்றத்தின் முதல் நாள் கூட்டம் இன்று ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக ராஜ்யசபா கூடியதும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்களா லோக் ஜன் சக்தித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், பாஜகவைச் சேர்ந்த ராஜீவ் பிரதாப் ரூடி உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.

பின்னர் இரு அவைகளிலும் முன்னாள் ஜனாதிபதி பைரோன் சிங் செகாவத், பிகார் மாநில மூத்த அரசியல் தலைவர் திக்விஜய் சிங் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மே மாதம் 22ம் தேதி நடந்த மங்களூர் விமான விபத்தில் பலியானவர்கள், கடந்த மாதம் சட்டீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பலியான வீரர்கள், கடந்த 22ம் தேதி மேற்கு வங்காளத்தில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

கார்கில் போரின் 11ம் ஆண்டு தினமும் அனுசரிக்கப்பட்டது.

பின்னர் இன்றைய கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X