தமிழக திட்டங்கள் தொடர்பான ஆலோசனை-திமுக,அதிமுக பங்கேற்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழகத்திற்குத் தேவையான திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்புவது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து தமிழக கட்சிகளின் எம்.பிக்களும் கலந்து கொண்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தினர்.

தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்து எம்.பி.,க்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கூட்டத்தில் முதன்முறையாக தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளின் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

டெல்லியில் உள்ள இந்திய ஹேபிடேட் சென்டரில் இந்த கூட்டம் நடைபெற்றது. கனிமொழி தலைமையில் தி.மு.க. எம்.பி.,க்களும், தம்பிதுரை சார்பில் அ.தி.மு.க. எம்.பி.,க்களும், தமிழக காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்.பி.,க்களும் கலந்து கொண்டனர். எதிரும் புதிருமாக உள்ள திமுக, அதிமுக எம்.பிக்கள் ஒற்றுமையாக கலந்து கொண்டது அனைவரையும் கவர்ந்தது.

தம்பித்துரை பேசுகையில், கேரளா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.,க்கள் தங்களது மாநில பிரச்னை என்றால் ஒற்றுமை காட்டுகின்றனர். அதுபோல முதன்முறையாக தமிழக எம்.பி. க்கள் அனைவரும் ஒற்றுமை காட்டுவது வரவேற்கத்தக்கது. நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் உள்ளோம். தி.மு.க.விலும் எம்.பி.க்கள் நினைத்தாலும் கூட முடியாது. நல்ல இலாகாக்கள் இருந்தால் மட்டுமே மத்திய அரசிடமிருந்து திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்றார்.

கனிமொழி பேசுகையில், இதுபோன்ற முயற்சிகளை மேலும் வலுப்படுத்த, டில்லியிலேயே ஒரு அலுவலகம் கூட திறக்கலாம். தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் குறித்து என்ன மாதிரியான உதவிகள் வேண்டுமென்றாலும் எம்.பி.,க்களாகிய நாங்கள் முடிந்த வரை உதவி செய்ய தயார்' என்றார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் ராமசுப்பு பேசுகையில், தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மதுரை - தூத்துக்குடி இரட்டைப் பாதை மற்றும் விழுப்புரம்- திண்டுக்கல் இரட்டைப் பாதை ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றார்.

பின் தமிழகத்திற்குத் தேவையான திட்டங்களை தொழில் கூட்டமைப்பினர் எம்.பிக்களுக்கு விளக்கினர். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் உரிய முறையில் எழுப்பி ஆவண செய்வதாக எம்.பிக்கள் உறுதியளித்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...