வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் பேசிக்கொண்டே இருக்கலாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
BSNL
சென்னை: தமிழ்நாட்டில், வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு, இலவச செல்போனுடன், வாழ்நாள் முழுவதும் பேசும் வகையிலான மொபைல் இணைப்பை, பி.எஸ்.என்.எல். வழங்குகிறது.

இந்தத் திட்டம் கோவை மாவட்டம் அவினாசியில் வரும் 18-ந் தேதி தொடங்குகிறது.

தமிழகத்தில் திமுக அரசு ஏராளமான இலவசத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்தப் பாணியை இப்போது மத்திய அரசும் பின்பற்றத் துவங்கியுள்ளது. சமீபத்தில் கூட தமிழக அரசின் இலவச எரிவாயு - அடுப்புத் திட்டத்தை நாடு முழுக்க அமலாக்கப் போவதாக அறிவித்தது.

இதைத்தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் வழிகாட்டுதலின் பேரில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு, வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை மக்களுக்கு இலவசமாக செல்போனும், பிஎஸ்என்எல் செல்போன் இணைப்பும் திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தில், வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு, எல்.ஜி. செல்போனும், அதற்கான பிரி-பெய்டு இணைப்புக்கான 'சிம்' கார்டும் இலவசமாக வழங்கப்படும். வாழ்நாள் முழுவதும், வெளியில் இருந்து வரக்கூடிய அழைப்புடன் பேசிக்கொண்டே இருக்கலாம்.

இந்தத் திட்டத்தை, ராஜஸ்தான் மாநிலம் பாகியில், கடந்த 9-ந் தேதி பி.எஸ்.என்.எல். தலைவர் கோபால்தாஸ் தொடங்கிவைத்தார்.

தமிழ்நாட்டில் இந்தத் திட்டம் திருப்பூர் மாவட்டம், அவினாசியில், 18-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. அவினாசி, பாலங்கரையில் உள்ள 'இந்தியா நிட்பேர் வளாக'த்தில் இதற்கான விழா நடக்கிறது.

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆ.ராசா திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

அதிகாரிகள் அதிருப்தி...

ஆனால் இந்தத் திட்டத்துக்கு பிஎஸ்என்எல் அதிகாரிகள் மட்டத்தில் பெரும் அதிருப்தி நிலவுகிறது.

"ஏழை மக்களுக்கான இது போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கதுதான். ஆனால் தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு இந்த திட்டத்தின் கீழ் இலவச செல்போனுடன் மொபைல் இணைப்பு தரப்படும் என்பது தெரியவில்லை. இந்த மாதிரி திட்டத்தில், தனியார் தொலைபேசி நிறுவனங்களையும் இணைத்திருக்க வேண்டும். லாபம் தரும் திட்டங்களை தனியாருக்கு தாரைவார்த்து விட்டு, சுமையை மட்டும் பொதுத்துறை ஏற்பது எந்த வகையில் நியாயமாகும்?

ஸ்பெக்ட்ரம் கட்டணம், லைசென்ஸ் கட்டணம் என்று அரசுக்கு செலுத்தவேண்டிய கட்டணங்களை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் கறாராக கேட்டு வாங்குகிறார்கள். தனியாரிடம் கடுமையாக கேட்கும் பட்சத்தில் அவர்கள் கோர்ட்டுக்கு போய்விடுகிறார்கள். அரசு இதையும் பரிசீலிக்க வேண்டும்.." என்கிறார்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...