For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட உயர் நீதிமன்றம் உத்தரவு

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை உடனடியாக மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த ஸ்டெர்லைட் நிறுவனம், தூத்துக்குடி மீளவிட்டானில் உள்ள சிப்காட் வளாகத்தில் தாமிர உருக்கு ஆலையை அமைத்தது.

இந்த ஆலையினால் ஏற்படும் தாமிர மாசினால் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இந்த ஆலைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதை எதிர்த்து சுத்தமான சுற்றுச்சூழலுக்கான தேசிய அறக்கட்டளை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

கடந்த 1996, 1997, 1998ம் ஆண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக இது தொடர்பாக ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் இந்த வழக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தன்னை இணைத்துக் கொண்டது.

அனைத்து மனுக்களும் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டு வந்தன. இதன்மீது நீதிபதிகள் எலீப் தர்மாராவ், என். பால்வசந்தகுமார் ஆகியோர் வெளியிட்ட தீர்ப்பு:

ஸ்டெர்லைட் தொழிற்சாலை ஏற்படுத்தும் பாதிப்புகளைக் கருத்தில் கொள்ளாமல் மத்திய, மாநில அரசுகள், மாசுகட்டுப்பாடு வாரியம் ஆகியவை இந்த நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியுள்ளன.

தூத்துக்குடி அருகில் உள்ள 21 தீவுகள் தேசிய கடல் பூங்காவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இத்தகையப் பகுதிகளைப் பாதுகாப்பது மத்திய அரசின் கடமை.

சுற்றுச்சூழலை எளிதில் பாதிக்கக் கூடிய இத்தகைய நிறுவனம் இந்தப் பகுதியில் இருந்து 25 கி.மீ. தூரத்துக்கு அப்பால்தான் அமைக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை இந்த விஷயத்தல் மீறப்பட்டுள்ளது.

எங்களிடம் உள்ள ஆவணங்களை பார்க்கும்போது, குறைபாடுகளுடன் தயாரிக்கப்பட்ட இ.ஐ.ஏ. அறிக்கையின் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இதுபோன்ற ஆலைக்கு அனுமதியை வழங்கியுள்ளன என்று தெரிகிறது. பல அம்சங்களை வைத்து பார்க்கும்போது, ஆலைக்கு அனுமதி வழங்குவதில் மத்திய அரசு தனது மனதை செலுத்தவில்லை என்பது தெளிவாகிறது

ஸ்டெர்லைட் நிறுவனம் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளை காற்றில் பறக்கவிட்டுள்ளது. இதை அந்த நிறுவனத்துக்கு அனுமதி அளிப்பதற்கு முன், மத்திய அரசு கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் அந்த நிறுவனத்துக்கான அனுமதியை அப்போதே நிராகரித்திருக்கலாம்.

இந்த தொழிற்சாலை முதலில் குஜராத், கோவா, மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் தொடங்க திட்டமிடப்பட்டு, அங்கு உள்ளூர் மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இறுதியில் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கும் உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இந்த ஆலையை அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் கூட நடத்தப்படவில்லை. சட்டத்தை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டனர்.

ஆலையை சுற்றி அமைக்கப்பட வேண்டிய பசுமைப் பகுதியின் அளவை குறைக்கும்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஆலை வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்படி ஒரு தாராள மனம் காட்டுவதற்கு என்ன காரணம்?. அதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

சுற்றுப்புறசூழல் விவகாரத்தில் சிகப்பு வட்டத்துக்குள் வரும் இந்த ஆலைக்கு அனுமதி வழங்குவதில் மிகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும்.

2005ம் ஆண்டில் நீரி அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, அந்த ஆலையில் இருந்து வெவ்வேறான மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் கழிவுகள் வெளியேறுவதாக கூறப்பட்டுள்ளது. ஆர்செனிக் போன்ற மோசமான வேதிப் பொருளும், எலும்பு, பற்களை எல்லாம் அழிக்கக்கூடிய புளோரைடு அங்கிருந்து வெளியேறுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. வெளியில் மட்டுமல்ல, அந்த ஆலையின் உள்ளேயும் கடுமையான மாசு ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலையை சுற்றியுள்ள இடங்கள் இந்த ஆலையின் கழிவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன என்பதும் அந்தப் பகுதியில் உள்ள நிலத்தடி நீரில் ரசாயன பொருள்கள் கலந்து, அதனால் குடிநீரின் தரம் குறைந்துள்ளது என்றும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை மூலம் உறுதியாகிறது.

நிலத்தடி நீரை ஆராய்ந்தால், தாமிரம், குரோமியம், ஈயம், காட்மியம், ஆர்செனிக், குளோரைடு, புளோரைடு ஆகியவை அளவுக்கும் மிக அதிகமாக கலந்திருப்பதும் தெரிய வந்தது.

காற்று, நீர் போன்ற வாழ்வாதாரங்களை மாசுபடுத்தும் நடவடிக்கைகளை நீதிமன்றம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது. நீர்நிலைகளையும் காற்றையும் யார் மாசுபடுத்தினாலும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஆலை வெளியேற்றும் மாசினால் மக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமான மாசுபடுதலை ஆலை உருவாக்கியது என்பதும் ஆவணங்கள் மூலம் தெரிகிறது. எனவே இப்போதாவது அது நிறுத்தப்பட வேண்டும். அதன் மூலம் இயற்கை அன்னையை காப்பாற்ற வேண்டும்.

இந்த ஆலை வெளியில் மாசை ஏற்படுத்தியது மட்டுமல்ல, அங்கு பணியாற்றும் ஊழியர்களின் சுகாதாரத்தையும் நேரடியாக பாதிக்கச் செய்துள்ளது. இந்த ஆலையை மூடச் சொல்வதன் மூலம் அங்குள்ள ஊழியர்களுக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும். ஆனால் ஆலையை உடனடியாக மூடுவதற்கு உத்தரவிடுவதைத் தவிர வேறு வழியில்லை.

சுற்றுப்புற சூழலை பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியில் இதுபோன்ற ஆலையை வைத்துக் கொண்டு, அரசு கூறும் காரணங்களை நீதிமன்றம் ஏற்காது. அதே நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றும் ஊழியர்களின் எதிர்காலத்தை நாங்கள் விட்டுவிடவில்லை.

அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களும், தொழிற்சாலை சட்டத்தின் 25-எப்.எப்.எப். பிரிவின்படி, அந்த ஆலையில் இருந்து நஷ்டஈட்டைப் பெற தகுதியுடையவர்கள்.

அந்த ஊழியர்களுக்கு பிற இடங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தர தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மற்ற தொழிற்சாலைகள், நிறுவனங்களில் அவர்களின் கல்வித் தகுதி, தொழில்நுட்ப தகுதி, அனுபவம் போன்றவற்றை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்து, அவர்களின் ஜீவாதாரம் வழங்க வேண்டும்.

குடிமக்களின் நலனைக் காப்பதில் மத்திய, மாநில அரசுகள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்களை தடுத்து நிறுத்த அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X