For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்-ரத்தன் டாடாவுக்கு சில கேள்விகள்

By Chakra
Google Oneindia Tamil News

Rajeev Chandrasekhar
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினரான ராஜீவ் சந்திரசேகர் டாடா நிறுவன அதிபர் ரத்தன் டாடாவுக்கு ஒரு திறந்த கடிதம் அனுப்பியுள்ளார். அதன் விவரம்:

அன்புள்ள டாடா,

2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாகவும், நீரா ராடியா டேப்கள் தொடர்பாகவும் தாங்கள் சமீப காலமாக தொலைக்காட்சிகளுக்கு அளிக்கும் பேட்டிகளும், பத்திரிக்கை அறிக்கைகளும் சற்றே குழப்பத்தையும், கவலையையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

எண்ணற்ற இந்தியர்களைப் போல நானும் உங்களை மிகவும் உயரிய இடத்தில் வைத்திருக்கிறேன், மதிக்கிறேன். மற்ற இந்திய நிறுவனங்களை விட டாடாவுக்கு தனி இடம் கொடுத்து வைத்திருக்கிறேன். நவீன இந்தியாவின் மிகப் பெரிய சிற்பிகளில் ஒருவர் ஜேஆர்டி டாடா என்பதில் கோடானுகோடி இந்தியர்கள் நினைப்பதைப் போல நானும் கருதுகிறேன்.

எனவே இந்த பகிரங்க மடலை உங்களுக்கு விடுக்கிறேன்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைமுறைகள், அதுதொடர்பான கொள்கை உள்ளிட்டவை குறித்து நீங்கள் பல கருத்துக்களை முன்வைத்துள்ளீர்கள். நானும், மற்ற இந்தியர்களும், மீடியாக்களும் பல காலமாக சொல்லி வந்த கருத்துக்களைத்தான் நீங்கள் மிகவும் காலதாமதமாக சொல்லியுள்ளீர்கள். இருப்பினும் இப்போதாவது அதை நீங்கள் உணர்ந்தது மகிழ்ச்சிதான்.

நமது நாட்டை' பனானா' நாடு என்று நீங்கள் கூறியிக்கிறீர்கள். பொதுமக்களுக்கான கொள்கை உருவாக்கம் குறித்து கவலை தெரிவித்துள்ளீர்கள். அதில் நானும் பங்கேற்கிறேன். ஆனால் இது குறித்து நீங்கள் முன்பே கவலை தெரிவித்திருந்தால், தலையிட்டிருந்தால் அதை நான் வரவேற்றிருப்பேன். ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 15 கோடி லஞ்சம் கேட்டதையே இப்போதுதான் நீங்கள் கூறியுள்ளீர்கள். ஒரு லஞ்சப் புகாரை உடனே கூறினால்தான் அதற்கு வலு இருக்கும் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

இந்த விவாதத்தில் நானும் பங்கேற்க விரும்புகிறேன். உங்களது நிலைக்கும், உங்களது நிறுவனத்திற்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதே இதற்குக் காரணம்.

முதலில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு. மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கைப்படி, அரசுக்கு 3ஜி ஏல கட்டணத்தின் அடிப்படையில், 2ஜி இரட்டை தொழில்நுட்பம் தொடர்பான உரிமத்தின் மூலம் ரூ. 37,154 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உங்களது நிறுவனத்தால் மட்டும் நாட்டுக்கு ரூ. 19,074.8 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையின் அடிப்படையில் இதைச் சொல்கிறேன்.

இத்தோடு இது நிற்கவில்லை. உண்மையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் டாடா குழுமம்தான் அதிக பலன் அடைந்துள்ளது. அதை விட முக்கியமாக, அனைவரையும் விட டாடா குழுமம்தான் மிகப் பெரிய அளவில் ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளது. இதை அரசின் அபிடவிட்டும் கூட நிரூபிக்கிறது.

ஒரு பத்திரிக்கைக் குறிப்பின் மூலம் இரட்டைத் தொழில்நுட்ப கொள்கையை அறிவித்தார் முன்னாள் அமைச்சர் ராஜா. அக்டோபர் 22ம் தேதி வாக்கில் டாடா நிறுவனம் தனது இரட்டை தொழில்நுட்ப உரிமத்திற்கான விண்ணப்பத்தை அளித்தது. 2ஜி உரிமம் கோரி 575 நிறுவனங்கள் விண்ணப்பித்த பின்னர் உங்களது நிறுவனம் விண்ணப்பத்தைக் கொடுத்தது.

இன்று டாடா நிறுவனத்திற்கு ஜிஎஸ்எம் ஸ்பெக்ட்ரம் கிடைத்து, சேவையையும் பல பகுதிகளில் தொடங்கி விட்டது. ஆனால் டாடாநிறுவனத்திற்கு முன்பே விண்ணப்பித்த 343 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டு விட்டன. அவை பரிசீலிக்கப்படக் கூட இல்லை. இதுதான் முதலில் வருவோருக்கு முதலில் அனுமதி என்ற கொள்கையோ?.

லேட்டாக வருவோர் தனி 'கியூ' வரிசையை ஏற்படுத்தி முந்திக் கொண்டு முதல் ஆளாக போய், முன்கூட்டியே வந்தவர்களைப் பார்த்து நீங்கள்தான் தாமததித்து விட்டீர்கள் என்று குற்றம் சாட்டுவது போல உள்ளது இது.

அடுத்து நீங்கள் சொல்லியுள்ள இன்னொரு விஷயத்திற்கு வருகிறேன். பழைய டெலிகாம் நிறுவனமோ அல்லது புதிய நிறுவனமோ, யாராக இருந்தாலும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கு மார்க்கெட் ரேட் தர வேண்டும் என்று நீங்கள் கூறியுள்ளதை நான் ஒத்துக் கொள்கிறேன். மேலும் வாடிக்கையாளர்கள் பலம் அடிப்படையில் ஒதுக்குவதில் பல தவறுகள் நடக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளதையும் ஏற்கிறேன். ஆனால் இதுதான் தற்போதைய அரசின் கொள்கையாக உள்ளது. இதை நீங்கள் அறிவீர்களா?.

டாடா இப்போது வைத்துள்ள ஸ்பெக்ட்ரம் அலைவரிசையின் எண்ணிக்கையை சற்றுப் பாருங்கள். அதன் சராசரி திறனானது, மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களின் திறனை விட மிகவும் குறைவானதாகும். மேலும், டாடா வைத்துள்ள சிடிஎம்ஏ ஸ்பெக்ட்ரமானது, பிற ஜிஎஸ்எம் ஆபரேட்டர்களை விட 3-4 மடங்கு அதிக திறன் வாய்ந்ததாகும்.

எல்லாவற்றையும் விட 2001 கட்டண அடிப்படையில்தான் டாடா தனது சிடிஎம்ஏ, ஜிஎஸ்எம் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையைப் பெற்றுள்ளது.

கொள்கைக் குளறுபடிகள் குறித்தும் நீங்கள் கூறியுள்ளீர்கள். தொலைத் தொடர்புத்துறையின் நடப்பு செயலற்ற போக்கால் பல்வேறு கொள்கைகள் மாறிப் போயுள்ளன, பல குளறுபடிகள் காணப்படுகின்றன என்று கூறியுள்ளீர்கள்.

ஆனால் 2001லும், பின்னர் 2003லும் இதேபோன்ற குழப்பமான, குளறுபடியான கொள்கையை மத்திய தொலைத் தொடர்புத்துறை நடைமுறைப்படுத்தியபோது -எங்குமே கேட்டறியாத முதலில் வருவோருக்கு முதலில் உரிமம் என்பது உள்பட - அதை எல்லோருமே எதிர்த்தார்கள். ஆனால் இந்தக் குளறுபடிகளால் அதிகம் பலனடைந்தது சாட்சாத் டாடா குழுமம்தான். அப்போது அதன் பலன்களை நீங்கள் வரவேற்றீர்கள். ஆனால் இன்று குறை கூறுகிறீர்கள்.

எனவே சமீப காலமாக நீங்கள் அளித்த, அளித்து வரும் பேட்டிகள், பேச்சுக்கள், உங்களது முந்தைய செயல்களுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாதவையாக உள்ளன. பொருத்தமற்றவையாக உள்ளன என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். நீங்கள் இப்போது குறை கூறும் அனைத்தையும் நீங்கள் முன்பே ஏற்றுக் கொண்டுள்ளீர்கள் என்பதையும் கூற விரும்புகிறேன்.

அதை விட மேலாக டாடா குழுமம் என்ற ஒரு மிகப் பெரிய நிறுவனம் ஏன் வெளியிலிருந்து ஒருவரை தனக்கு ஆதரவாக சிபாரிசு செய்ய ஏற்பாடு செய்தது என்பது வியப்புக்குரிய ஒன்று. இதுவே சாதாரணர்கள் உங்கள் குழுமம் மீது வைத்துள்ள நம்பிக்கையை சிதறடிக்கப் போதுமானதாகும்.

டாடா குழுமத்தை அவதூறாக சித்தரிக்கவோ அல்லது மதிப்புக்குறைத்துக் காட்டும் முயற்சியாகவோ இதை நான் கூறவில்லை. ஆனால் உண்மையின் மீது வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியது, டாடாவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தவன் என்ற முறையில் எனது கடமையாகும்.

டாடா குழுமத்திற்கென்று மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. இந்தியர்களின் இமேஜாக விளங்கும் ஒரு சாம்ராஜ்யம் டாடா குழுமம். அது முதலில் தெளிவான, விதிமுறைகளுக்குட்பட்ட நடத்தையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை அத்தனை இந்தியர்களும் எதிர்பார்க்கிறார்கள் என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

அன்புடன்,
ராஜிவ் சந்திரசேகர்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடிதத்தின் முழு விவரம் காண: http://www.rajeev.in/

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X