For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2010ம் ஆண்டில் தமிழகம்-ஒரு 'பிளாஷ்பேக்'!

By Chakra
Google Oneindia Tamil News

ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தை விட படு விறுவிறுப்பாக ஓடி முடிந்துள்ள 2010ம் ஆண்டு தமிழகத்திலும் தனது பாதிப்பை விட்டுச் செல்லத் தவறவில்லை. வருடத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை பரபரப்புக்கு பஞ்சமே இல்லை.

ஆண்டு முழுவதும் பல பரபரப்பு சம்பவங்கள், திருப்பங்கள், அதிரடிகள் என விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லை. 2010ம் ஆண்டில் தமிழகத்தில் நடந்த பல்வேறு முக்கியச் சம்பவங்களின் ஒரு தொகுப்பு...

சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் படுகொலை

ஆண்டின் தொடக்கத்திலேயே தமிழகத்தை அதிர வைத்தது நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள ஆம்பூர் கிராமத்தில் நடந்த ஒரு படுகொலைச் சம்பவம். இப்படிக் கொடூரமான மரணம் யாருக்கும் வரக் கூடாது என்று அனைவரும் பதறிய சம்பவம் அது.

ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருந்தவர் வெற்றிவேல். இவர் மோட்டார் சைக்கிளில் ஆம்பூர் அருகே சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த ஒரு கும்பல் கொடூரமாக குண்டுகளை வீசியும், சரமாரியாக அரிவாள்களாலும் வெட்டித் தள்ளியது.

வீழ்த்தப்பட்ட வெற்றிவேல் நடுச் சாலையில் உயிருக்குப் போராடினார். மீட்க யாரும் வராததால் பரிதாபமான நிலையில் தவித்தார். அப்போது தமிழக அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், மைதீன் கான் ஆகியோர் அந்த சாலை வழியாக காரில் அதிகாரிகள், போலீஸார் புடை சூழ வந்தனர். ஆனால் உயிருக்குத் துடித்துக் கொண்டிருந்த வெற்றிவேலை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பாமல் வேடிக்கை பார்த்ததாக பெரும் சர்ச்சை வெடித்தது.

பின்னர் வெற்றிவேல் பரிதாபமாக உயிரிழந்தார். தமிழகத்தைப் பதற வைத்த பரபரப்புச் சம்பவம் இது. கடைசியில் இந்த கொலையே ஆள்மாறாட்டத்தில் நடந்ததாக தெரிய வந்து அனைவரும் வெற்றிவேலுக்காக பரிதாபப்பட்டனர் (ஜனவரி 7)

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு. பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்திய மாநாடு. முதலில் உலகத் தமிழ் மாநாடாக இது அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில் சில சிக்கல்கள் வரவே, அதிரடியாக செயல்பட்ட முதல்வர் கருணாநிதி, உலகத் தமிழ் செம்மொழி மாநாடாக அறிவித்தார்.

ஜூன் 23ம் தேதி கோவையில் தொடங்கிய இந்த மாநாடு 27ம் தேதி முடிவடைந்தது. மிகவும் கோலாகலமாக நடந்த இந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையை மட்டுமல்லாமல் உலகத் தமிழர்களின் மனங்களையும் வெகுவாக கவர்ந்தது. பிரமாண்டமான வாகன அணிவகுப்பு, கோலாகலமான கலைநிகழ்ச்சிகள், சிந்தனையைத் தூண்டிய கருத்தரங்குகள் என இந்த மாநாடு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இது அரசியல் உள்நோக்கத்துடன் கூடிய மாநாடு என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியபோதிலும், மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தியது திமுக அரசு என்பதில் சந்தேகமே இல்லை.

விடைபெற்றார் நரேஷ் குப்தா

தமிழகத் தேர்தல் களத்தை படு சூடாக்கியவர் நரேஷ் குப்தா. பார்க்க நாகேஷ் போல (உருவத்தில்) இருந்தாலும் அவரை அத்தனை அரசியல் தலைவர்களும் நம்பியார் போலத்தான் பார்த்தார்கள். அந்த அளவுக்கு யாருக்கும் அடிபணியாமல், யாரைக் கண்டும் பயப்படாமல், யாரையும் கண்டு கொள்ளாமல் தான் உண்டு, தனது வேலை உண்டு என்று இருந்தவர் நரேஷ் குப்தா. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக செயல்பட்ட அவரது காலத்தில் அத்தனை கட்சியினரின் அதிருப்தியையும் சம்பாதித்தார். இவர் பேசாமல் மாடு மேய்க்கப் போகலாம் என்று கூட டாக்டர் ராமதாஸ் கடுமையாக சாடினார்.

இப்படி அத்தனை கட்சியினரின் அதிருப்தியை வாரிக் கட்டிக் கொண்டாலும் கூட மக்கள் மத்தியில் நரேஷ் குப்தாவுக்கு நல்ல பெயர் இருந்தது. யாருக்கும் அடிபணியாதவர் என்ற பெயரும் கிடைத்தது. இப்படி செயல்பட்டு வந்த நரேஷ்குப்தாவின் தேர்தல் காலம் தமிழகத்தில் முடிவடைந்த ஆண்டு இது. புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக பிரவீன் குமார் நியமிக்கப்பட்டார். (ஜூலை 27)

நடிகர் ஜெயராம் வீட்டுக்குத் தீவைப்பு

சற்றும் எதிர்பாராத சர்ச்சையில் சிக்கினார் நடிகர் ஜெயராம். பிறப்பால் தமிழ் மலையாளியான இவர், தமிழகத்திலும் சரி, மலையாளத்திலும் சரி நல்ல அன்புடன் பார்க்கப்பட்ட நடிகர்களில் ஒருவர். மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த வென்ற வெகு சில நடிகர்களில் ஜெயராமுக்கு முக்கிய இடம் உண்டு. ஆனால் ஒரே ஒரு பேட்டியால் ஒட்டுமொத்த தமிழர்களின் அதிருப்தியையும் சம்பாதித்துக் கொண்டார் ஜெயராம். தமிழ்ப் பெண்களின் நிறம் குறித்து இவர் மலையாள டிவி சானலுக்கு அளித்த ஒரு பேட்டியால் பெரும் கொந்தளிப்பு வெடித்தது. சென்னையில் உள்ள ஜெயராமின் வீடு அதிரடியாகத் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டது. இதில் அவர் வாங்கிய விருதுகள், அவரது மகன் வாங்கிய முதல் தேசிய விருது ஆகியவை கருகிப் போன சோகம் நடந்தது. தமிழகத்தை அதிர வைத்த சம்பவங்களில் நிச்சயம் இதற்கும் ஒரு இடம் உண்டு. (பிப்ரவரி 5)

ஜெ.வுக்கு வந்த சரமாரி மிரட்டல் கடிதங்கள்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு வந்த சரமாரி கொலை மிரட்டல் கடிதங்களால் தமிழகமே குழம்பிப் போனது, அரசியல் வட்டாரம் பரபரப்பானது. யாருக்கும், இதுவரை வராத அளவுக்கு தினசரி நான்கு கொலை மிரட்டல்கள் என வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சரமாரியாக வந்த இந்த கொலை மிரட்டல் கடிதங்களால் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் பெரும் தர்மசங்கடமானது. அடுத்தடுத்து வந்த கடிதங்களால் அதிர்ச்சி அடைந்த அதிமுக தரப்பு பிரதமர் மன்மோகன் சிங் முதல் தமிழக டிஜிபி வரை அனைவரிடமும் மனு கொடுத்தது.

நிலைமை சீரியஸாவதை உணர்ந்த தமிழக அரசு இந்த விவகாரத்தை சிபிஐக்கு மாற்ற முடிவு செய்தது. ஆனால் இதுவரை சிபிஐ விசாரணைக்கு விடப்படவில்லை. அதேபோல இந்த மிரட்டல் கடிதங்களை அனுப்பியது யார் என்பதும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (செப்டம்பர் 28).

டிஜிபி லத்திகா சரண் நியமனம் செல்லாது

தமிழக டிஜிபியாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. தீயணைப்புப் படைப் பிரிவு டிஜிபி நடராஜ்தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், லத்திகா சரண் நியமனத்தில் உச்சநீதிமன்றம் வகுத்த வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்று உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியது. புதிய டிஜிபியை தேர்வு செய்யவும் அது உத்தரவிட்டது. (அக்டோபர் 8)

பரபரப்பு கடத்தல்கள்

2010ம் ஆண்டில் தமிழகத்தை அதிர வைத்த முக்கியச் சம்பவங்களில் ஒன்று - பரபரப்பு கடத்தல்கள், அதிர வைத்த கொலைகள்.

கோவையில் நவம்பர் 2ம் தேதி முஷ்கின் என்ற 11 வயது சிறுமியும், 9 வயதான அவளது தம்பி ரித்திக்கும் மோகனகிருஷ்ணன், மனோகரன் ஆகியோரால் கடத்திச் செல்லப்பட்டனர். பின்னர் காட்டுக்குள் வைத்து முஷ்கினை பாலியல் பலாத்காரம் செய்தனர் இந்த கொடூரர்கள். அதன் பின்னர் அக்காவையும், தம்பியையும் பிஏபி கால்வாயில் தள்ளி விட்டு விட்டனர். மிகவும் அதிர்ச்சிகரமான இந்த சம்பவத்தால் தமிழகமே அதிர்ந்து போனது. குற்றவாளிகளில் ஒருவரான மோகன கிருஷ்ணன் நவம்பர் 9ம் தேதி கோவை அருகே என்கவுன்டர் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டான்.

அதேபோல சென்னையில் கீர்த்திவாசன் என்ற சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் ஒரு ஹாலிவுட் சினிமாவை மிஞ்சும் வகையில் பரபரப்பு நிகழ்வுகளுடன் முடிவடைந்தது. நவம்பர் 3ம் தேதி கடத்தப்பட்டான் கீர்த்திவாசன். அவனை மீட்க போலீஸார் நடவடிக்கையில் குதித்தனர். ரூ 1 கோடி கொடுத்தால் விடுவிக்கிறோம் என்று கடத்தல்காரர்கள் சொல்ல, அதன்படி பணம் கொடுக்கப்பட்டது. போலீஸார் கடத்தல்காரர்களை அப்போதே பிடிக்காமல் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். பணமும் பத்திரமாக மீட்கப்பட்டது. மிக அழகாக ஸ்கெட்ச் போட்டு இரு கடத்தல்காரர்களையும் பிடித்தது சென்னை போலீஸ். 2 நாட்கள் நடந்த இந்த சம்பவம் சென்னையை மட்டுமல்லாமல் தமிழகத்தையும் அதிர வைத்தது.

இந்த இரு சம்பவங்களும்தான் 2010ம் ஆண்டின் பரபரப்பு குற்றச் சம்பவங்களில் முக்கியமானவை. இவை தவிர பெருமளவில் நடந்த கடத்தல் சம்பவங்கள், பல்வேறு கொலைச் சம்பவங்களும் 2010ம் ஆண்டை அனல் பறக்க வைத்த பிற நிகழ்வுகள்.

புதிய சட்டசபைத் திறப்பு

நீண்ட நெடுங்காலமாக தமிழக சட்டசபையாக விளங்கி வந்த புனித ஜார்ஜ் கோட்டைக்கு மார்ச் 13ம் தேதி விடை கொடுத்தது தமிழக அரசு.

முதல்வர் கருணாநிதியின் பெரும் கனவுகளில் ஒன்றாக சென்னை அரசினர் தோட்ட வளாகத்தில் கட்டப்பட்டது பிரமாண்ட புதிய சட்டசபைக் கட்டடம். வித்தியாசமான வடிவமைப்புடன் கூடிய இந்த கட்டடத்தை மார்ச் 13ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

தென்னகத்தில் இப்படி ஒரு பிரமாண்ட சட்டசபைக் கட்டடம் இல்லை என்று கூறும் அளவுக்கு கலையழகுடனும், நவீனத்துடனும் விளங்குகிறது புதிய சட்டசபைக் கட்டடம்.

அரசியல் தாவல்கள்

தமிழகத்தைக் கலக்கிய இன்னொரு முக்கியச் சம்பவம் அரசியல் தாவல்கள். அதிமுகவிலிருந்து சரமாரியாக பலரும் திமுகவக்குப் படையெடுத்து அக்கட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய ஆண்டு இது. குறிப்பாக முக்கியத் தலைவர் முத்துச்சாமி அதிமுகவை விட்டு வெளியேறி திமுகவுக்குப் போனதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவிந்தசாமி எம்.எல்.ஏ அணி மாறியதும் பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் அதிமுகவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏக்கள் அணி மாறியதும் அக்கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

அதேபோல மதிமுகவைச் சேர்ந்த கலைப்புலி தாணு கட்சியை விட்டு விலகுவதாக வருடத்தின் கடைசி மாதத்தில் வெளியிட்ட அறிவிப்பு மதிமுக வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதேபோல பிற அரசியல் கட்சியினரும் கூட கலைப்புலியின் விலகலை ஆச்சரியத்துடன் பார்த்தனர். காரணம், யார் விலகியபோதிலும் மலை போல வைகோவுடன் இணைந்து நின்றவர் கலைப்புலி என்பதால்.

இவை மட்டுமா, இன்னும் நிறைய சம்பவங்கள், தமிழகமக்களால் மறக்க முடியாதவை. மு.க.அழகிரி நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தது, அவர் நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்குப் பதில அளிக்க சிறப்பு வசதிகளை லோக்சபா சபாநாயகர் மீரா குமார் ஏற்பாடு செய்ததும் கூட பரபரப்பான ஒரு நிகழ்வாக பார்க்கப்பட்டது.

இப்படி 2010ம் ஆண்டு முழுவதும் தமிழகத்தில் பரபரப்புக்குப் பஞ்சமே இல்லாமல் படு வேகமாக ஓடிப் போயுள்ளது.

சலசலப்பை ஏற்படுத்திய சீமான் கைது

நாம் தமிழர் கட்சியின் தலைவர் தலைவர் சீ்மான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. முதல் முறையாக அல்ல, 2வது முறையாக அவர் மீது இந்த சட்டம் பாய்ந்ததால் பரபரப்பும் ஏற்பட்டது.

இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்களைக் காக்கக் கோரியும், இலங்கைப் படையினரைக் கண்டித்தும் சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான், இலங்கையையும், சிங்களர்களையும் எச்சரித்துப் பேசினார். இதையடுத்து இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக கூறி அவர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் மீ்து தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது (ஜூலை 17).

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சீமான். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று தீர்ப்பளித்தது. இதையடுத்து சிறையிலிருந்து விடுதலையானார் சீமான்.

பென்னாகரம் இடைத் தேர்தல்

தமிழக அரசியல் களத்தில் மறக்க முடியாத ஒன்றாக பென்னாகரம் இடைத் தேர்தல் (மார்ச் 27) மாறிய ஆண்டு இது.

தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவை 3வது இடத்திற்குத் தள்ளியதோடு டெபாசிட்டையும் காலி செய்தது இந்த தேர்தல் களம்.

இத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. பாமக 2வது இடத்தைப் பிடித்தது. 3வது இடத்தை அதிமுகவும், 4வது இடத்தை தேமுதிகவும் பிடித்தன.

இத்தேர்தல் திமுக, அதிமுகவை விட பாமகவுக்கே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. காரணம், இதில் தோற்றால் பாமகவின் கதை காலி என்ற நிலை ஏற்பட்டு விடும் என்ற சூழல் அப்போது இருந்தது. ஆனால் அதிமுகவை தோற்கடித்து, திமுகவிடம் கெளரவமான தோல்வியை சம்பாதித்து தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டது பாமக.

பாமகவுக்கு புத்துயிர் கொடுத்த தேர்தல் இது என்பதால் வரலாற்றில் இதற்கும் ஒரு இடம் கிடைத்து விட்டது.

2010ம் ஆண்டு.. தட்ஸ்தமிழ் கருத்துக் கணிப்பு

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X