For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் கொடுக்கப் போகிறது அரசு, 'ஜே' போடுங்கள்- கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: விலை உயர்வுகளைத் தொடர்ந்து அடுத்து டாஸ்மாக் கடைகளை விரிவுபடுத்தி அவற்றை தனியாரிடம் ஒப்படைக்க அதிமுக அரசு திட்டமிட்டுள்ளது. எலைட் ஷாப் என்ற பெயரில் தொடங்கப்படவுள்ள இந்தக் கடைகள் அதிமுக அரசின் இன்னும் ஒரு சாதனை. இதற்கும் ஒரு ஜே போடுங்கள் என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட கேள்வி-பதில் பாணி அறிக்கை:

கேள்வி - பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவை பற்றி ஆங்கில நாளேடு எழுதிய தலையங்கம் பற்றி?

பதில் - அவர்களின் கஷ்டம் அவர்களுக்குத்தான் தெரியும்! காற்றாக வீசினால் அம்மையாருக்கு வலித்து விடுமோ என்றஞ்சி; தென்றலாக உருவெடுத்து மெல்லத் தவழ்ந்திருக்கிறார்கள்! அரசின் தவறுகள் அவர்களுக்குப் புரிகின்றன! அதை எடுத்துச் சொன்னால், எழுதினால் என்ன நடக்கும் என்பதையும் அவர்கள் நன்கறிவார்கள். அனுபவப்பட்டவர்கள் அல்லவா?

கேள்வி - தேர்வாணையக் கழகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் வீடுகளில் எல்லாம் சோதனை நடைபெற்றிருக்கிறதே?

பதில் - நமக்குக் கிடைத்த தகவலின்படி, தேர்வாணையக் கழகத் தலைவரும், உறுப்பினர்களும் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால், அவர்களுக்குப் பதிலாக தங்களுக்கு வேண்டியவர்களை நியமனம் செய்வதற்காகவே, இதுவரை பொறுப்பிலே உள்ளவர்களை தாங்களாகவே பதவிகளிலிருந்து விலகிக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும், அவர்கள் அதற்கு இசைவளிக்காத நிலையில் இப்படியெல்லாம் பயமுறுத்திப் பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

அதன் தொடர்ச்சியாகத்தான் நேற்றையதினம் தேர்வாணையக் கழகத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் வீடுகளில் எல்லாம் சோதனைகள் நடைபெற்றுள்ளன. இல்லங்களில் சோதனை நடத்தியதோடு மட்டுமல்லாமல் அந்த அதிகாரிகளையெல்லாம் ஒவ்வொருவராக தேர்வாணைய அலுவலகத்திற்கே தனித்தனி வாகனங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் அழைத்து வந்து, அவர்களது இருக்கைக்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தியதாகவும்,

அவர்களது மேசை மற்றும் பீரோக்களில் இருந்த கோப்புகளையெல்லாம் ஆய்வு செய்து சிலவற்றைக் கைப்பற்றியதாகவும், அதன் பிறகு மீண்டும் அவர்களையெல்லாம் ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அங்கேயும் விசாரணை நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வந்திருப்பதைப் பார்க்கும்போது, ஜனநாயக நாட்டில்தான் நாம் வாழ்கிறோமோ, அல்லது நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட காலகட்டத்திலே வாழ்கிறோமா என்று தெரியவில்லை.

''கா..கா..கா..''

கேள்வி - பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றை தென்னிந்திய வர்த்தக சபையினரும், தனியார் பேருந்து உரிமையாளர்களும் வேறு சிலரும் வரவேற்றிருப்பதாகச் செய்தி வந்திருக்கிறதே?

பதில் - பராசக்தி திரைப்படத்தின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது!

கேள்வி- அ.தி.மு.க. ஆட்சி ஒரே நேரத்தில் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு ஆகியவற்றையெல்லாம் அறிவித்து விட்டு, அதற்கு மத்திய அரசும், கடந்த கால திமுக அரசும் தான் காரணம் என்று சொல்கிறார்களே, அதிமுக அரசு இந்தச் செலவைத் தவிர்த்திருக்கலாம் என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டு கூறுங்களேன்; பார்க்கலாம்!

பதில் - ஏடுகளில் படித்த ஒன்றையே எடுத்துக்காட்டாக்குகிறேன்! சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப் படுத்துவது பற்றிய வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே, ஏதோ ஒரு தைரியத்தில் பழைய பாடத் திட்டத்தின்கீழ் அவசர அவசரமாக ரூ. 200 கோடி செலவில், தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள அச்சகங்களில், பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. உச்ச நீதிமன்றம் சமச்சீர் கல்வித் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதை அடுத்து ஏற்கனவே அச்சிடப்பட்டு தயாராக இருந்த சமச்சீர் கல்விப் புத்தகங்களில் சில பகுதிகளை நீக்கிவிட்டு அந்தப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன.

அ.தி.மு.க. அரசும், குறிப்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவும் வறட்டுப் பிடிவாதமாக சமச்சீர் கல்வித் திட்டத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று செயல்பட்டதால் உச்ச நீதிமன்றம் வரை சென்று ஏற்படுத்திய தேவையற்ற செலவோடு, நீதிமன்றத் தீர்ப்பு வரை காத்திருக்காமல், அவசர அவசரமாக ரூ. 200 கோடி செலவில் பழைய பாடத் திட்டத்தின்கீழ் அச்சடிக்கச் சொன்ன புத்தகங்களின் கதி என்ன? இதுவரை அந்த புத்தகங்களை அச்சிட்ட உரிமையாளர்களுக்கு பணம் வழங்கவில்லை.

அச்சக உரிமையாளர் ஒருவர், “பாடப் புத்தகங்கள் 150 அச்சகங்களில் தயாராயின. ஒவ்வொரு அச்சகத்திற்கும் ரூ. 10 முதல் 15 லட்சம் வரை என ரூ.22.50 கோடி வரை பாடநூல் கழகம் தர வேண்டியுள்ளது. இது குறித்து பாட நூல் கழகத்தில் இருமுறையும், கோட்டையில் இருமுறையும் எங்களிடம் அமைச்சர் பேசினார். லாபமோ, நட்டமோ எதுவாக இருந்தாலும் அதை அரசு ஏற்றுக் கொள்ளும், உங்களை பாதிக்கவிட்டு விடமாட்டோம் என்றார். ஆனால் இது வரை ஒரு பைசா கூட வரவில்லை என்று சொல்லியிருக்கிறார். வீண் செலவுக்கான சான்று இது.

இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், பள்ளிக் கல்வித் துறையிலே செப்டம்பர் மாத இறுதியில் 17 இணை இயக்குனர்கள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டு, இரண்டு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், நேற்றையதினம் மீண்டும் 13 இணை இயக்குனர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

வறட்டுப் பிடிவாதத்திற்கு சான்று ஒன்று கூறட்டுமா? சுமார் ரூ. 1000 கோடி செலவில் ஓமந்தூரார் வளாகத்தில் தலைமைச் செயலகம் கட்டப்பட்டு, திறப்பு விழாவும் பிரதமரால் நடைபெற்றுவிட்டது. அதைக் கண்டவர்கள் எல்லாம் பாராட்டினர். ஆனால் முதல் அமைச்சர் ஜெயலலிதா என்ற ஒருவரின் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அந்தக் கட்டிடம் ஆறு மாத காலமாக அப்படியே கிடக்கிறது! யார் வீட்டுப் பணம்? மக்கள் தந்த வரிப்பணம்!

இதற்கும் ஜே போடுங்கள்!

கேள்வி - தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான 'டாஸ் மாக்" மது பானக் கடைகள் இருக்கும்போது, வெளி நாட்டு மதுபானங்களை விற்க 'எலைட் ஷாப்"கள் தேவைதானா?

பதில் - தேவையா இல்லையா என்பதை நம்மைக் கேட்டா முடிவு செய்கிறார்கள்? தமிழ்நாட்டில் மொத்தம், 6,696 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவை தவிர வெளிநாட்டு மதுவகைகளை டாஸ்மாக் கடைகளில் விற்பதற்குப் பதிலாக, குளிர் சாதன வசதியுடன் கூடிய புதிய மதுக்கடைகளை எலைட் ஷாப் என்ற பெயரில் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதன் அருகிலேயே ஏ.சி. பார் தொடங்கவும் திட்டமிட்டிருப்பதாகவும், புதிய மதுக்கடைகளை அரசு நடத்தும் என்றாலும், ஏ.சி. பார்கள் தனியாரால் நடத்தப்படும் என்றும் செய்திகள் வந்துள்ளன.

சிறிது நாட்களுக்குப் பிறகு இந்தப் புதிய மதுக்கடைகள் பெரிய ஷாப்பிங் மால்களில் ஏ.சி. பார் வசதியுடன் திறக்கப்படவுள்ளன என்றும் தெரிகிறது. அ.தி.மு.க.விற்கு வாக்களித்த மக்களுக்காக ஜெயலலிதா அரசின் மற்றொரு சாதனைத் திட்டம் இது! இதற்கும் ஒரு 'ஜே" போடுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

English summary
DMK Chief Karunanidhi has criticized the ADMK govt for its planning to open elite Tasmac shops all over the state. He has charged that the govt has planned to hand over these shops to private after some time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X