For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆங்கிலப் புத்தாண்டு- ஆளுநர், கருணாநிதி, வைகோ உள்பட தலைவர்கள் வாழ்த்து

By Shankar
Google Oneindia Tamil News

Rosaiah,Karunanidhi and Vaiko
சென்னை: தமிழக மக்களுக்கு வரும் 2012ம் ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்துகளை தமிழக ஆளுநர் ரோசைய்யா தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலர் வைகோ, எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த், பாமக தலைவர் ராமதாஸ் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

ஆளுநர் ரோசைய்யா வெளியிட்டுள்ள செய்தி:

"மகிழ்ச்சியான இந்த புத்தாண்டில் அனைத்து மக்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தாண்டு தமிழகத்துக்கும், இந்திய திருநாட்டுக்கும் அமைதி, செழிப்பு, முன்னேற்றம், வளர்ச்சி அனைத்தையும் கொண்டு வரட்டும்."

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி:

தமிழக மக்கள் வளம் பெற - தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் வழி காட்டிட அடுக்கடுக்கான திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி வெற்றி கண்ட மனநிறைவுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலை சந்தித்த வேளையில் ஆட்சி மாற்றம் கண்ட மக்களுக்கு ஏமாற்றத்தையே பரிசாக தந்து 2011-ஆம் ஆண்டு மறைகிறது.

அண்ணா நூற்றாண்டு நூலகம் இடமாற்றம், தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைப் பறித்திடும் ஆணை உள்ளிட்ட வழக்குகளில் நீதிமன்றங்கள் விடுத்த கண்டனக் கணைகளே இன்றைய மாநில அரசின் நிர்வாகத்தை பறைசாற்றுகின்றன.

ஏழை, எளியோர் நலம் பெற கழக ஆட்சி தொடங்கிய திட்டங்கள் துலங்கிட வேண்டும், மின்சாரத் தட்டுப்பாடு நீங்கி, தொழில் வளம் பெருகி, வேலை வாய்ப்புகள் குவிந்து, தமிழகம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்திட வேண்டும்.

அண்டை மாநில நட்புறவுகள் சிறந்து, தமிழக மக்களின் வேதனைகள் நீங்கிட வேண்டும் என்ற நோக்கில் எங்கும் புதிய சிந்தனை மலர்கள் பூத்துக் குலுங்கட்டும்- தொடங்கும் 2012 ஆங்கிலப் புத்தாண்டில் எனக்கூறி, தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:

கணக்கற்ற சோதனைகள் தமிழகத்தையும், தமிழ் குலத்தையும் சூழ்ந்திருக்கும் கால கட்டத்தில் புத்தாண்டு மலர்கிறது. கொடுந்துயரில் தவிக்கும் ஈழத் தமிழினம், தென் தமிழகத்தின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணைக்கு கேடு செய்ய முனையும் கேரளம், சிங்களக் கடற்படையால் நாளும் தாக்கப்படும் தமிழக மீனவர்கள் என்று பல துன்ப இடர்களைத் தமிழகம் சந்திக்க நேர்ந்துள்ள நிலையில் முல்லைப் பெரியாறு உரிமை காக்க கட்சி, சாதி, மத எல்லைகள் கடந்து தமிழகம் கொந்தளித்து எழுந்துள்ள நிலைமை எதிர் காலத்தைப் பற்றிய நம்பிக்கை ஊட்டுகிறது.

சமுதாயத்தின் அனைத்துப் பகுதிகளையும் செல்லரிக்கச் செய்வதற்கு ஊழலும் மது அரக்கனும் காரணங்கள் ஆகும். இந்த தீமைகளில் இருந்து தமிழகம் விடுபட்டு உன்னத நிலை பெறவும் துயர இருளில் தவிக்கும் ஈழததமிழ் மக்கள் விடியலைக் கண்டு தமிழீழம் மலரவும் ஊழலற்ற அரசியல் தமிழகத்தில் வெற்றி காணவும் 2012ம் ஆண்டு பாதை அமைக்கட்டும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

2011ம் ஆண்டு தமிழக மக்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தியது. பொருட்களின் விலையை மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டு கொண்டு உயர்த்தின. 2011ம் ஆண்டின் இறுதியில் மிக தீவிர புயலும் தமிழகத்தையும், புதுச்சேரியையும் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

2012ம் ஆண்டு தமிழக மக்களுக்கு புதிய வாழ்வு அளிக்கும் தென்றலாக வர வேண்டும். கடந்த கால கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து எதிர்காலம் மக்களுக்கு அமைதியையும், முன்னேற்றத்தையும் தர வேண்டும் என்றும், போனது புயலாக இருக்கட்டும், வருவது தென்றலாக இருக்கட்டும், என்று தெரிவித்து உள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:

புத்துணர்வு அளிக்கும் ஆண்டாக 2012- ஆம் ஆண்டு அமையட்டும். இதற்காக நாம் மேற்கொண்ட புதிய தீர்மானங்களை நிறைவேற்றி முடிக்க சபதம் ஏற்போம். நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும் ஒவ்வொருவரும் கனவு காண வேண்டும்.

அந்தக் கனவு நனவாக்க வாழ்க்கையில் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நழுவ விட்டு விட கூடாது. அந்த வகையில் நம் கனவை நிறைவேற்ற புதிதாக போராடுவோம் என்று சபதம் எடுத்து செயல்பட கற்று கொள்வோம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:

2011-ம் ஆண்டில் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத் தளங்களில் பல நெருக்கடிகளையும் சவால்களையும் சந்தித்தோம். ஆண்டின் கடைசி நாட்களில் 'தானே' புயலின் தாக்குதலையும் சமாளித்து 2012-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்.

கடந்த காலப்படிப்பை அடிப்படையாகக் கொண்டு 2012ம் ஆண்டைத் திட்டமிட்டு தமிழினத்தின் தலைநிமிர்வுக்கான ஆண்டாக அமைத்துக் கொள்ளும் வகையில் இந்த புத்தாண்டை வரவேற்போம்.

ஈழத் தமிழர்களின் துயர்களைத் துடைப்பதற்கும், முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலைத் தீர்ப்பதற்கும், சாதிக்கொடுமை உள்ளிட்ட பிற வன்கொடுமைகளிலிருந்து தலித் மற்றும் அனைத்து விளிம்புநிலை மக்களைப் பாதுகாப்பதற்கும் ஏற்றதொரு ஆண்டாக 2012-ம் ஆண்டு அமைந்திட தமிழர்கள் யாவரும் ஒருங்கிணைந்து நிற்போம் எனவும் இந்தப் புத்தாண்டில் உறுதி ஏற்போம்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:

2012ம் புத்தாண்டு அனைவருக்கும் அனைத்தும் தரும், அன்பு பொழியும் ஆண்டாகவும், மனிதனின் பகுத்தறிவு ஆக்கத்திற்கே தவிர, அழிவுக்கு அல்ல என்பதை வரலாற்றில் பதிய வைக்கும் சாதனை பொங்கும் ஆண்டாக மனிதநேயம் மலர அடையட்டும்.

English summary
DMK president Karunanidhi, MDMK chief Vaiko, DMDK president Vijayakanth, PMK leader Ramadoss and many other political leaders have wished the people of Tamil Nadu for 2012 New year. All of them wished the people to experience a happy and prosperous 2012.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X