For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கள்ளநோட்டு, தங்ககாசு, பணமோசடி: வெளிநாட்டு நெட்வொர்க் மூலம் பயங்கர மோசடி-கும்பலின் தலைவன் கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Ramar
திருப்பூர்: வெளிநாடுகளில் இருந்து ஆட்களை வரவழைத்து நெட்ஒர்க் அமைத்து பண மோசடி செய்யும் கும்பல் திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டத்தில் உலாவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறைந்த வட்டிக்கு கோடிக்கணக்கில் பணம் வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்த கும்பலைச்சேர்ந்த தலைவனை திருப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதே கும்பல் பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட கள்ளநோட்டுகளை திருப்பூரில் புழக்கத்தில் விடுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எப்படி மோசடி செய்கிறார்கள் இவர்கள்?

உங்களில் யாருக்காவது அவசர பணத்தேவை உள்ளதா? எனில், மோசடிக் கும்பலுக்கு நீங்கள்தான் தேவை. மோசடிக்கும்பலைச் சேர்ந்தவர்கள் உங்களை அணுகி குறைந்த வட்டிக்கு பலகோடி ரூபாய் பெற்றுத் தருவதாக கூறி மூளைச் சலவை செய்வார்கள். அதற்கு டாக்குமெண்ட் சார்ஜ் முதலில் தரவேண்டும் என கூறி எவ்வளவு பணம் தேவையோ அதற்கு தகுந்தாற்போல பணத்தை அட்வான்சாக பெற்றுக்கொள்கிறார்கள்.

மேலும் வெற்று பத்திரம், வெற்று காசோலை ஆகியவற்றையும் வாங்கிக் கொள்கிறார்கள். அதன்படி பணத்தையும் பத்திரங்களையும், காசோலைகளையும் பெற்றுக்கொண்டவுடன் பணத்தை டோர் டெலிவரி செய்கிறோம் என கூறி செல்வார்கள். அவ்வளவுதான் அவர்களையும், அவர்களுக்கு நீங்கள் கொடுத்த பணத்தை மறந்து விட வேண்டியதுதான்.

ஆசை வார்த்தை

தமிழ்நாடு முழுவதும் பிரபல தொழில் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஆகியோர்கள் பணம் தட்டுப்பாட்டில் இருப்பதாக தகவல் வந்தால் இந்த மோசடிக்கும்பல் குறைந்த வட்டிக்கு பணம் வாங்கித் தருகிறோம் என ஆசை வார்த்தைகள் கூறி இதேபோல் முன்பணமாக பணத்தை கறந்து விடுகின்றனர். பின்னர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்கும் பட்சத்தில் பணம் கொண்டு வருகிற வழியில் நாங்கள் வந்த வாகனம் விபத்துக்குள்ளாகிவிட்டது. அதனால் மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளோம். உடல்நிலை தேறியவுடன் நாங்கள் வருகிறோம் எனக்கூறி தங்களுடைய செல்போனை சுவிட்ச் ஆப் செய்வார்கள்.

இதே கும்பல் பணத்தை கொண்டு வருகிற வழியில் கண்டெய்னரை சி.பி.ஐ, போலீஸ் பிடித்து விட்டது. விரைவில் பணத்துடன் வருகிறோம் எனக்கூறி தங்களுடைய வியாபாரத்திற்கு அடுத்து ஆள் பிடிப்பார்கள்.

முன் பணம் வாங்கி மாயம்

இந்த மோசடி கும்பலிடம் ஏமாந்தவர்கள் பட்டியலில் திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி அதிபரும் ஒருவர். இவரின் பணத்தேவையை அறிந்து மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் அடுத்த லிங்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராமர், திருப்பூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன், அரவிந்த் சென்னையைச் சேர்ந்த தனம் என்ற பெண், சரவணன் ஆகியோர் அவருடன் தொடர்ப்பு கொண்டுள்ளனர்.

ஒரு கோடி ரூபாய் குறைந்த வட்டிக்கு பெற்றுத்தருவதாக கூறி பத்து லட்சம் ரூபாய் வரை முன்பணமாக பெற்றுள்ளனர். அத்துடன் வெற்று பத்திரம், வெற்று காசோலை ஆகியவற்றை வாங்கிக் கொண்டு பணத்தை ஒரிரு நாளில் உங்களுடைய இடத்திற்கே கொண்டு வருகிறோம் எனக்கூறி பணத்தையும், ஆவணங்களையும் வாங்கிச் சென்றுள்ளார்கள். அதன் பின்னர் தங்களுடைய செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஸ்னனிடம் முறையிட்டதை அடுத்து எஸ்.பி. உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி.விக்ரமன், நல்லூர் காவல்துறை ஆய்வாளர் ஈஸ்வர மூர்த்தி தலைமையில் கொள்ளை கும்பலின் தலைவன் ராமரை 406, 420, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ராமர் மீது கஞ்சா கடத்திய வழக்கு, இரும்பு திருடிய வழக்கு, மணல் கடத்தல், ஆள்கடத்தல் என பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

வெளிநாட்டு நபர்கள்

மோசடி செய்து சிக்கிய ராமரை 'தட்ஸ்தமிழ்' செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது,

நாங்கள் ஒரு நெட்வொர்க் அமைத்து இந்தியா, பங்காளதேசம், சூடான், நைஜீரியா போன்ற நாடுகளில் இருந்து சில நபர்களை தேர்ந்தெடுத்து இந்த மாதிரி பிசினஸ் செய்கிறோம். இதற்காக மத்திய பிரதேசம், பங்களாதேசம், மலேசியா போன்ற நாடுகளில் இருந்து சிம் கார்டுகளை வரவழைத்து இங்கேயே பேசுவோம். அடிக்கடி எங்களுடைய சிம் கார்டை மாற்றி விடுவோம். இந்த பிசினஸ் சரியில்லை என்றால் பாகிஸ்தான் நோட்டை திருப்பூரில் உலாவிடுவோம்.

எங்களுக்கு கட்டு கட்டாக பாகிஸ்தான் கள்ளநோட்டுக்களை அரவிந்த், ரவிச்சந்திரன், சென்னையைச் சேர்ந்த தனம், மற்றும் பிள்ளை, ஆகியோர்கள் கொடுப்பார்கள். இந்த பணத்தை என்னுடைய தம்பி சந்திரன் வாங்கி வருவான்.

தங்கையை வைத்து ஆளை மயக்குவோம்!!

இதுதவிர தங்க காசு மோசடி, கோயில் கும்பம் போன்றவற்றை வெளிநாடுகளுக்கு திருட்டு தனமாக அனுப்புகிறோம். ஆண்களை மயக்கவேண்டும் என்றால் என்னுடைய தங்கை மலர்விழி மூலமாக அழகான பெண்களை வைத்து பார்ட்டிகளுக்கு மயக்க மருந்தோ, குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்து தப்பித்து விடுவோம்.

2 பேரைக் கொன்றுள்ளோம்!

நாங்கள் பாதிக்கபடுவது மாதிரி தெரிந்தால் ஆளை போட்டு தள்ளுவோம். ரவிச்சந்திரன் மற்றும் அரவிந்த் , பிள்ளை, நானும் கூட்டாக சேர்ந்து ஊட்டியில் உள்ள தங்கும் விடுதியில் இரண்டு நபர்களை கொலை செய்து அந்த பாடியை எரித்து விட்டோம். இதுவரை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை.

எங்களிடம் பணம் கேட்டு வரும் நபர்களை அரவிந்த், ரவிச்சந்திரன் மூலம் ஆளை கடத்தி மைசூருக்கு கண்ணை கட்டி விட்டு விடுவோம். பெண் சபலத்தில் உள்ளவர்களை ரவிச்சந்திரன், அரவிந்த மூலமாக பெண்களை வரவழைத்து தனியாக ரூம்களுக்கு அனுப்பி புளுபிலிம் எடுப்போம். அதன் பின்னர் பார்ட்டி பணம் கேட்டால் நாங்கள் அதனை காண்பித்து மிரட்டுவோம். கடைசியில் இப்படி மாட்டிக்கொண்டோம் என நல்லூர் காவல்நிலையத்தில் நமக்கு நீண்டதொரு விளக்கம் அளித்தார்.

தமிழகம் முழுவதும் பல கோடி மோசடி!

தமிழகமெங்கும் குறைந்த வட்டிக்கு பணம் வாங்கித்தருவதாக பல கோடி மோசடி செய்துவருகிறது இதுபோன்ற ஒரு மோசடிக்கு கும்பல். இதனால் பல்வேறு தொழில் அதிபர்கள், வாகன உரிமையாளர்கள், எஸ்டேட் அதிபர்கள், நிதி நிறுவனங்களின் அதிபர்கள், கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்கள் என பல தரப்பட்ட மக்கள் பாதிப்படைகின்றனர்.

இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து பல அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நெட்வொர்க் அமைத்து ராமர் போன்று பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைத்தால் இன்னும் பல புல்லுருவிகளை களையெடுக்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

English summary
A fake currency and money cheating gang has been busted in Tirupur and the gang leader Ramar was arrested by the police set up by district SP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X