For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இல்லாத ராமர் பாலத்தை இடிப்பதாக ஏன் பொய் பிரச்சாரம் செய்ய வேண்டும்?: கருணாநிதி

By Siva
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: இல்லாத ராமர் பாலத்தை இடிப்பதாக ஏன் பொய் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சேது சமுத்திர திட்டத்திற்கு 2005ம் ஆண்டு மதுரையில் சோனியா காந்தி முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வந்த நிலையில், ஒரு கூட்டம் அதற்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியில் ஈடுபட்டு ஓரளவு வெற்றியும் கண்டது.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் ராமர் பாலத்துக்கு குந்தகம் ஏற்படும் என்று அந்தக் கூட்டம் கூறியது. அவர்களுக்கு துணைபுரியும் வகையில், ‘‘ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும்'' என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து 23-7-1967ல் எழுச்சி நாள் கூட்டங்களை அண்ணா நடத்தினார். சேது கால்வாய் திட்டம், தூத்துக்குடி துறைமுகம் - இவை இரண்டும் ஒருங்கிணைந்தால் அதை தமிழகத்தின் சூயஸ் கால்வாயாக கருதலாம் என சட்டப்பேரவையில் அண்ணா வலியுறுத்தினார்.

இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘‘சேது சமுத்திரத் திட்டம் நாட்டுக்கு நல்ல பலனைக் கொடுக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். ஏனென்றால் இப்போது கப்பல்கள் இலங்கையைச் சுற்றி வங்காள விரிகுடா கடலுக்கு வர வேண்டியுள்ளது. பாக் ஜலசந்தியின் குறுக்கே கால்வாய் அமைத்தால் பணமும், நேரமும் மிச்சமாகும். எனவே, தொடக்க விழாவுக்கு தடை விதிக்க முடியாது'' என கூறியது.

2001, 2004ம் ஆண்டுகளில் அதிமுக தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம் என கூறப்பட்டிருந்தது. ஆனால் 2009ம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில், ‘‘இப்போது திட்டமிட்டுள்ளபடி சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் எந்தப் பொருளாதார ஆதாயமும் கிடைக்காது. மேலும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும்'' என்று கூறி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார்கள்.

ராமர் பெயரால் உள்ள எதுவும் இருக்கக் கூடாது என்பதற்காக அந்த பாலத்தை வேண்டாம் என்று கூறவில்லை. இல்லாத பாலத்தை இடிப்பதாக பிரசாரம் செய்வது ஏன் என்று தான் கேட்கிறோம்.

2001ம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் ‘‘ராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையே ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு தடையாக உள்ள மணல்மேடுகள், பாறைகளை அகற்றி ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பது சேது சமுத்திர திட்டத்தின் தலையாய நோக்கம்'' எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்போது ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார்.

இந்தத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடம் திமுக எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். மீண்டும் இது குறித்து வலியுறுத்துவார்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK chief Karunanidhi has asked as to why somebody are campaigning falsely that government is going to demolish Ramar bridge which doesn't even exist in reality.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X