For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத்தின் அசைக்க முடியாத 'சர்ச்சை நாயகன்' மோடி

By Mathi
Google Oneindia Tamil News

Narendra modi
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கடந்த 11 ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக வலம் வருகிறார் சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற நரேந்திர மோடி. அவரது வெளிப்படையான நிர்வாக திறனும் பேச்சுத் திறனும் அம்மாநில மக்கள் மத்தியில் அவருக்கான செல்வாக்கை வளர்த்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்..

குஜராத் மாநிலத்தின் வத்நகரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் நரேந்திர மோடி. சிறுவயதில் இருந்தே பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்தார். அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற மோடியை ஈர்த்தவர் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி. 1995-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலராக நியமிக்கப்பட்ட மோடி ஐந்து முக்கிய மாநிலங்களின் பொறுப்பாளராக்கப்பட்டார்.

பின்னர் 2001-ம் ஆண்டு குஜராத் மாநில சட்டசபைக்கான இடைத்தேர்தலில் ஆளும் பாஜக படுதோல்வி அடைய அப்போதைய முதல்வர் கேசுபாய் பட்டேல் பதவியை இழக்க வேண்டியதாயிற்று. கேசுபாய் பட்டேலுக்கு பதிலாக நரேந்திர மோடியை முதல்வராக்கியது பாஜக மேலிடம்.

2002-ம் ஆண்டு மோடியின் ஆட்சிக் காலத்தில்தான் இந்தியாவின் கறுப்பு பக்கமான கோத்ரா வன்முறைகள் அரங்கேறின. சிறுபான்மை சமூகத்தவர்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்ட கொடூரம் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்தார் மோடி. ஆனால் மீண்டும் நடைபெற்ற தேர்தலில் 127 தொகுதிகளில் வெற்றி பெற்று தமக்கே மக்கள் ஆதரவு இருப்பதாக கூறிக் கொண்டார்.

2007-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மோடியை 'மரண வியபாரி' என்று முன்னிறுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா பிரச்சாரம் செய்து பார்த்தார். ஆனால் மோடிதான் மீண்டும் வெற்றி பெற்றார். 122 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.

குஜராத் மாநிலத்தை தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலமாக்கியதில் மோடியின் பங்கு முக்கியமானது. அனைத்து பகுதிகளுக்குமான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்த மோடி, நாட்டின் மின்மிகை மாநிலமாக குஜராத்தை உருவாக்கினார். மேலும் மிகப் பெரிய சூரியமின் சக்தி உற்பத்தி நிலையத்தையும் உருவாக்கியவர் மோடி. மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத்தில் சில மாதங்களுக்கு முன்பு குட்காவையும் முழுவதுமாக தடை செய்தவர் மோடி.

ஹரியானாவில் மாருதி கார் தொழிற்சாலையில் வன்முறை மூண்டபோது ஜப்பானின் சுசுகி நிறுவனம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைத்தான் அணுகியது. தமிழகத்தில் தொடர் மின்வெட்டு நீடித்து வருவதால் குஜராத் மாநிலம் இருகரம் நீட்டி தமிழகத் தொழிற்சாலைகளை வரவேற்றுக் கொண்டிருக்கிறது., குஜராத்தில் வெளிப்படையான நிர்வாகத்தை செயல்படுத்தியவர் என்ற பெருமை மோடிக்கு உண்டு.

மோடியின் ஆதிக்கம் நீடித்ததால் சோர்ந்து போன முன்னாள் முதல்வர் அண்மையில் பாஜகவில் இருந்து வெளியேறி குஜராத் பரிவர்த்தன் கட்சியை தொடங்கினார். இக்கட்சியால் பாஜகவின் வெற்றியைத் தடுக்க முடியாமல் போனாலும் பாஜகவின் தொகுதிகள் சிலவற்றை காங்கிரஸுக்கு தாரைவார்க்கும் வகையில் வாக்குகளைப் பிரித்திருக்கிறது.

குஜராத் மாநிலத்தில் சிறப்பான நிர்வாகத் திறனை கொடுத்ததால்தான் மோடியை மக்கள் தொடர்ந்து அங்கீகரித்து வருகின்றனர் என்று கூறப்படும் அதே நேரத்தில் சர்ச்சைகளின் நாயகனாகவும் இருந்து வருகிறார்.

குஜராத் கோத்ரா கலவரத்தைத் தொடர்ந்து அமெரிக்கா போன்ற நாடுகள் மோடியை 'உள்ளே'விடாமல் தடுத்து வருகிறது. இதுவரை இங்கிலாந்தும் இதே கொள்கையைக் கடைபிடித்தது. அண்மையில்தான் இங்கிலாந்து இந்த கொள்கையை மாற்றிக் கொடுத்தது.

மோடியைப் பொறுத்தவரையில் அனைத்து நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தக் கூடிய தலைவர்களில் ஒருவராக செயல்படுகிறவர். தேர்தல் பிரச்சாரத்தைக் கூட ஒரே இடத்தில் பேசுவதை ஒரே நேரத்தில் 50 இடங்களுக்கு மேல் ஒளிபரப்பு செய்யக் கூடிய 3 டி தொழில்நுட்பத்தில் நடத்தியவர். ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துகிறவர் மோடி.

கடந்த தேர்தலை விட இந்த முறை குறைந்த இடங்களிலையே மோடியும், அவரது சகாக்களும் வென்றுள்ள போதிலும், குஜராத்தின் அசைக்க முடியாத தலைவராக அவரே தொடர்ந்து நீடிப்பதை இந்த தேர்தல் முடிவு உறுதி செய்வதாக உள்ளது.

English summary
As Narendra Modi appeared set for a hat-trick in Gujarat, BJP on Thursday parried questions on whether he will be the party's prime ministerial candidate in the next Lok Sabha elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X