காமராஜருக்கு தலைவலியாக மாறிய தொற்று நோய்.. ‘இன்புளுயன்ஸா’ நகரமாக அறிவிக்கப்பட்ட சென்னை!
சென்னை: காமராஜர் ஆட்சிக் காலத்தில் சென்னை 'இன்புளுயன்ஸா' நோயினால் பாதிக்கப்பட்ட நகரமாக அறிவிக்கப்பட்டதால் மக்கள் பீதியில் உறைந்து போய் கிடந்தனர். காமராஜர் ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகரம் 'இன்புளுயன்ஸா பிரதேசம்' என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது உங்கள் யாருக்காவது தெரியுமா?
வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துவிட்டு, 1957 மே 16 ஆம் தேதி சென்னை திரும்பிய கப்பலிலிருந்த பயணிகளை இறங்கவிடாமல் 21 ஆம் தேதி வரை உள்ளேயே தங்க வைக்கப்பட்டிருந்தனர். வெளிப்படையாகவே சென்னை நகரம் இன்புளுயன்ஸா தொற்று நோயினால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகச் சென்னை ஆட்சியர் எஸ். தாயப்ப தேவர் அறிவிப்பு செய்தார்.

இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தீவிர சிகிச்சை அளிப்பதற்கான பொறுப்பு கார்ப்பரேஷன் சுகாராத அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் சொன்னார்.
சென்னை வந்த 'ரஜுலா' கப்பல்
1957 ஆம் ஆண்டு மே மாதம் சென்னை வந்தடைந்த 'ரஜுலா' கப்பல். அதில் பயணித்த பயணிகள் இன்புளுயன்ஸா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இந்தக் கப்பலில் மொத்தம் 1800 பேர் இருந்தார்கள். இந்த நோய் தாக்கத்தில் சிக்கிய இவர்களில் 100 பேர் குணமடைந்து வந்தனர். அதில் 75 பேர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். கப்பலில் உள்ள நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக் குழு அனுப்பிவைக்கப்பட்டது. அதிலிருந்த 5 செவிலியர்களுக்கு இந்த நோய் தோற்றுப் பற்றிக் கொண்டது. இந்த நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருவதாகப் பொதுச்சுகாதார மருத்துவர் என். ராஜகோபாலன் சொன்னார்.
'ரஜுலா' கப்பல் சென்னை அடைவதற்கு முன்னதாகவே சென்னையில் இன்புளுயன்ஸா நோய் பரவல் இருந்தது. சென்னையில் 100 பேர் அதனால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது முதற்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டிருந்தது. ஆகவே, சென்னை வாழ் மக்கள் இந்த இன்புளுயன்ஸா நோய் பரவல் பீதியில் நடுங்கிப் போய் நடமாடிக்கொண்டிருந்தனர்.
காமராஜர் ஆட்சிக்கு இது பெரும் தலைவலி தரும் சமாச்சாரமாக உருவெடுத்திருந்தது. மற்றொரு புறம் விலைவாசி உயர்வு மக்களைப் பாதித்து வந்தது. விலைவாசி உயர்வை எதிர்த்து ஏழைபாழைகள் போராட வருவதற்கு முன்னதாகவே., நேரு அரசாங்கம் எடுத்ததற்கு எல்லாம் வரியைப் போட்டு நசுக்குகிறது எனப் போர்க்கொடி உயர்ந்திருந்தது ஒரு சங்கம்? அது என்ன சங்கம் தெரியுமா? மிராசுதார்கள் சங்கம்.
கும்பகோணத்தை மையமாக வைத்து இயங்கிவந்த இந்தச் சங்கத்தின் தலைவர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அய்யர், மத்திய சர்க்கார் வரவு செலவு திட்ட வரிச் சுமை பற்றி பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கண்டன அறிக்கையை வாசித்தார். சாமானிய மக்கள் வரிவிதிப்பினால் துன்பப்படுவதைத் தவிர இந்தப் புதிய வரிகளால் வேறு பலன் இல்லை என்றார். ஐந்தாண்டு திட்டத்தைக் காட்டி வரிச் சுமையைக் கூட்டிக்கொண்டே செல்கிறார்கள் எனப் புகார் கூறினார்.
மிராசுதார்கள் என்றால் பெரும் நிலக்கிழார்கள் என்பது பொருள். அவர்களே அதிக வரியை அரசாங்கம் விதிக்கிறது என அந்தக் காலத்தில் கொடி தூக்கி இருந்தார்கள்.
நேருவின் சோஷலிஸ கொள்கை என்பது பணக்காரர்களை ஒரு பக்கம் கோபம்கொள்ளச் செய்தது. மற்றொரு பக்கம் சரியாக உணவு தானியம் விநியோகம் செய்யப்படாமல் தடை ஏற்பட்டதால் ஏழை மக்கள் பஞ்சத்தில் அவதிப்பட்டுவந்தனர்.
அதிக வரிவிதிப்புக்கு எதிர்ப்பு
அந்தக் கால பத்திரிகள் நிதியமைச்சரின் அதிகப்படியான வரிவிதிப்பைக் கேலி செய்து கார்ட்டூன் வெளியிட்டன. மத்திய மந்திரி தன்னிடமிருந்து பிடுங்குகிறார்கள் ஹோட்டல் முதலாளி ஏழைகளிடமிருந்து பிடுங்குகிறார் எனப் படங்கள் மூலம் கருத்தைப் பரப்பினர். இந்தக் கருத்துகளை ஏற்று மத்திய அரசு வரியை மறுபரிசீலனை செய்தது வருவதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த வரி உயர்வை எதிர்த்து 'வரி கொடா இயக்கம் ஆரம்பிக்க இதுவே தகுந்த தருணம்' என்று சென்னை நகர சோஷலிஸ்டு கட்சியின் நிர்வாகக் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இதனால், ரயில் கட்டணம், போக்குவரத்து கட்டணம், சிமெண்ட் விலை உயர்வு ஆகியவை அதிக சுமையைக் கொடுத்துள்ளதாக இக்கூட்டம் வருந்தியது. கூடவே இந்தித் திணிப்பு பிரச்சனையும் தமிழ்நாட்டில் மிகுந்த அழுத்தம் தந்து வந்தது.
தமிழை ஆட்சி மொழியாக அமுல் செய்வதற்காகச் சர்க்காருக்கு ஆலோசனை கூறுவதற்காக அதிகாரிகளை அரசு நியமித்திருந்தது. அந்தக் குழுவிலிருந்தவர்கள் வடமொழியில் உள்ள ஜ,ஷ,ஸ,ஹ ஆகிய நான்கு எழுத்துகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றது. அது பற்றி அரசு கருத்தை அறியவிரும்புவதாகக் கேட்டிருந்ததாகத் தகவல் கசிந்தது. அதை தற்போதைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசும் சம்மதம் தெரிவித்துள்ளதாகப் பத்திரிகைகளில் அரசல் புரசலாக செய்தி வெளியானது.
மக்கள் பலரும் மத்திய அரசின் வரிவிதிப்பை எதிர்த்துக் கொந்தளித்துப் போய் இருந்த சூழலில், ஈ.வெ.ராமசாமியோ, 'சினிமா பார்ப்பதை விட்டு வரிகளைக் கொடுங்கள்' என்று தெரிவித்திருந்தார்.
அவர், "ஒரே படத்தை இரண்டு மூன்று தடவைகள் பார்ப்பதை நிறுத்திக் கொண்டு தேசிய முன்னேற்றத்திற்காக புதிய வரிகளைக் கொடுங்கள். சமுதாயத்தைக் கெடுக்கும் சினிமாவிற்கு செல்லாதீர்கள்" என்று அவர் கேட்டுக்கொண்டார். குத்தாலம் அருகிலிருந்த மாதிரிமங்கலம் மந்தைவெளி திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பெரியார் இந்தக் கருத்தை வலியுறுத்தி இருந்தார்.
ஆரம்ப காலத்திலிருந்தே திராவிடர் கழகத் தலைவர் பெரியார் சினிமாவை ஆபாச குப்பைகள் என்று கூறிவந்தார். நாடகங்கள் கூட மக்களை மதி மயக்கவைக்கும் மோச வலை என்றே அவர் பிரச்சாரம் செய்தார். நாடக நடிகர்கள், நடிகைகள் உடுத்தும் உடைகள் நம் நாட்டுக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டி பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். அவரது கருத்துக்கு மாறாகத் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் அண்ணா, மு.கருணாநிதி நாடகம் மற்றும் சினிமாவுக்கு கதை வசனம் எழுதி வந்தனர் என்பதுடன் நாடகங்களில் அரிதாரம் பூசி நடிக்கவும் செய்தனர் என்பது வரலாறு.
- எழுதியவர் கடற்கரய்
-
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார்











Click it and Unblock the Notifications