இந்தியை முதன்மைப்படுத்தும் மத்திய அரசுக்கு நீதிமன்றத்தின் இடிந்துரை: மார்க்சிஸ்ட் வரவேற்பு
சென்னை: எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் மத்திய அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு கோரிக்கை தொடர்பாக எந்த மொழியில் கடிதம் அனுப்புகிறார்களோ, அதே மொழியில்தான் மத்திய அரசு அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை நேற்று உத்தரவிட்டு இருந்தது.
தான் அனுப்பிய கடிதம் ஒன்றுக்கு மத்திய அரசு அதிகாரிகள் இந்தியில் மட்டுமே பதில் அனுப்பி இருந்தனர். எனவே ஆங்கிலம் அல்லது பிராந்திய மொழியில் பதில் அனுப்புமாறு மத்திய அரசை உத்தரவிட வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி தாக்கல் செய்த மனுவில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை இவ்வாறு கூறி இருந்தது.

இந்தி மட்டும்தான்
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுதும் கடிதங்களுக்கு ஒன்றிய அரசின் சார்பில் இந்தி மொழியில் மட்டுமே பதில் அனுப்பப்பட்டு வந்தது.

பாரபட்சமான அணுகுமுறை
ஒன்றிய அரசின் இத்தகைய பாரபட்சமான அணுகுமுறையினை எதிர்த்தும், அலுவல் மொழிச் சட்டம் 1963 பிரிவு (3)ற்கு முரணாக ஒன்றிய அரசு நடந்து கொள்வதை கைவிட வலியுறுத்தியும், மேலும் இச்சட்டத்தின் பிரிவு 226ன் படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அவரவர்களின் தாய்மொழியிலேயே பதிலளிக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

நல்ல தீர்ப்பு
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை, ஒன்றிய அரசு அலுவல் மொழிச் சட்டம் 1963-ஐ முழுமையாக பின்பற்ற வேண்டும் எனவும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு இனி அவர்கள் அனுப்புகிற கடிதங்களின் மொழியிலேயே பதில் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசின் தொடர்ச்சியான இந்தி மொழி திணிப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்கும் வகையிலும் அளிக்கப்பட்டுள்ள இத்தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

எங்களுக்கு வெற்றி
இந்தியை மட்டும் முதன்மை படுத்தும் மோடி அரசின் போக்கை இடித்துரைக்கும் விதமாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது. மொழித் திணிப்புக்கு எதிராகவும், அனைத்து அட்டவணை மொழிகளுக்கும் சம உரிமைகளை வலியுறுத்தியும் நீண்ட நெடிய போராட்டங்களை நடத்தி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் முயற்சிக்கு கிடைத்திருக்கும் மற்றுமொரு வெற்றியாகவே இத்தீர்ப்பும் அமைந்திருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

சு. வெங்கடேசனுக்கு பாராட்டு
மேலும் தாய் மொழியின் உரிமைக்காகவும், ஆட்சி மொழி, வழக்காடு மொழி உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் தமிழ் மொழியின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மொழி உரிமைகளுக்கான போராட்டங்களை எதிர்காலத்திலும் வலுவாக தொடரும் எனவும் தெரிவிக்க விரும்புகிறோம். சரியான நேரத்தில் வழக்கு தொடுத்த கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு. வெங்கடேசன் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.












Click it and Unblock the Notifications