சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பேச்சு மூச்சின்றி கிடப்பவரை! 6 நிமிடத்துக்குள் காப்பாற்றும் சிபிஆர் சிகிச்சை! டாக்டர் பரூக் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: மாரடைப்பு, நெஞ்சு வலி ஏற்படும் போது 6 நிமிடங்களுக்குள் சிபிஆர் செய்தால் உயிரை கூடுமானவரை காப்பாற்றி விடலாம். அந்த சிபிஆரை எப்படி செய்வது என்பது குறித்து அரசு பொது நல மருத்துவர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா கூறியதாவது: கார்டியோ பல்மனரி ரிசஸிடேசன் (Cardio pulmonary Resuscitation) எனும் இந்த உன்னத உயிர்காக்கும் முதலுதவி குறித்து அனைவரும் அறிந்திருக்க வேண்டும். இந்த முதலுதவி குறித்த அறிவு நாளை நமது சொந்தங்களின் /நண்பர்களின் / அலுவலகத்தில் உடன் வேலை பார்ப்பவர்களின் உயிர்களைக் காப்பதற்கும் உதவியாக இருக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.

நம் அலுலகத்தில் இருக்கிறோம். திடீரென்று அலுவலகத்துக்கு வந்திருக்கும் விருந்தினர் ஒருவர் மூர்ச்சையாகி கீழே விழுகிறார். நாம் பேருந்து நிலையத்தில் / ரயில் நிலையத்தில் வண்டிக்காக காத்திருக்கும் வேலையில் ஒரு முதியவர் திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு மூர்ச்சையாகி சரிகிறார். பேச்சு மூச்சின்றி கிடக்கிறார். அவரை நம்மால் காப்பாற்ற முடியுமா? முடியும்.. Cardio pulmonary Resuscitation எனும் CPR தெரிந்திருந்தால் நம்மால் முடியும்.

Dr Farook Abdulla says about CPR which is a life saving technic

இதய சுவாச நிறுத்தம் ( cardio respiratory arrest) என்பது இதய ரத்தநாள அடைப்பினால்/ இதய துடிப்பு முடக்கத்தினால் ஏற்படும் நிகழ்வாகும்.
ஒருவருக்கு இதய சுவாச முடக்கம் ஏற்பட்ட முதல் ஆறு நிமிடங்களுக்குள் cardio pulmonary resucitation எனும் CPR செய்ய வேண்டும். இது மூளை செயலிழப்பை தடுக்கும். நமது மூளைக்கு தொடர்ச்சியாக 6 நிமிடங்களுக்கு மேல் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டால் நிரந்தர கோமா நிலைக்கு சென்று விடும் வாய்ப்பு அதிகம். இந்த முதலுதவியை செய்ய மனமும் இந்த முதலுதவி குறித்த அறிவு மட்டும் இருந்தால் போதும்.

மருத்துவராகவோ ? செவிலியராகவோ? மருத்துவத் துறையை சேர்ந்தவராகவோ? இருக்க வேண்டுமென்ற எந்த கட்டாயமும் இல்லை. ஒருவர் நம் முன் மூர்ச்சையாகி விழுந்தால் உடனே நமது முதல் உதவியான சி.பி.ஆரை ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முன் அவசர மருத்துவ சிகிச்சைக்கான அழைப்பு எண்ணான 108 இற்கோ அல்லது அந்தந்த நாட்டின் அவசர உதவி எண்ணிற்கோ அழைக்க வேண்டும்.
பிறகு அருகில் நமக்கு உதவியாக ஒருவரையோ அல்லது உடன் சேரும் மக்களையோ சேர்த்துக் கொள்ள வேண்டும். இதோ ஆரம்பிப்போம் நம் உயிர்காக்கும் முதலுதவியை....

நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயங்கள்
1. ரத்த ஓட்டம்
( Circulation)
2. சுவாசப்பாதை( Airway)
3. சுவாசித்தல் (Breathing)
4. செயற்கை இதய முடுக்கி ( Defibrillation)

உங்கள் முன் ஒருவர் திடீரென்று சரிந்து விழுந்தாலோ /ஒருவர் மயங்கி கீழே விழுவதை நாம் பார்க்காத நிலையில் அல்லது அவர் தண்ணீரில் மூழ்கி இப்போது தான் தூக்கி வருகிறார்கள் அல்லது விபத்தில் அடிபட்டவர் என்றால் அவரை கடினமான தரையில் தலை மேலாக படுக்க வைக்க வேண்டும். பிறகு அவரது கழுத்தின் பக்கவாட்டில் விரல்களை அழுத்தி கரோடிட் தமனியின் நாடித்துடிப்பு இருக்கிறதா என்று பாருங்கள். குழந்தைகளுக்கு கையின் முழங்கை உள்பகுதி தமனியிலோ (Brachial artery) அல்லது இடுப்பு பகுதி தமனியிலோ( femoral artery) நாடித்துடிப்பு பார்க்கலாம்.

கரோடிட் தமனியின் நாடித்துடிப்பு இருக்கிறது என்றால் அவருக்கு இதயத்துடிப்பு இருக்கிறது என்று அர்த்தம். எனவே ரத்த ஓட்டமும் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். அடுத்தபடியாக அவரது சுவாசப்பாதை( Airway) சரியாக இருக்கிறதா? என்று கவனிக்க வேண்டும். சுவாசப்பாதையில் சளி/மண் போன்றவை இருந்தால் அவற்றை உடனே நீக்கி விட்டு நாம் சுவாசம் தர தயாராக வேண்டும். அவரது சுவாசப்பாதை சீராக இல்லை என்பதை கணித்தால் காதுகளுக்கு கீழே உள்ள தாடை எலும்பை முன்னோக்கி அழுத்தினால் சுவாசப்பாதை சீராகும். மற்றொரு முறையில் நெற்றியில் நம் உள்ளங்கையை வைத்து தலையை பின்னோக்கி அழுத்தி இன்னொரு கை விரல்களை முகவாய்க்கட்டையில் வைத்து தூக்கிப்பிடித்தால் சுவாசப்பாதை சீராகும்.

மேற்சொன்ன இரு நடவடிக்கைகளும் சுவாசப்பாதை சீராக இல்லாமல் இருந்தால் செய்ய வேண்டியவை. உதவி பெறுபவரின் வாயை நன்றாக விரித்து நமது வாயை அத்தோடு எந்த இடைவெளியும் இல்லாமல் பொருத்திக்கொண்டு மூச்சு தர வேண்டும். நிமிடத்திற்கு பத்து முறை மூச்சு வழங்க வேண்டும். அதாவது ஒவ்வொரு ஆறு விநாடிகளுக்கும் ஒருமுறை மூச்சு வழங்க வேண்டும். நாம் மூச்சு வழங்கும் போது அவரது நுரையீரல் விரிந்து சுருங்குகிறதா? என்பதை கவனிக்க வேண்டும். நுரையீரல் விரிந்து சுருங்கினால் தான் நாம் வழங்கும் மூச்சுக்காற்று அவரது நுரையீரல் முழுவதும் சென்று சேர்கிறது என்று பொருள்.

Dr Farook Abdulla says about CPR which is a life saving technic

உள்சென்று சுவாசம் வெளியே வருவதற்கு சில நொடிகள் விட வேண்டும். ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறையும் கழுத்தில் இருக்கும் கரோடிட் தமனியின் நாடித்துடிப்பு இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொண்டே இருக்க வேண்டும். ஒருவேளை கழுத்தில் நாடித்துடிப்பு இல்லாமல் இருந்தால் உடனே நாம் இதய சுவாச மீட்பு முதலுதவியை ஆரம்பிக்க வேண்டும். நெஞ்சுப்பகுதியை அழுத்துவதன் மூலம் இதயத்தை தூண்டுவது தான் முதல் பணி. இதயம் வேலை செய்தால் தான் ரத்த ஓட்டம் மீண்டு வரும். நிமிடத்திற்கு 100 முதல் 120 முறை நெஞ்சுப் பகுதியை அழுத்த வேண்டும். இதை Chest compressions என்று அழைக்கிறோம்.

தோராயமாக ஒவ்வொரு 15 நொடிக்கும் 30 முறை நெஞ்சுப்பகுதியை அழுத்த வேண்டும். பெரியவராக இருப்பின் நமது இரண்டு கைகளையும் விரல்களுக்குள் கோர்த்துக்கொண்டு உள்ளங்கையை நெஞ்சுக்கூட்டு எலும்பின் கீழ்பகுதியில் வைத்து 2 முதல் 2.4 இஞ்ச் அளவு உள்ளே நெஞ்சாங்கூடு செல்லுமளவு அழுத்தம் கொடுக்க வேண்டும். அழுத்தங்கள் வேகமாகவும் பலம் மிக்கதாகவும் இருக்க வேண்டும். இந்த அழுத்தம் கொடுப்பது அதிகமான உடல் உழைப்பையும் ஆற்றலையும் வாங்கும் செயல். ஆனாலும் ஒரு உயிரை காக்கும் முதலுதவியில் மிகப்பெரும் பங்கு இந்த நெஞ்சு அழுத்தங்களுக்கு உண்டு. ஆம்... மீளாத்துயில் கொள்ள காத்திருக்கும் இதயத்தை தட்டி எழுப்பும் கடைசி பெரும் முயற்சியல்லவா இது?

கடினமாக இருந்தாலும் அந்த உயிர் மீண்டும் எழும் போது வரும் மகிழ்ச்சியில் பட்ட கஷ்டங்கள் பறந்து போகும். ஒரு இதய சுவாச மீட்பு சுழற்சி ( CPR cycle ) என்பது 30 நெஞ்சுப்பகுதி அழுத்தங்களும் 2 மூச்சு தருதலும் சேர்ந்ததாகும். இரண்டு பேர் மீட்புப்பணியில் இருந்தால் ஆறு நொடிகளுக்கு ஒருமுறை ஒருவர் மூச்சு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். மற்றொருவர் பதினைந்து நொடிகளுக்குள் முப்பது முறை நெஞ்சுப்பகுதியை அழுத்தம் கொடுக்க வேண்டும். இரண்டு பேர் இருப்பதால் மூச்சு கொடுப்பதும் நெஞ்சை அழுத்துவதும் ஒரே நேரத்தில் நடந்து கொண்டே இருக்கலாம். ஒன்றுக்காக மற்றொன்றை நிறுத்த தேவையில்லை. ஒருவர் மட்டும் மீட்புப்பணியில் இருந்தால் முப்பது முறை நெஞ்சை அழுத்தி விட்டு இரண்டு முறை மூச்சு கொடுத்து விட்டு தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

Dr Farook Abdulla says about CPR which is a life saving technic

மீட்புப்பணியில் இரண்டு பேர் இருந்தால் ஒவ்வொரு ஐந்து சூழற்ச்சிக்கும் மூச்சு கொடுக்கும் பணியையும் நெஞ்சை அழுத்தும் பணியையும் மாற்றி மாற்றி செய்யலாம். இது இருவரும் சோர்வாவதை தடுக்கும். இதுவே மூர்ச்சையாகி இருப்பது குழந்தையாக இருந்தால் நெஞ்சு அழுத்தம் கொடுப்பதற்கு ஆள்காட்டி மற்றும் நடுவிரல் இரண்டையும் ஒன்றாக இணைத்து நெஞ்சு நடுஎலும்பின் கீழ் பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும். அழுத்தத்தின் போது நெஞ்சுக்கூடு சுமார் ஒன்றரை இஞ்சு உள்சென்று வெளிவர வேண்டும். குழந்தைகளுக்கு சுவாசம் கொடுப்பது நிமிடத்திற்கு 12முதல் 20 என்ற அளவில் இருக்க வேண்டும். நெஞ்சின் மீது அழுத்தம் கொடுப்பது நிமிடத்திற்கு 100 முதல் 120 தடவை கொடுக்க வேண்டும். நாம் சி.பி.ஆர் செய்து கொண்டிருக்கும் போதே ஆம்புலன்ஸ் வந்துவிட்டால் அதில் இருக்கும்
டீபிப்ரில்லேட்டர் எனும் இதயத்துடிப்பு ஊக்கியை வைத்து மின்சார அதிர்ச்சி கொடுக்க தயாராக வேண்டும்.

துயில் கொண்ட இதயத்தை எழுப்பும் முயற்சியில் தலையாயது "டீஃபிப்ரில்லேசன்" தான். இதை பயிற்சி பெற்றவர்கள் செய்வார்கள். ஒருவேளை பயிற்சி பெற்ற நபர் இல்லாத இடத்தில் அந்த டீஃபிப்ரில்லேட்டரில் குறிப்பிடப்பட்டிருக்கும் குறிப்புகளை படித்து அனைவராலும் செய்ய முடியும். டீஃபிப்ரில்லேசன் கருவியை உபயோகிக்கும் முறைகள் பின்வருமாறு:
கருவியை "ஆன்" செய்ய வேண்டும். இப்போது வரும் டீபிப்ரில்லேட்டர் தானியங்கி முறையில் இயங்குபவை .இவற்றை AED automated External Defibrillator என்று அழைக்கிறோம் . இதை யார் வேண்டுமானாலும் ஆபத்து நேரத்தில் உபயோகிக்க முடியும். எடை குறைவான மிகவும் காம்பேக்ட் வடிவத்தில் வருகிறது. இந்த AEDஐ திறந்தவுடன் அது ஆங்கிலத்தில் கட்டளைகளை பிறப்பிக்கும்.

முதலில் நோயாளி அணிந்திருக்கும் மேலங்கியை முழுவதும் களைய வேண்டும். உள்ளாடைகள் முதற்கொண்டு களையப்பட்டிருக்க வேண்டும். பிறகு இயந்திரத்தில் இருக்கும் இரண்டு ஒட்டும் வகையில் உள்ள பேடுகளை வலதுபக்க நெஞ்சுப்பகுதியில் கழுத்து எலும்புக்கு கீழும். இன்னொரு பேடை , இடது பக்கம் அக்குள் பகுதிக்கு சற்று கீழும் ஒட்ட வேண்டும். இப்போது AED ஆனது நாம் சி.பி.ஆர் செய்வதை சிறிது நேரம் நிறுத்தச் சொல்லும். சிறிது நேரம் நிறுத்த வேண்டும். இப்போது AED தானியங்கி முறையில் நோயாளியின் இதயத்துடிப்பை அளவிடும். இதயத்துடிப்பின் நேரத்தை துல்லியமாக கணித்து தேவையான நேரத்தில் மின்சாரத்தை பாய்ச்ச தயாராகும். மின்சாரத்தை பாய்ச்சுமுன் நமக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பும்.

யாரும் நோயாளியை தொடாதீர்கள். நோயாளியை தொட்ட எதையும் தொடாதீர்கள் என்பது அந்த எச்சரிக்கை சமிக்ஞை.. நாம் அனைவரும் நோயாளி மீதும் அவரை படுக்க வைத்திருக்கும் படுக்கையின் மீதிருந்தும் உடனே கைகளை எடுத்து விட வேண்டும்.
அதுவே தக்க சமயத்தில் மின்சார அதிர்ச்சி கொடுத்து நம்மை மீண்டும் CPR கொடுக்க சொல்லி கட்டளையிடும். அதுவே இதயத்துடிப்பை கண்காணித்து தேவையான நேரத்தில் இதயம் துடிப்பு சீராகும் வரை அவ்வப்போது மின்சார அதிர்வுகளை கொடுக்கும். நிலைமை சீராகும் வரை AED ஐ கழற்றி விடக்கூடாது. AED கருவி தினந்தோறும் பல லட்சம் உயிர்களை காத்துக்கொண்டிருக்கிறது. நமது ஊர்களிலும் வானூர்தி நிலையங்கள் , மக்கள் கூடும் ரயில் நிலையங்களில் இந்த கருவி சுவற்றில் பொருத்தப்பட்டிருக்கிறது.

Dr Farook Abdulla says about CPR which is a life saving technic

இதைப்பற்றி ஞானம் இருந்தால் யார் வேண்டுமானாலும் எடுத்து உபயோகித்து உயிர்காக்க முடியும். கட்டாயம் AED வரும் வரை CPR தொடர வேண்டும். அரை மணி நேரம் முதல் ஒரு மணிநேரம் ஆனாலும் சரியே. சி.பி.ஆரை நிறுத்தக்கூடாது. இதயத்துடிப்பும் சுவாசமும் சீரடைந்து விட்டது உறுதியான பின் அவர் மூர்ச்சை நிலையில் இருந்து சுய நினைவுக்கு வந்த பின் Recovery position இல் வைக்க வேண்டும்.
ரிகவரி என்பதை "மீண்டு வருதல்" என்று பொருள் கொள்ளலாம்.

1.ஒருபக்கமாக பக்கவாட்டில் நோயாளியை படுக்க வைக்க வேண்டும்
2.அவரது தலை தரையில் படுமாறு இருக்க வேண்டும்
இவர் இந்த நிலையில் வாந்தி எடுத்தாலும் நுரையீரலுக்குள் புரை ஏறாமல் இருக்கும்.
3.அவர் மூச்சு விடுவதற்கு ஏதுவாக நெஞ்சாங்கூடு அழுத்தப்படாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
4.கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டிருக்கிறதா? என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும். கழுத்து எலும்பு முறிந்த சூழ்நிலையில் தலையை லேசாக தூக்கினாலும் முக்கிய நரம்புகள் அழுத்தப்பட்டு அதனால் உயிர் போகும் வாய்ப்பு அதிகம். அங்கிருந்து அவரை மருத்துவமனைக்கு பக்குவமாக ஆம்புலன்சில் அழைத்துச்செல்லலாம்.

இத்தகைய சிறப்பான உயிர்காக்கும் முதலுதவியை இனி நாமும் செய்ய முடியும் என்று நம்புகிறேன். 2014 இல் நடந்த ஆராய்ச்சியில் மருத்துவமனைக்கு வெளியே நடக்கும் இதய சுவாச நிறுத்தங்களில் (cardio respiratory arrest) மிக சீக்கிரமே CPR ஆரம்பிக்கப்பட்டவர்களில் / அருகில் இருப்பவர் CPR ஆரம்பித்தவர்களில் 45% பேர் உயிர் பிழைத்துள்ளார்கள் என்கின்றன. அமெரிக்க இதய சங்கம் " இதய சுவாச மீட்பு சிகிச்சையை சீக்கிரமே ஆரம்பித்தால் வருடத்திற்கு ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் உயிர்களை காக்க முடியும்" என்கிறது. இந்தியா போன்ற மக்கள் தொகை வளமான நாட்டில் சி.பி.ஆர் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஞானம் அனைவருக்கும் இருக்குமாயின் பல உயிர்கள் கட்டாயம் காக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கவியலாது.

எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு ப்ராக்டிகல் வகுப்புகளில் இந்த சிபிஆர் கற்றுக் கொடுத்து ப்ராக்டிகல் பரீட்சையில் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய விசயமாக அனைத்து பள்ளிகளிலும் ஆக்குவது நல்ல பலனைத் தரும். கல்லூரிகளிலும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டிய தலைப்பு. அனைத்து அரசு தனியார் அலுவலர்களுக்கும் அடிப்படை உயிர்காக்கும் முதலுதவி குறித்த கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகள் நடத்தி இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது நல்ல பலனைத் தரும். திரைப்படங்களில் CPR குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

English summary
Sivagangai Doctor Farook Abdulla says about CPR which is life saving technic which is to be done within 6 minutes for the patients those who have cardiac arrest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X