பாஜகவை கழற்றிவிட்ட நிதிஷ் குமார்.. மனமார வாழ்த்தி சமூக நீதி சக்தியோடு இணைய கி வீரமணி அழைப்பு!
சென்னை: பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்து விலகி ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்தி மீண்டும் முதல் அமைச்சராகி உள்ள நிதிஷ் குமாருக்கு கி வீரமணி மனமார வாழ்த்து தெரிவித்து உள்ளதோடு, 2024 நாடாளுமன்ற தேர்தலில் சமூக நீதி சக்தியோடு சேர்ந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
பீகாரில் பாஜகவும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சியை நடத்தி வந்தன. நிதிஷ் குமார் முதல் அமைச்சராக இருந்தார்.
சமீப காலமாக பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. பாஜக தலைவர்கள் நேரிடையாக நிதிஷ் குமாரை விமர்சித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த நிதிஷ் குமார் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதை நிறுத்தினார்.

முடிவுக்கு வந்த பாஜக கூட்டணி
இதனால் விரைவில் பீகாரில் பாஜக -ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வரும் என கருத்து தெரிவிக்கப்பட்டது. அதன்படி நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் பாஜகவின் கூட்டணியில் இருந்து வெளியேறினார். இதன்மூலம் 2 ஆண்டுகளாக பீகாரில் நடந்து வந்த பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது.

மீண்டும் முதல்வரான நிதிஷ் குமார்
இருப்பினும் நிதிஷ் குமார், பிரதான எதிர்க்கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். இதையடுத்து நிதிஷ் குமார் 8 வது முறையாக முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றார். விரைவில் அமைச்சரவை அமைக்கப்பட உள்ளது. இதில் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்குவது என்ற விவாதம் நடைபெற்று வருகிறது.

வீரமணி வாழ்த்து
பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேறியதற்கு இந்தியாவில் உள்ள பாஜகவுக்கு எதிரான கொள்கைகள் கொண்ட கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் தான் பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு திராவிடர் கழக தலைவர் கி வீரமணி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛வணக்கம் நிதிஷ் குமார் ஜி. 8 வது முறையாக பீகார் மாநில முதல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உங்களை மனதாகர வாழ்த்துகிறோம்.சமூக நீதிக்காக பாடுபடும் அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் உங்களை வரவேற்கிறோம்.

வலிமையான கூட்டணி
இதுதான் சரியான தருணம். நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும். சிறந்த கருத்தியல் புரிதலுடன் ஆதரவு திரட்டப்பட்டுள்ளது. இது காலத்தின் தேவை. தற்போது நீங்கள் பெற்றுள்ள அரசியல் ஆதரவு என்பது எதிர்காலத்தில் வலிமையான கூட்டணியாக மாற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

தமிழகத்தில் திராவிட மாடல்
தமிழ்நாட்டில் முற்போக்குக்கான நகர்வு ஏற்கனவே திராவிட மாடல் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஜனநாயகத்தையும், கூட்டாச்சியையும் காப்பாற்ற அனைத்து சமூக நீதி சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். விரும்புகிறோம்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications