• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.. மரியாதைக்குரிய "வாத்தியார்".. மறக்க முடியாத எம்ஜிஆர்!

|

சென்னை: வசதியான குடும்பத்தில் பிறந்து தந்தையின் மறைவுக்கு பிறகு வறுமைக் கோட்டுக்கு கீழே வாழவேண்டிய அவலத்திற்கு ஆளாகி, பிற்காலத்தில் ஏராளமாக சம்பாதித்து பணத்தை ஏழை எளிய மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளலாக வாழ்ந்து மறைந்த எம்ஜிஆரின் பிறந்தநாள் இன்று! இவரது அரசியல் பணி, வள்ளல் தன்மையை தமிழகம் கண்கூடாக பார்த்தது எனினும், திரைப்பட பார்வையில் எம்ஜிஆரின் பார்வையை பகுத்தறிந்து பார்ப்பது குறைவுதான் என்று சொல்ல வேண்டும். அந்த வகையில் எம்ஜிஆரின் சினிமாக்களை கொண்டே அவரது இந்த பிறந்தநாளை நினைவுகூர்வதும் வணக்கத்திற்குரிய மரியாதையே!

பல்லாண்டு கால நாடக வாழ்விற்கு பிறகு 1935-ல் சதிலீலாவதி என்ற படம்தான் எம்ஜிஆரின் முதல்படம்.. இதில் ஒரு சாதாரண துணை பாத்திரத்தில் தோன்றினார்.. சுமார் 13 ஆண்டு காலம் தொடர்ந்து சின்ன சின்ன வேடங்களிலேயே அவர் நடித்து வந்தார். 1945-ல் அறிஞர் அண்ணாவின் தொடர்பு கிடைத்தபிறகு, அதுவரை காங்கிரஸ் உணர்வு கொண்டிருந்த எம்ஜிஆர் கொஞ்சம் கொஞ்சமாக திராவிடர் இயக்கத்திற்கு மாற துவங்கினார். அண்ணா எழுதிய "சிவாஜி கண்ட சாம்ராஜ்யம்" என்ற நாடகத்தில் பிரதான வேடத்தில் நடிக்க வாய்ப்பு தரப்பட்டது.

கட்சி நாடக மேடையில் நடிக்க தயங்கியதால், கடைசியில் எம்ஜிஆர் அதில் நடிக்கவில்லை என்று ஒரு சாராரும், அண்ணா எழுதிய அடுக்குமொழி வசனங்களை அவற்றிற்குரிய உணர்ச்சியோடும், உச்சரிப்போடும் பேச இயலாமல் போனதால் எம்ஜிஆர் அதில் நடிக்க மறுத்துவிட்டார் என்று இன்னொரு சாராரும் குறிப்பிடுகிறார்கள். இரண்டில் எது சரி? அல்லது இரண்டுமே சரியா? என்ற சர்ச்சைக்குள் நாம் போக வேண்டியதில்லை.. ஏனெனில் சம்பந்தப்பட்ட இருவருமே இப்போது நம் மத்தியில் இல்லை.

கலைஞர் கருணாநிதி

கலைஞர் கருணாநிதி

எனினும், என்எஸ்கே, கலைஞர் கருணாநிதி, கவியரசு கண்ணதாசன் போன்ற திராவிட இயக்க தலைவர்களுடன் எம்ஜிஆரின் தொடர்பு நீடித்தது. சினிமாவை பொறுத்தவரை 1950-க்கு பிறகுதான் எம்ஜிஆருக்கு ஏறுமுகம் என்று சொல்ல வேண்டும்.. அது முதற்கொண்டு தன் வாழ்நாளின் இறுதிவரை கதாநாயகனாகவே வாழ்ந்தார். எம்ஜிஆரின் புகழுக்கு பெரிதும் காரணமாய் அமைந்த விஷயங்கள் 2 ஆகும். ஒன்று, அவர் கலந்திருந்த திராவிட இயக்கம், மற்றொன்று திராவிட இயக்கம் மற்றும் மற்றும் மார்க்சிய சிந்தனையாளர்களின் படைப்புகள் ஆகும். ஆரம்பத்தில் வெளிவந்த எம்ஜிஆர் படங்களில் பெரும்பாலும் திராவிடர் இயக்க சிந்தனையாளர்களாலேயே எழுதப்பட்டவை. இவற்றில் பெருவாரியான படங்களின் கதைவசனங்கள் கலைஞருக்கும், கண்ணதாசனுக்கும் மட்டுமே சொந்தமாகும்.

ஹீரோயிஸம்

ஹீரோயிஸம்

பொதுவாக, எம்ஜிஆரின் திரைப்படங்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.

1. திராவிட இயக்க படங்கள்

2.சமூக கதைகளை உள்ளடக்கிய படங்கள்

3. ஹீரோயிஸத்தை அடிப்படையாக கொண்ட ஃபார்முலா படங்கள்.

ஆரம்ப படங்களில் மாமன்னராகவும், மன்னராட்சியின் கொடுமைகளை எதிர்க்கும் கலகக்காரனாகவும், அரசுக்கு எதிராக சாமான்ய மக்களை திரட்டும் போராளியாகவும் எம்ஜிஆர் சித்தரிக்கப்பட்டார். இரண்டாவதாக சமூக படங்கள்தான் மக்களிடம் எம்ஜிஆருக்கு பிரபலத்தை தர ஆரம்பித்தது.

நெருக்கடி

நெருக்கடி

ஆனால், 1960-ல் இருந்து தமிழ்த்திரையின் போக்கு வியப்பூட்டும் அளவுக்கு மாற ஆரம்பித்துவிட்டது.. ஸ்ரீதர், கேஎஸ்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட புது புது இயக்குனர்கள் அடிப்படை பிரச்சனைகளையும், கூட்டுக்குடும்பத்தின் உள் முரண்பாடுகளையும் உள்ளடக்கிய திரைப்படங்களை வெளியிட்டனர். சரித்திர சம்பவங்கள், கத்தி சண்டைகள், வீரதீர சாகச செயல்கள் எல்லாம் அப்போது பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டன. அதனால் எம்ஜிஆர் ஒரு நெருக்கடியில் நின்றார்.

உத்திகள்

உத்திகள்

ஒரு புதிய பாதையை, புதிய பாத்திர படைப்பை அவர் தேர்வு செய்ய வேண்டியதாயிற்று.. மல்யுத்தம், குத்துச்சண்டை, வாள்சண்டை போன்றவை இனி எடுபடாது.. அனைத்தும் காலாவதியாகிவிட்டன. அதனால் சமூக படங்களில் நடிப்பது என்ற முடிவுக்கு வந்தார். கத்தி சண்டைகளுக்கு பதில் நடனங்களில் கவனம் செலுத்தினார். சண்டை காட்சிகளைக்கூட சரித்திர கதைகளில் இருந்த பாணியை மாற்றி புதிய உத்திகளை கையாண்டார். குடும்ப தலைவன், தாய் சொல்லை தட்டாதே, பாசம், தாயை காத்த தனயன், தர்மம் தலைகாக்கும், பணத்தோட்டம், பெரிய இடத்துபெண், தெய்வதாய், படகோட்டி, பணம் படைத்தவன், அன்பே வா, குடியிருந்த கோயில், கண்ணன் என் காதலன், ஒளிவிளக்கு போன்ற எண்ணற்ற சமூகப்படங்கள் வெளிவந்தன.

வீழ்த்தினார்

வீழ்த்தினார்

கலாப்பூர்வ பார்வையில் அணுகுகிறபோது இப்படங்கள் எல்லாம் இரண்டாம்பட்சமானவையே.. அழகியலோ, கலை நுணுக்கமோ, உள்ளத்தை உருக வைக்கும் உணர்ச்சி குவியலோ இப்படங்களில் இருக்காது என்பது உண்மைதான். ஆனால் சமூகவியல் கண்ணோட்டத்தில் பார்க்கிறபோது, இப்படங்களில் முதல்தரமானவையாய் விளங்கின. மது அருந்துதல், சிகரெட் பிடித்தல், சூதாடுதல், கற்பழிப்பு, பெண்களை ஏமாற்றுவது, வட்டிக்கொடுமையால் ஏழைகள் வாடுவது, திருடுவது, அடுத்தவரை கெடுப்பது போன்ற சமூக தீமைகளை எம்ஜிஆர் கடுமையாக எதிர்த்தார். பாதிக்கப்பட்ட பெண்களை வீரதீர சண்டைகளிட்டு காப்பாற்றினார்.. ஏழைகளுக்கு உதவினார்.. தாயை தெய்வமென வணங்கினார்.. பெண்களை தாயாக போற்றினார்.. அக்கிரமக்காரர்களை, ஆணவக்காரர்களை, காமப்பிண்டங்களை தனி ஆளாக நின்று வீழ்த்தினார்.

அறநெறிப்பண்பு

அறநெறிப்பண்பு

அதனால் ஒரு புறம் பெண்களும், மறு புறம் இளைஞர்களும் எம்ஜிஆருக்கு அபிமானிகளாய் மாறினார்கள்.. அறநெறிப் பண்புகளை வலியுறுத்தியதால் நடுத்தர மக்களும் அவரை நேசித்தார்கள். இதற்கிடையே ஏற்கனவே திராவிட எழுத்தாளர்களின் படைப்புகளாலும், திமுகவின் அங்கமாக எம்ஜிஆர் இருந்ததாலும் எம்ஜிஆருக்கு ஒரு தனிப்புகழும் செல்வாக்கும் இருந்தது. திராவிட இயக்க தொண்டர்களோடு பெண்களும், இளைஞர்களும், நடுத்தர வர்க்க படிப்பாளிகளும் இணைந்ததால் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக எம்ஜிஆர் உயர்ந்தார். 60 முதல் 70-ம் ஆண்டுகளிலும் முடிசூடா மன்னனாகவே வலம்வந்தார்.. "என் இதயக்கனி" என்று அண்ணாவே பாராட்டும் அளவுக்கு செல்வாக்கு கொடி கட்டி பறந்தது.

3 வித தாக்கம்

3 வித தாக்கம்

இறுதியில் எம்ஜிஆரின் திரைப்படங்கள் 3 வித தாக்கத்தை திரைக்கு வெளியே உருவாக்கியது.

1. சினிமாவில் முதன்முதலாக ஹீரோயிசம் உருவாகி வளர்ந்தது.

2. அடித்தட்டில் உள்ள ஏழை மக்கள் புதிய உத்வேகம் பெற்று அகரீதியாகவும், புறரீதியாகவும் அவர்களை மாற்றியது.

3. அரசியல் செல்வாக்கு பெற்று - ரசிகர்களை வாக்காளர்களாக மாற்றி - ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு புதுமையை நிகழ்த்தியது.

எத்தனையோ கலைஞர்கள் எம்ஜிஆருக்கு முன்னும், பின்னும் நடித்து புகழ்பெற்றாலும், அவர்கள் அனைவரும் அந்தந்த கதாபாத்திரமாக மட்டுமே கருதப்பட்டார்கள்.. ஆனால் எம்ஜிஆர் படங்கள் நேர் எதிரானவை.. மக்கள் அவர் எந்த கேரக்டரை ஏற்றாலும், அதை நிஜ எம்ஜிஆராகத்தான் பார்த்தார்கள்.. எம்ஜிஆர் நல்லவர், தண்ணி அடிக்க மாட்டார், சிகரெட் பிடிக்க மாட்டார், தன் மனைவியையோ காதலியையோ தவிர பிற பெண்களை தாயாக கருதுவார்.. தீமைகளை எதிர்த்து போராடுவார்.. ஏழைகளை பாதுகாப்பார் என்றெல்லாம் நிஜமாகவே மக்கள் நம்பினார்கள். அதனால் ஹீரோவாக சினிமாவில் மட்டுமல்ல.. திரைக்கு வெளியேயும் உருவானார் எம்ஜிஆர்.

பாடல்கள்

பாடல்கள்

மற்ற ஹீரோக்களின் வாழ்க்கை ஸ்டுடியோக்கள், ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் முடிந்து போயிற்று என்றால், எம்ஜிஆரோ, இதையெல்லாம் தாண்டி, அரசியல் மேடைகள், மாநாடு, பேரணிகளிலும் பங்கேற்றார். ஏழை எளிய மக்களுக்கும், பொதுநல அமைப்புகளுக்கும் வாரி வழங்கிய வள்ளலாகவும் திகழ்ந்தார்.. தியேட்டரில் இருந்த ரசிகர்கள் காலப்போக்கில் ரசிகர் மன்ற தொண்டர்களாகவும், அரசியல் தலைவர்களாகவும், இறுதியில் வாக்காளர்களாகவும் மாறினார்கள். இதற்கு இன்னொரு காரணம் அவருக்காக பாடப்பட்ட பாடல்கள், எழுதப்பட்ட உணர்ச்சிகரமான வரிகள்தான்.

ஏழைகளை பற்றியும், உழைப்பின் உயர்வு குறித்தும் நற்பண்புகளின் நன்மை குறித்தும் பல பாடல்கள் எம்ஜிஆருக்காகவே எழுதப்பட்டன... இந்த பாடல்கள் இப்படித்தான் அமைய வேண்டும் என்பதில் அவர் மிகுந்த கவனமும் ஆர்வமும் கொண்டிருந்தார்.. சாதாரண டூயட் பாட்டு என்றால்கூட கண்ணியமும் நயமும் கலந்திருப்பதை இப்போதும் நாம் காண முடியும்.

அடித்தள காரணம்

அடித்தள காரணம்

அவர் ஏற்றிருந்த கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே பெரும் மாறுதலை உருவாக்கியது. படகோட்டி வந்தபோது, மீனவர்கள் எம்ஜிஆரை தங்களில் ஒருவராகவும், ரிக்‌ஷாக்காரன் வந்தபோது ரிக்‌ஷா இழுத்தவர்கள் அவரை தங்களில் ஒருவராகவும் பாவித்தார்கள். அது மட்டுமல்ல.. தங்கள் தொழில் மீது ஒரு பற்றும் பெருமையும் ஈடுபாடும் அவர்களுக்கு உண்டாயிற்று.

அழுக்கும் கிழிசலும் கொண்ட கந்தலாடையுடன் ரிக்‌ஷா இழுத்தவர்கள், எம்ஜிஆரை பார்த்து முக்கால் பேண்ட்டையும், சட்டையையும் அணிந்தார்கள்.. அதேபோல் விவசாயி, தொழிலாளி, பஸ் கண்டக்டர், டிரைவர், அனாதை, போலீஸ்காரன், நரிக்குறவர், போன்ற பல கதாபாத்திரங்களை எம்ஜிஆர் ஏற்றார்.. இப் பாத்திரப் படைப்புகளில் எம்ஜிஆரை கண்டு விவசாயி, தொழிலாளி, ரிக்‌ஷாக்காரன் போன்றோர் தன்னையே மறந்தனர். எம்ஜிஆரின் திரை வெற்றிக்கும், அரசியல் வெற்றிக்கும் இதுவே அடித்தள காரணமாயிற்று.

எட்டாவது வள்ளல்

எட்டாவது வள்ளல்

ஆனால் பல படங்களை ஃபார்முலா படங்கள் என்று அழைக்கப்பட்டாலும், அடிப்படையில் சில அறநெறிப் பண்புகளை வலியுறுத்தின என்பதிலும், ஆபாசமோ, அருவருப்போ இல்லாமல், ஆரோக்கியமான - அன்றாட வாழ்க்கையின் துன்ப துயரங்களை மறந்து கொஞ்ச நேரமாவது தன்னையே மறந்து ரசிக்கும் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருந்தன என்பதிலும் மாற்று கருத்து இல்லை.. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், "வெறும் பொழுதுபோக்கு அம்சமாயிருந்த சினிமாவை மக்களோடும், சமுதாயத்தோடும், இறுதியில் அரசியலோடும் இணைத்து.. ஆட்சியையே கைப்பற்றும் அளவுக்கு மாபெரும் சக்தி படைத்த மகத்தான கலைஞர்தான் எட்டாவது வள்ளல் எனப்படும் மக்கள் திலகம் எம்ஜிஆர்!

 
 
 
English summary
late today chief minister dr mgrs 103rd birthday celebrations
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X