• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

புதிய கல்விக் கொள்கை- அதிமுக அரசின் மவுனம் கல்வி வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்: ஸ்டாலின்

|

சென்னை: புதிய கல்வி கொள்கை குறித்த அதிமுக அரசின் நிலைப்பாடு என்ன என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தி அல்லது சமஸ்கிருதம் வந்தால் மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்புப் போராட்டம்- க. பொன்முடி

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜனநாயக நெறிமுறைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளையும் கிஞ்சித்தும் மதிக்காமல் எதேச்சதிகாரத்தின் உச்சக்கட்டத்தில் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசு, திட்டமிட்டு பல்வேறு உள்நோக்கங்களுடன் திணிக்கின்ற புதிய கல்விக் கொள்கை என்பது, மாநில உரிமைகளுக்கும் - சமூகநீதிக்கும் - இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் - எதிராக இருப்பதுடன், இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தையும் கடும் நெருக்கடி இருளில் தள்ளும் வகையில் அமைந்துள்ளது. தமிழகத்தில் இதனைத் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து கண்டனத்தை உறுதியாகப் பதிவு செய்துள்ள நிலையில், தமிழகத்தை ஆளும் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, தனது டெல்லி எஜமானர்களின் கோபத்திற்கு ஆளாகி விடுவோமோ, எதிர் நடவடிக்கை பாய்ந்துவிடுமோ, என்றெல்லாம் எண்ணி, பயந்து, பதுங்கி, அமைதி காப்பது, தமிழ்நாட்டில் நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் கல்வி வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை விளைவிப்பதாகும்.

MK Stalin statement on AIADMK Govt and NEP

குறிப்பாக, புதிய கல்விக் கொள்கையில், பேரறிஞர் அண்ணா அவர்களின் இருமொழித் திட்டத்திற்கு மாறாக, வலியுறுத்தப்படும் மும்மொழிக் கொள்கை பற்றி அ.தி.மு.க. அரசு உடனே மௌனம் கலைத்தாக வேண்டும். தமிழ்நாட்டில் இந்தி ஆதிக்கத்திற்கு இடமில்லை எனப் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான தி.மு.கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இருமொழிக் கொள்கைத் தீர்மானத்தின் பயனாக, தாய்மொழியாம் தமிழ்மொழி வளர்ச்சி பெற்றதுடன், தொடர்பு மொழியான ஆங்கிலம் வாயிலாகத் தமிழகத்து மாணவர்கள் இன்று உலக அளவில் பெரும் பொறுப்புகளை வகிக்கிறார்கள்; தாய் மண்ணுக்குப் புகழ் சேர்த்து வருகிறார்கள். வட இந்திய மாணவர்களைவிடத் தமிழக மாணவர்கள் பெற்றுள்ள அந்த வளர்ச்சியின் உயரத்தைச் சிதைத்திடும் நோக்கத்தில், இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க முற்படும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து, பேரறிஞர் அண்ணா அவர்களின் திருப்பெயரைக் கட்சியின் பெயரில் இணைத்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசின் நிலைப்பாடு என்ன?

புதிய கல்விக்கொள்கை, இஐஏ இரண்டையும் திரும்ப பெறுக.. திமுக கூட்டத்தில் தீர்மானம்.. ஸ்டாலின் கோரிக்கை

பேரறிஞர் அண்ணா அவர்களின் இருமொழிக் கொள்கைத் திட்டத்தைப் பலி கொடுத்து, தங்களுக்கு மிச்சமிருக்கும் ஆட்சிக்காலத்தை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறதா இந்த அரசு?

எம்.ஜி.ஆர். அவர்களும் ஜெயலலிதா அம்மையாரும்கூட தங்கள் ஆட்சிக்காலத்தில் இந்தி ஆதிக்கத்திற்கு இடம்தராமல் இருமொழிக் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்துவந்த நிலையில், அவர்களுக்கும் சேர்த்தே துரோகம் செய்யத் துணிந்து விட்டதா இன்றைய அ.தி.மு.க அரசு?

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
DMK President MK Stalin has issued statement on New Edcuation Policy.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X