4 தேர்தல்களில் மண்ணைக் கவ்விய அதிமுக! கட்சிக்குள்ளே ’சூது கவ்வும்’ குரூப்? யாரை சொல்கிறார் ஓபிஎஸ்?
சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு காரணம் என்ன என்பது குறித்து நாளிதழ்கள் பிரம்மாண்டமாக அளிக்கப்பட்டுள்ள விளம்பரங்களை ஓபிஎஸ் தரப்பு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்றே கூறலாம் கட்சியில் இருக்கும் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கிட்டத்தட்ட 80% என்ற எண்ணிக்கையிலிருந்து தொண்ணூற்று ஐந்து சதவீதமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தரும் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நீண்ட விளக்கம்
அதே நேரத்தில் ஒரு சில மாவட்டச் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் தலைமைக்குழு உறுப்பினர்கள் ஓ பன்னீர்செல்வம் பக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருசில மாவட்ட செயலாளர்கள் எந்தப் பக்கமும் சாராமல் இறுதியில் வெற்றி பெறுவது யாரோ அவர் பக்கம் நிற்கலாம் என்ற முடிவுடன் இருக்கின்றனர். இந்த நிலையில்தான் தமிழகம் முழுவதும் இன்று காலை வெளிவந்த பல முன்னணி நாளிதழ்களில் ஓபிஎஸ் தரப்பிலிருந்து பிரம்மாண்ட விளம்பரங்கள் தரப்பட்டுள்ளது. அதில் பல முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன அந்த வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக பெற்ற தோல்விக்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய சூழ்ச்சிகள்
தான் அதிகாரம் மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு குழுவினரால் மிகப்பெரிய சூழ்ச்சிகள் கட்சிக்குள் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் கழக நிர்வாகிகள் யாரெல்லாம் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் கட்சிக்கும் உறுதுணையாக விசுவாசியாக இருக்கிறார்களோ அவர்களை மிரட்டி பணிய வைத்து இருக்கிறார்கள். அவ்வாறு அவர்கள் பணியைவில்லை என்றால் கழகப் பணி எதுவும் கொடுக்காமல் உள்ளடி வேலைகள் செய்து கழகத்தை விட்டு ஓரங்கட்டப்பட்டு இருக்கிறார்கள். மற்றவர்கள் வேதனை பொறுக்க முடியாமல் மாற்றுக் கட்சிக்கு பறந்துவிட்டார்கள். இத்தகைய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு மூத்த உறுப்பினர்கள் கொண்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

உள்ளாட்சி மன்றத் தேர்தல்
அதிமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போது நடத்தவேண்டிய உள்ளாட்சி மன்றத் தேர்தலை 5 ஆண்டு காலமாக நடத்தாதற்கு என்ன காரணம்? அதிமுக எதிர்க்கட்சியாக மாறியபின் தேர்தல் நடத்தப்பட்டதால் கழகத்தினர் பலர் கடனாளியாக மாறியுள்ளனர். முன்பாக உள்ள தேர்தல் நடத்த வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கூறிய போது அவரது கருத்தை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை.?

ஒன்று சேர வேண்டும்
கட்சி என்பது ஒரு குடும்பம் போல எனவே கட்சிக்குள் சில சலசலப்புகள் வருவது இயல்பு. கட்சியில் தனிப்பட்ட ஒரு குழுவினர் தனிப்பட்ட முறையில் அதிகாரம் செலுத்திய காரணத்தினால் ஓ.பன்னீர்செல்வம் அவர்களால் தர்மயுத்தம் நடத்தப்பட்டு தலைமை கழக நிர்வாகிகள் கட்சியிலிருந்து கட்டமைப்பு உருவாக்கப்பட்டு தொண்டர்களின் கைக்கு கட்சி மாறிய பிறகு விலகிச் சென்ற ஒரு குழுவினர் கட்சியின் கோட்பாடுகளின் கொள்கைகளை பின்பற்றி மீண்டும் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால் அவர்களை கட்சிக்குள் இணைத்து மாண்புமிகு அம்மா அவர்களின் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து தொண்டர்கள் இயக்கமாகக் கொண்டு செல்லாமல் தான் மட்டும் அதிகாரம் செலுத்த வேண்டும் என்ற ஒரு சிலரின் குறுகிய அரசியல் கட்சியின் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புத்துணர்ச்சி பெறும்.

வன்னியர் இட ஒதுக்கீடு
நூற்றுக்கும் மேற்பட்ட சாதிகளை உள்ளடக்கிய 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் முறைப்படி கமிட்டி அமைத்து சட்ட விதிகளை பின்பற்றாமல் அவசரத்தில் செயல்பட்ட காரணத்தினால் தென்மாவட்டங்களில் கழகம் தோல்வி பெறுவதற்கு காரணமாக அமைந்தது.

ஓபிஎஸ் உதாசீனம்
புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு இயற்கையாகவே மக்கள் செல்வாக்கும் தொண்டர்கள் செல்வாக்கு மிகுந்த ஓ பன்னீர்செல்வம் அவர்களை முன்னிலைப் படுத்தாமல் உதாசீனப் படுத்தியதை தேர்தல்களில் கழகம் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது" என்பன உள்ளிட்ட ஐந்து காரணங்கள் இந்த புகார் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications