சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுத்தமா வளர்ச்சியில்லை.. மொத்தமா புறக்கணிப்பு.. பிடிஆர்+தங்கம்.. தென் மாவட்டங்களுக்கு விடிவு வருமா?

Google Oneindia Tamil News

சென்னை: "சென்னையிலிருந்து பூந்தமல்லியை கடந்து சென்றால் நகரம் முடிந்து விடும். இப்போது, பூந்தமல்லியை கடந்து செல்லும்போது இருபுறமும் தொழிற்சாலைக்காக இருப்பதற்கு காரணம் தலைவர் கருணாநிதிதான்." என்றார் சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இப்படி சென்னையை சுற்றியும் அல்லது கொங்கு மண்டலத்திலும் தொழில்கள் குவிந்திருப்பதால்தான், தென் மாவட்டங்களில் இருந்து குடும்பம், குடும்பமாக இங்கு இடம் பெயர்ந்து செல்கிறார்கள்.

ஊர் கோவில் கொடைகளுக்கும், தீபாவளி, பொங்கல் திருவிழாக்களுக்கும், கிறிஸ்துமசுக்கும், ரம்ஜானுக்கும் சென்னையிலிருந்தும், கோவையிலிருந்தும், தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்து 4 நாட்கள் தங்கிவிட்டு ஏக்கத்தோடு மீண்டும் பஸ்சோ, ரயிலோ ஏறிச் செல்கிறது தென் மாவட்டத்தைச் சேர்ந்த "ஒரு தலைமுறை." ஆம்.. கடந்த ஒரு தலைமுறையாகவே, தங்கள் சொந்த மாநிலத்திற்கு உள்ளே.. புலம் பெயர் தமிழர்களாகத்தான் வாழ்கிறார்கள் தென் மாவட்ட மக்கள்.

தமிழ்நாடே போதையில் தள்ளாடுகிறது.. இளைஞர்களை காப்பாற்றுங்க முதல்வரே.. ராமதாஸ் வேண்டுகோள்!தமிழ்நாடே போதையில் தள்ளாடுகிறது.. இளைஞர்களை காப்பாற்றுங்க முதல்வரே.. ராமதாஸ் வேண்டுகோள்!

 இயற்கை வளத்தை இழந்த பூமி

இயற்கை வளத்தை இழந்த பூமி

இந்த வரலாறு நெடியது. வைகையும், தாமிரபரணியும், மாதம் தவறாத மழையுமாக செழித்து இருந்த தென் தமிழகம், சீம கருவேல மரங்களின் ஆக்கிரமிப்புக்கு பிறகு மழை பொய்த்ததால், மொத்தமாக இயற்கை வளத்தை இழந்தது. நிலத்தடி நீர் உப்பானது. விவசாயம் இல்லாமல் பிழைக்க வழிதேடி வடக்கு நோக்கி கிளம்பியது சென்ற தலைமுறை. இதனால்தான், சென்னையில் 4ல் ஒரு திருநெல்வேலிக்காரரை பார்க்க முடியும் என்ற நிலை இப்போது உருவாகியுள்ளது.

வாழ்க்கைத் தரம் உயர வழி

வாழ்க்கைத் தரம் உயர வழி

வடக்கே சென்னையை சுற்றி 3 மாவட்டங்களிலும் தொழில்கள் குவிந்து கிடக்கின்றன. மேற்கே, வீட்டுக்கு ஒரு தொழிற்சாலை. இயற்கை வளமும் கொஞ்சுகிறது. இவ்விரண்டையும், ஏக்கத்தோடு பார்க்கும் பல நாள் பாலில்லாத பட்டினி குழந்தையின் மனநிலையோடுதான் இருக்கிறார்கள், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, மதுரை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள். மதுரைக்கு தெற்கே தூத்துக்குடி தவிர்த்து, ஒரு தொழில் பிரதேசத்தை கை நீட்டி காட்ட முடியாத நிலைதானே இப்போதும் இருக்கிறது. பட்டாசு தொழிற்சாலைகளும், தீப்பெட்டி ஆலைகளும் வயிற்றுப் பிழைப்புக்கு வழி சொல்கிறதே தவிர வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பயன்படவில்லை.

அகதிகளை போல இடம் பெயரும் மக்கள்

அகதிகளை போல இடம் பெயரும் மக்கள்

கண்கூடாக, அகதிகளை போல தென் தமிழக மக்கள் இடம் பெயர்ந்து வாழ்வதை அறிந்தும், இதுவரை மாநில அரசுகள் செய்தது என்ன? தென்னந்தோப்புகளை அழித்து சேலத்திலிருந்து சென்னைக்கு கூடுதலாக ஒரு ரோடு போட காட்டிய ஆர்வத்தையும், நிதி திரட்டலையும், தென்னகத்தில், குறைந்தபட்சம், இரு பெரும் ஆலைகள் கொண்டுவர காண்பிக்கவில்லை என்பது காலக் கொடுமையன்றி வேறென்ன. இத்தனைக்கும் இங்கு, வயலும், வனப்பு மிக்க காடும் என, இயற்கை வளம் போய்விடும் என்று குரல் எழுப்பக் கூட வழியில்லை. வள்ளியூர் ஆரம்பித்து சாத்தூர் வரை நெடுஞ்சாலையின் இருபுறமும், சீமை உடைக் காடுகளாக காட்சியளிக்கும் நில அமைப்புதானே உள்ளது. இதை வெட்டி எறிய அரசு கூட தேவையில்லை, அங்குள்ள மக்களே ஆர்வமாகத்தான் இருக்கிறார்கள் தெரியுமா?

தென் மாவட்டங்களுக்கு ஏன் பாரபட்சம்

தென் மாவட்டங்களுக்கு ஏன் பாரபட்சம்

தென் தமிழகத்திற்கு சென்னையிலிருந்து கூடுதலாக ரயில் விட வேண்டும் என்று கேட்கிறோமே, இருக்கும் ரயில்களை குறைக்க.. அவர்களை அவர்களின் நிலங்களிலேயே வாழ வைக்க வழி என்ன என்று இதுவரை கேட்டுள்ளோமா? சென்னையில் ஒரு நெல்லைக்காரரையும், தூத்துக்குடிக்காரரையும் பார்க்க முடியும்போது, இந்த மாவட்டங்களில் ஒரு சென்னைக்காரர் குடும்பத்தோடு குடி பெயர்ந்து வந்துள்ளதை பரவலாக பார்க்க முடிகிறதா? பச்சைக் குழந்தைக்கும் தெரியுமே, இது பாரபட்சமின்றி வேறு என்ன? சமீபத்தில் தென் மாவட்டம் தொடர்பாக கேட்ட பெரிய திட்டமே, எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரை பக்கம் அமைப்பது பற்றிதான். அதுவும் செங்கல் நட்டதோடு கிணற்றில் போட்ட கல் போல கிடப்பில் போய் விட்டது.

பாண்டிய மண்டலத்தில் பானிபூரி கடைகள்

பாண்டிய மண்டலத்தில் பானிபூரி கடைகள்

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் உருவான கட்டமைப்பால், சுற்றுவட்டாரத்தில் சில கிராமங்களுக்கு கூடுதலாக மருத்துவ வசதி கிடைத்துள்ளது, உடன்குடி அனல் மின் நிலையம் அமைக்கும் பணியால் கொஞ்சம் வேலை உருவாகும் எனக் கூறப்படுகிறது, குலசை ராக்கெட் ஏவுதளம் திட்டமும் அப்படித்தான். ஆனால் இவை அனைத்திலும் ஒரு ஒற்றுமை கவனித்தீர்களா. எல்லாமே மத்திய அரசின் திட்டம். பரவாயில்லை.. ஏதோ ஒரு அரசு, இதையாவது செய்கிறதே என்றும் கடந்து போய் விட முடியாது. மேலே சொன்ன அத்தனை திட்டப் பணிகள் நடக்கும் இடங்களிலும் ஹிந்தி சத்தம் எதிரொலித்துக் கொண்டுள்ளது. மெல்ல மெல்ல பானிப் பூரி கடைகள் பரோட்டாக் கடைகளை இழுத்து மூட வைத்துக் கொண்டுள்ளன. தமிழர் நிலம்தான்.. ஆனால் தமிழர்களுக்கு வேலையில்லை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டிய மண்டலத்தில் இப்போது, பரவலாக கேட்பது, பறவை முனியம்மா பாடல்கள் அல்ல, போஜ்பூரி பாட்டுகள்தான்.

 இப்போ இல்லா விட்டால் எப்போ?

இப்போ இல்லா விட்டால் எப்போ?

மாநில அரசு கண்டுகொள்ளாத.. வட மாநிலத்தவர்களுக்கு பணியிடம் தரும் வேட்டைக்காடா தென்னகம்? உடனே விழித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பில் இருக்கிறது இப்போதைய திமுக அரசு. மாநில சுயாட்சி, தமிழுக்கு முன்னுரிமை தரும் கொள்கையின் அடிப்படையில் குடியாள வந்திருக்கும் அரசு இது. ஆரம்பம் முதலே முதல்வர் ஸ்டாலினின் கொள்கை முடிவுகள் பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளன. இந்த வாய்ப்பை மட்டும் திமுக பயன்படுத்தி தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை கொண்டு வந்தால், ஸ்டாலின் வரலாற்றில் அது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். மதுரையைச் சேர்ந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நிதித் துறை அமைச்சர், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கம் தென்னரசு, தொழில் துறை அமைச்சர், 5 உலக பிரசித்தி பெற்ற பொருளாதார வல்லுநர்கள் குழுவை அமைத்த ஸ்டாலின் முதல்வர்.. ஆஹா.. இதை விட, இத்தனை ஆண்டு கால தென் மாவட்ட புறக்கணிப்பை உடைத்து எறிய யாரால்தான் முடியும்?

திமுகவுக்கு நல்லது

திமுகவுக்கு நல்லது

தென் தமிழகத்தை சொர்க்கபுரியாக்க இதை விட வேறு தருணம் இருக்க முடியாது. அரசியல் ரீதியாகவும், திமுகவுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. சென்னை எப்படி திமுகவின் கோட்டையாக மாறியதோ, அதேபோல பாண்டிய மண்டலத்தை, திமுகவின் பாரம்பரிய ஆதரவு தளமாக மாற்ற முடியும். கடந்த சட்டசபை தேர்தலில், மேற்கு மண்டலம்த்தில் திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் சதவீதம் 41.7%, அதிமுக 45.2%. தெற்கு மண்டலத்தில் திமுக பெற்ற வாக்குகள் 41.18%, அதிமுக 36.4% வாக்குகளைத்தான் பெற்றது. ஆனால் மேற்கு மண்டலத்திற்கு திமுக தரும் கவனத்தை ஏற்கனவே தங்களுக்கு அடித்தளம் அமைத்து கொடுத்துள்ள தென் மண்டலத்தை பலப்படுத்தி இரும்பு கோட்டையாக மாற்ற ஏன் யோசிக்க கூடாது?

சிக்ஸர் தேவை

சிக்ஸர் தேவை

முன்னாள் முதல்வர், கருணாநிதி இந்த தொலைநோக்கு சிந்தனை கொண்டிருந்தார். ஜாதி கலவரங்கள் அதிகம் நடக்க காரணம், வேலையில்லாமல் இருப்பதுதான் என்பதை கண்டறிந்தார். நாங்குநேரியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை எடுத்தார். ஆனால், அது இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. ஆனால் அந்த அறிவிப்புக்கே, திமுகவுக்கு அந்த வட்டாரத்தில் ஆதரவு தளம் அதிகரித்ததை பார்க்க முடிகிறது. காய்ந்த நிலங்களில் தொழிற்சாலைகள்.. விருந்தாளி போல வெளியூரிலிருந்து வந்து செல்லாமல், சொந்த ஊரில் வாழ ஒரு வாய்ப்பு.. இதற்குத்தான் ஏங்கிக் கிடக்கிறார்கள் மதுரைக்கு தெற்கேயுள்ள மக்கள். உலக கோப்பையின் இறுதி போட்டியில் ஒரு பந்துக்கு 6 ரன்கள் தேவை என்பதுபோன்ற இக்கட்டான நிலையில் இங்குள்ள மக்கள் இருக்கிறார்கள். சிக்ஸர் அடிப்பாரா ஸ்டாலின்?

English summary
Tamil Nadu government should focus development schemes on south Tamil Nadu districts. The people of south want to live in their native places.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X