தமிழிசைக்கு பைபை.. தமிழக பாஜகவிற்கு விரைவில் புது தலைவர்.. ரேஸில் எச்.ராஜா, நயினார் நாகேந்திரன்!
சென்னை: பாஜக அடுத்த தமிழகத் தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் முந்துவாரா இல்லை எச்.ராஜா போன்ற மூத்த தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்களா என்பதே இப்போது பாஜகவினரிடம் உள்ள கேள்வி.
பாஜகவின் தற்போதையை தமிழக தலைவராக உள்ள தமிழிசை சவுந்தர் ராஜனின் பதவிக் காலம் முடியப்போகிறது. இவர் இரண்டு முறை தமிழக பாஜக தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
கடந்த 2014 ம் ஆண்டு பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த பொன்.ராதா மத்திய அமைச்சராக தேர்வு செய்யப்பட்டதால் தமிழிசைக்கு அந்த வாய்ப்பு வழங்கப் பட்டது. தொடர்ந்து அவரது பதவிக் காலம் முடிவடைந்த சூழலில் மீண்டும் தமிழிசைக்கே வாய்ப்பு வழங்கப் பட்டது.
திருப்பரங்குன்றம்.. வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படும்: மதுரை கலெக்டர்

அடுத்த தலைவர் யார்
முதல் பதவிக் காலம் அவர் முழுமையாக பதவி வகிக்கவில்லை என்பதால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக பாஜகவினர் கூறினர். தற்போது அவரது பதவிக் காலம் முடிவடைவதால் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற கேள்வி இப்போது தமிழக பாஜகவில் எழுந்துள்ளது. பாஜகவில் காலியாகும் தலைவர் பதவியை பிடிக்க பலரும் இப்போதே கடும் முயற்சி எடுத்து வருகின்றனர். மாநில செயலாளராக உள்ள வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், மதுரை பேராசிரியர் சீனிவாசன், ஹெச் ராஜா உள்ளிட்ட பலரது பெயர்களும் மாநிலத்தலைவர் பதவிக்கு முயற்சித்து வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொன் ராதா ஆதரவாளர்
இதில் கருப்பு முருகானந்தம், முன்னாள் தலைவரும் இப்போதைய மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாவின் தீவிர ஆதரவாளர் என்பதால் கட்சியில் அவருக்கு பலத்த எதிர்ப்பு உள்ளதாக தெரிகிறது. வானதி சீனிவாசனுக்கு கட்சியில் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லையென்றாலும் மீண்டும் ஒரு பெண் தலைவரா என்ற கேள்வி பாஜகவில் எழுப்பப்பட்டுள்ளது.

வானதி சீனிவாசன்
அதே வேளையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வானதி சீனிவாசன் கோவை தொகுதியை கேட்டிருந்தார். ஆனால் அது சி.பி ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. அதனால் தலைவர் பதவியை வானதிக்கு வழங்குவதை கட்சி பரிசீலிக்கும் என்று கூறுகிறார்கள். இன்னொருபுறத்தில் சமீபத்தில் அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு தாவிய முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனும் தலைவர் பதவிக்கு தீவிரமாக முயற்சித்து வருகிறாராம்.

நாகேந்திரன்
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட அவர் மிகுந்த பண பலம் உடையவர் என்பதுவும் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதுவும் இவருக்கு கூடுதல் பலம் என்கின்றனர் பாஜகவினர். அதாவது கடந்த பல வருடங்களாகவே நாடார் சமுதாயத்தை சேர்ந்த பொன்.ராதா மற்றும் தமிழிசை ஆகியோர் பாஜகவின் மாநிலத் தலைமைப் பொறுப்பில் இருந்ததால் இம்முறை முக்குலத்தோர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப் பட வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள்.

நீண்ட கால பாஜகவினர் புலம்பல்
இப்படி சில "பிளஸ்"கள் இவருக்கு இருந்தாலும் அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு இப்போதுதான் வந்தவர் என்பதால் கட்சியில் நீண்ட காலம் இருப்பவர்களுக்கு என்ன மரியாதை என்ற கலகக் குரல்கள் இப்போதே கேட்க ஆரம்பித்து விட்டன. மதுரை பேராசிரியர் சீனிவாசனும் இப்போது பாஜகவின் தலைவர் ரேசில் இருக்கிறார். இவர் நீண்ட காலமாக கட்சி உறுப்பினர்.

வென்றால், வெல்லாவிட்டால்
மாநில அளவில் கட்சியில் அறிமுகமானவர் என்பதால் இவரது பெயரும் தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. நயினார் நாகேந்திரன் ராமநாதபுரத்தில் வென்றால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் அதாவது மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் இதெல்லாம் நடக்கும் என்று பாஜகவினர் கூறுகிறார்கள். அப்படி நயினாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டால் மதுரை பேராசிரியர் சீனிவாசன் தலைவர் பதவிக்கு வரக்கூடும் என்கிறார்கள் காவிக்கட்சியினர்