உயிருக்கே ஆபத்தாகலாம்.. நடிகை சமந்தாவை பாதித்த “மயோசிடிஸ்” நோய் என்றால் என்ன?
சென்னை: தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்து வரும் சமந்தா மையோசிடிஸ் எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். மயோசிடிஸ் என்றால் என்ன? எந்த அளவுக்கு அதன் பாதிப்பு இருக்கும் என்ற விபரங்களை பார்க்கலாம்.
நடிகை சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன் கையில் ட்ரிப்ஸ் ஏற்றியபடி மைக் முன் டப்பிங் கொடுத்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.
மயோசிடிஸ் எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக சமந்தா தெரிவித்த தகவல் வேகமாக பரவியது. பலரும் சமந்தாவின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்தனர்.
சமந்தா..நயன்தாரா போல கூடிய கூட்டம்..எவ்ளோ லவ்..ரசிகர்களின் அன்பில் நெகிழ்ந்து போன கயல் சைத்ரா ரெட்டி

வதந்திகள்
மறுபக்கம் சமந்தாவின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகளும் பரவின. இந்த சூழலில் தான் உயிருக்கே ஆபத்தான நிலையில் இருக்கிறேன் என்றெல்லாம் செய்திகளை பரப்பிவிடுவதாக ஒரு பேட்டியில் சமந்தா வேதனை தெரிவித்து இருந்தார். அதே நேரம் சமந்தாவை பாதித்து இருக்கும் மயோசிடிஸ் நோய் குறித்த தேடுதல் படலமும் இணையத்தில் தொடங்கி இருக்கிறது.

மயோசிடிஸ் என்றால் என்ன?
மயோசிடிஸ் என்ற நோய் கேட்பதற்கு புதியதுபோல் தோன்றினாலும் இது பன்னெடுங்காலமாக நம் மக்களிடையே உள்ள நோய்தான். தசை அழற்சி நோயான இது, நமது நோய் எதிர்ப்பு சக்தியே தசையில் உள்ள செல்களை சிதைக்கிறது. ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினருக்கும் இந்த நோய் வரும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

2 வகை
ஆனாலும், ஆண்களைவிட பெண்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த மயோசிடிஸ் நோய் 2 வகைப்படுகிறது. தோலில் பாதிப்பை ஏற்படுத்தும் தசை அழற்சி நோய் டெர்மடோ மயோசிடிஸ் என்று அழைக்கப்படுகிறது. தோலில் பாதிப்பை ஏற்படுத்தாத தசை அழற்சி நோய் பாலி மயோசிடிஸ் என்று கூறப்படுகிறது.

காரணம் தெரியவில்லை
ஆனால், ஒரு வேதனையான விசயம் என்னவென்றால் இந்த மயோசிடிஸ் நோய் வருவதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக இது ஏற்படலாம் என்று சில கூறுகிறார்கள். ஆனால், ஆய்வுப்பூர்வமாக இது நிரூபிக்கப்படவில்லை.

மழை காலங்களில் தாக்கும்
1 லட்சம் பேரில் 22 பேரை தாக்கும் இந்த மயோசிடிஸ் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நோயின் தாக்கம் மழை காலம் மற்றும் குளிர் காலங்களில் கூடுதலாக இருக்கும் என்று கூறுகிறார்கள். தசை அழற்சி நோயை கவனிக்காமல் விட்டுவிட்டால் தசை செல்கள் நிரந்தரமாக அழிந்து இயல்பு வாழ்க்கையே முடங்கும் அபாயம் ஏற்படும்.

உயிரிழக்கும் அபாயம்
மயோசிடிஸ் நோயின் பாதிப்பு காரணமாக தசை பலவீனமாகி உணவு உண்ணும்போது சுவாசக்குழாய்க்குள் செல்லும் அபாயம் உள்ளது. இதனால் ஆஸ்பிரேசன் நிமோனியா ஏற்பட்டும் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. வெகு சிலருக்கு இதனால் புற்று நோயும் ஏற்படலாம். அதேபோல் ரத்த குழாயில் அழற்சி, நுரையீரல் பாதிப்பு, இதய பாதிப்புகள் ஏற்படலாம்.

அறிகுறிகள்
காய்ச்சல், பசியின்மை, தசை வீக்கம், படுக்கையிலிருந்தும் அமர்ந்தும் எழுவதில் சிரமம், நடப்பதில் சிரமம் இருக்கும். சாப்பிடும்போதும், தண்ணீர் அருந்தும்போதும் சிரமம் ஏற்படும், இருமல், குரல் மாற்றம், தோலில் சிவப்பு தடிப்புகள், பேச்சில் சிரமம், மார்பில் சிவப்பு தடிப்புகள், தசை வலி போன்றவையும் மயோசிடிஸ் நோயின் அறிகுறிகளாக உள்ளன.

சிகிச்சை
மயோசிடிஸ் நோய் குறித்து மக்களிடேயே அதிக விழிப்புணர்வு இல்லை. உடல்வலி என்று நினைத்து சாதாரணமாக இருந்துவிடுகிறார்கள். இதற்கு ஆரம்ப நிலையில் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். மூட்டு - இணைப்புத் திசு சிறப்பு மருத்துவர்களின் கண்காணிப்புடன் மயோசிடிஸ் நோயாளிகள் சிகிச்சை பெற வேண்டும்.

இலவச சிகிச்சை
மயோசிடிஸ் நோய்க்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு லட்சக்கணக்கில் பணம் செலவாகும். நாள்தோறும் இந்த நோய்க்காக வழங்கப்படும் ஐவி இம்யூனொக்ளோபிளின் எனப்படும் மருந்துக்கு தினசரி ரூ.50,000 செலவு செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகளில் இந்த நோய்க்கு இலவச சிகிச்சையுடன் மருந்துகளும் இலவசமாக கிடைக்கின்றன.