சிக்கந்தர் மாட்டிறைச்சி கடை.. மூட சொல்லி இந்து முன்னணி “ரகளை”! மூவரை கைது செய்த கோவை போலீஸ்
கோவை: மாட்டிறைச்சி கடையை மூடச் சொல்லி தகராறு செய்த இந்து முன்னணியை சேர்ந்த 3 பேரை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.
கோவை பிரஸ் காலனி பி.எஸ்.ஜி.கார்டன் பகுதியை சேர்ந்தவர் முகமது சிக்கந்தர். இவர் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மாட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை முகமது சிக்கந்தர் வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் செய்துகொண்டு இருந்தா. மதியம் சாப்பிடுவதற்காக முகமது சிக்கந்தர் வீட்டிற்கு சென்று இருக்கிறார்.

மிரட்டல்
மாட்டிறைச்சி கடையில் பணிபுரியும் ஊழியர் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது 35 வயது மதிக்கத்தக்க 3 பேர் கடைக்கு வந்துள்ளனர். அவர்கள் கடையில் இருந்த வாலிபரிடம் "இன்று ஏன் கடையை திறந்து வைத்திருக்கிறாய். கடையை மூடி விட்டு வீட்டிற்கு செல்." என்று மிரட்டி தகராறில் ஈடுபட்டனர்.

மூடப்பட்ட ஷட்டர்
அதற்கு அந்த இளைஞர் இன்னும் சிறிது நேரத்தில் கடையை பூட்டி விடுவோம் என்றார். ஆனால் 3 பேரும் இளைஞர் சொல்வதை கேட்காமல் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடையின் ஷட்டரை பிடித்து அவர்கள் கீழே இழுத்துள்ளனர். இதனால் பயந்து போன அந்த வாலிபர் கடையில் இருந்து வெளியில் ஓடி விட்டார்.

3 பேர் கைது
இதுகுறித்து கடையின் உரிமையாளரான முகமது சிக்கந்தர் பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையில் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த 3 பேரையும் பிடித்து காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

இந்து முன்னணி
விசாரணையில், மாட்டு இறைச்சி கடையை மூட சொல்லி தகராறு செய்தது, இந்து முன்னணி அமைப்பின் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பொது செயலாளர் சண்முகம், ஜோதிபுரம் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் வினோத், ஜோதிபுரம் ஒன்றிய தலைவர் முருகன் ஆகியோர் என்பது தெரியவந்தது.

குடிபோதை
3 பேரும் நேற்று மது அருந்திவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் சென்று மாட்டு இறைச்சி கடையில் இருந்த வாலிபரிடம் தகராறில் ஈடுபட்டு கடையை மூட சொல்லியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications