இலங்கை கலவரத்திற்கு காரணம்...மகிந்த ராஜபக்சேவை கைது செய்யுங்கள் - கொழும்பு நீதிமன்றத்தில் மனு
கொழும்பு: இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை கைது செய்ய உத்தரவிடக்கோரி கொழும்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு: இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, எம்.பி.க்கள் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ, சஞ்சீவ் திரிமன்னே, சனத் நிசாந்தா உள்ளிட்ட 7 பேரை கைது செய்ய உத்தரவிடக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண கோரியும் இதற்கு பொறுப்பான ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக கோரியும் பொதுமக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொழும்பில் நள்ளிரவில் நடந்தது என்ன? தப்பி ஓடியது ஏன்? விரைவில் மவுனம் கலைக்கிறாராம் மகிந்த ராஜபக்சே!

வன்முறை வெறியாட்டம்
கொழும்பில் ராஜபக்சே கும்பல் நடத்திய இந்த கொடூர தாக்குதல் இலங்கை மக்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதனையடுத்து நாடு முழுவதும் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களும் பொதுமக்களால் தாக்கப்பட்டனர். இந்த வன்முறையில் பலர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

முதல் குற்றவாளி மகிந்த ராஜபக்சே
இதனிடையே அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய முதல் குற்றவாளி மகிந்த ராஜபக்சே என்பதால் அவரை உடனடியாக கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு காவல்துறை அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் தெரிவித்திருந்தார்.

கைது செய்ய வலியுறுத்தல்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன் தமது ட்விட்டர் பக்கத்தில், தாக்குதல் நடத்தியவர்களை கொழும்புக்கு இன்று அழைத்து வந்து ஏற்பாடு செய்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதேபோல், நாட்டை கலவர பூமியாக கொண்டு வந்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை கைது செய்ய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வலியுறுத்தி உள்ளார்.

கைது செய்ய உத்தரவிடக்கோரி மனு
இந்த நிலையில் இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை கைது செய்ய உத்தரவிடக்கோரி கொழும்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்சே மட்டுமின்றி எம்.பி.க்கள் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ, சஞ்சீவ் திரிமன்னே, சனத் நிசாந்தா உள்ளிட்ட 7 பேரை கைது செய்ய உத்தரவிடக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

திரிகோணமலையில் பதுங்கல்
ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக செய்திகள் வந்த நிலையில், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் அவர் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கையை விட்டு வெளியேறக்கூடாது என்பதற்காக விமான நிலையம் அருகே சோதனைச் சாவடிகளை அமைத்தனர். நாட்டின் உயர்மட்ட சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரியும், இலங்கைக்கு வெளியே எந்த ஒரு உயர்மட்ட நபரும் சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்படவில்லை என்று கூறினார். மகிந்த ராஜபக்சே திருகோணமலை கடற்படை தளத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாக, அந்நாட்டின் பாதுகாப்புச் செயலர் கூறியுள்ளார். விரைவில் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாடு செல்ல தடை
வன்முறையை தூண்டியதாக தொடர்ந்த வழக்கில் ராஜபக்சே, எம்பி ஜான்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவர்களின் கூட்டாளிகள் வெளிநாடு செல்ல கொழும்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை கைது செய்யக் உத்தரவிடக்கோரி கொழும்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு முதன்மை குற்றவியல் நீதிமன்றம்
கொழும்பில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட 7 பேர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சேனகா பெரேரா மனுவை விசாரித்த கொழும்பு நீதிமன்றம், முதன்மை குற்றவியல் நீதிபதியிடம் முறையிட உத்தரவிட்டிருக்கிறது. கொழும்பு முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வரும் 17ம் தேதி மனுவாக தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.