டெல்லியில் 10-ஆம் வகுப்பு மாணவர்களிடையே மோதல்.. 4 பேருக்கு கத்திகுத்து.. பரபரப்பு சம்பவம்
டெல்லி: டெல்லியில் பள்ளிக்கு வெளியே வந்த 4 மாணவர்களை மற்றொரு பள்ளி மாணவர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்கள் பரீட்சை எழுதிவிட்டு வெளியில் வந்தபோது அவர்களை அரசுப் பள்ளி மாணவர்கள் கத்தியால் குத்தி படுகாயம் அடைய செய்துள்ளனர்.
படுகாயம் அடைந்த மாணவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் சிசிடிவி பதிவுகளை வைத்து அரசுப் பள்ளி மாணவர்களை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு தேர்வு
டெல்லியில் தற்போது பல பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. கிழக்கு டெல்லி மயூர் விஹார் பகுதியில் அமைந்துள்ள சர்வோதயா பால வித்யாலயா என்ற பள்ளியிலும் நேற்று வழக்கம் போல் தேர்வு எழுதி உள்ளனர். சர்வோதயா பால வித்யாலயா பள்ளி தேர்வு மையம் என்பதால் அருகில் இருக்கும் சில பள்ளி மாணவர்களும் இங்கு வந்துதான் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் திரிலோக்புரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் அடங்குவர். தேர்வு மையத்தில் மாணவர்கள் ஒன்றாக கூடியிருந்தபோது இரு பள்ளி மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாணவர்கள் மீது தாக்குதல்
இதனால் தங்களுடன் தகராறில் ஈடுபட்ட மாணவர்களை பழிவாங்க தேர்வு முடியும் வரை காத்திருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வுகள் முடிந்து மாணவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியில் வரத் தொடங்கி உள்ளனர். அப்போது பள்ளியில் இருந்து சற்று தூரத்தில் சென்று கொண்டிருந்த சர்வோதாயா பள்ளி மாணவர்கள் 4 பேரை திரிலோக்புரி அரசு பள்ளி மாணவர்கள் 4 பேர் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன 4 மாணவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அருகில் உள்ள பூங்காவிற்குள் ஓடினர். ஆனாலும் பூங்காவிற்குள் சென்ற அந்த மாணவ கும்பல் 4 பேரையும் கத்தியால் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

மாணவர்கள் ஹாஸ்பிடலில் அனுமதி
இதனால் 4 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். 2 மாணவர்களுக்கு உடலில் இருந்து ஏராளமான ரத்தம் வெளியேறியது. இதை அங்கு வேடிக்கை பார்த்த பொதுமக்களில் சிலர் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்க, சம்பவ இடத்திற்கு பாண்டவ் நகர போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தாக்கப்பட்ட மாணவர்களை மீட்டு டெல்லியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இரு தரப்புமே சிறுவர்கள்
4 பேரை தாக்கிய மாணவர்களை அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் கண்டு அவர்கள் திரிலோக்புரி அரசுப் பள்ளி மாணவர்கள் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து பூங்காவில் குற்றம் நடந்தது தொடர்பாக தடயங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர். பிள்ளைகள் தாக்கப்பட்டது அறிந்து மருத்துவமனைக்கு வந்த பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பத்தில் தாக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் 15 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications