மொத்தமாக அழைக்கும் ஸ்டாலின்.. கேசிஆர் போட்ட அதிரடி சபதம்.. "அவரோடு" லன்ச் மீட்டிங்.. செம ட்விஸ்ட்!
டெல்லி: மாநில முதல்வர்கள் பலர் தேசிய அளவில் ஒன்று சேர்ந்து பாஜகவை எதிர்ப்பதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது. பாஜக ஆளாத மாநில முதல்வர்கள் பலர் அடுத்தடுத்து முக்கிய மீட்டிங்குகளை நடத்த உள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே தேசிய அளவில் பாஜக ஆளாத மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் ஒன்றாக சேர்ந்து பெரிய கூட்டணி அமைக்கும் முனைப்பில் உள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதில் தீவிரமாக இருக்கிறார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் அவர் பெற்ற வெற்றி தேசிய அரசியலுக்கு அவரை கொண்டு சென்றுள்ளது. ஏற்கனவே கோவா தேர்தலில் போட்டியிடும் அவர் உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளார்.

அழைப்பு
இந்த நிலையில்தான் அவர் பல்வேறு மாநில முதல்வர்களை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார். பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் செய்யும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து ஆலோசிக்க அவர் பாஜக அல்லாத மாநில முதல்வர்களை அழைத்து உள்ளார். இது தொடர்பாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் ஆகியோருடன் மம்தா போனில் பேசினார். விரைவில் மாநில முதல்வர்களை சந்திக்கும் கூட்டம் நடக்க உள்ளது.

ஸ்டாலின்
ஒரு பக்கம் மம்தா இப்படி எதிர்கட்சிகளை கூட்ட தீவிரமாக முயன்று கொண்டு இருக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலினும் இதில் தீவிரம் காட்டி வருகிறார். மம்தாவின் செயலுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலினும் எதிர்கட்சிகளை இணைக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளார். இந்த மாத இறுதிக்குள் முதல்வர் ஸ்டாலின் உங்களில் ஒருவன் பாகம் 1 என்று தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட உள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு எதிர்கட்சித் தலைவர்களை முதல்வர் ஸ்டாலின் அழைக்க உள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர்கள்
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்த புத்தகத்தை வெளியிட இருக்கிறார். இதில் மம்தா, கேசிஆர், உத்தவ் தாக்கரே, பினராயி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இது எதிர்கட்சித் தலைவர்கள் எல்லோரும் ஒன்றாக சேரும் பெரிய மேடையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மொத்தமாக எதிர்கட்சித் தலைவர்கள் எல்லோரையும் ஒரே மேடையில் நிறுத்த ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இப்படி மம்தா, ஸ்டாலின் இருவரும் எதிர்கட்சிகளை இணைக்க தீவிரமாக பணிகளை செய்து வரும் நிலையில்தான் தெலுங்கானா முதல்வர் கேசிஆரும் மிக தீவிரமாக சில பணிகளை செய்து வருகிறார்.

சபதம்
சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய கேசிஆர், டெல்லியை சிலர் கோட்டை போல நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். தேவைப்பட்டால் தேசிய அரசியலில் நானும் முக்கிய பங்கு வகிப்பேன். தேவைப்படும் பட்சத்தில் தேசிய அரசியலில் நான் முக்கிய பங்கு வகிப்பேன். இந்த நாட்டிற்காக நாங்கள் போராடுவோம். நீங்கள் எனக்கு ஆதரவு தந்தால் டெல்லி கோட்டையை உடைக்க நாங்கள் தயார். நரேந்திர மோடி ஜாக்கிரதையாக இருங்கள். உங்கள் மிரட்டல்களுக்கு யாரும் அஞ்ச மாட்டோம் என்று என்று மக்களுக்கு முன்னிலையில் பேசினார். அப்போதே அவர் தேசிய அரசியலில் குதிப்பதற்கான சிக்னலை கொடுத்தார்.

சந்திப்பு
அதேபோல் சில மாதங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த போதும் எதிர்கட்சிகளை ஒன்று திரட்டுவது பற்றி பேசி இருக்கிறார். மேலும் மம்தா பானர்ஜியுடன் போனில் பேசும் போது தேசிய அளவில் கூட்டணி அமைப்பது பற்றி இவர்கள் பேசி உள்ளனர். இந்த நிலையில்தான் கேசிஆர் தனது பங்கிற்கு இதில் உதவிகளை செய்ய தொடங்கி உள்ளார். அதன் பொருட்டு அவர் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் லன்ச் மீட்டிங் ஒன்றை நடத்த உள்ளார்.

மீட்டிங்
வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த லன்ச் மீட்டிங் நடக்க உள்ளது. இந்த மீட்டிங்கில் இவர்கள் இருவரும் மட்டும் கலந்து கொள்ள உள்ளனர். மம்தா பானர்ஜி உருவாக்க உள்ள கூட்டணியில் இணைவது பற்றி, தேசிய அளவில் மாநில முதல்வர்கள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைப்பது பற்றி இவர்கள் பேச உள்ளனர். அதன்பின் இரண்டு மூன்று நாட்களில் ஸ்டாலின் புத்தக வெளியீட்டு விழாவில் சந்திக்க உள்ளனர். இது தொடர்பாக உத்தவ் தாக்கரேவிற்கு போன் செய்த கேசிஆர்.. நீங்கள் சிறப்பாக ஆட்சி செய்கிறீர்கள்.

அரசியல்
அரசியல் ரீதியாக மோடிக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறீர்கள். உங்கள் திட்டங்கள் சிறப்பாக உள்ளது என்று பாராட்டி உள்ளார். அதோடு மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கிறீர்கள் என்றும் பாராட்டி உள்ளார். இவர்களின் லன்ச் மீட்டிங் தேசிய அரசியலில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்படுகிறது. 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பின் நிலவரத்தை பொறுத்து பெரிய தேசிய அளவிலான கூட்டணி அறிவிப்புகள் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications