காங்கிரஸ் போடும் அச்சாரம்.. விடாமல் மீண்டும் "தூது"! கெஜ்ரிவால், ஜெகன் வேண்டாமா? என்ன காரணம்?
டெல்லி : காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்ரா எனும் பெயரில் இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில், வரும் ஜனவரி 30ஆம் தேதி ஸ்ரீநகரில் நடைபெறும் நிறைவு விழாவில் பங்கேற்க 21 கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே அழைப்பு விடுத்துள்ளார். எனினும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
கடந்த செப்டம்பர் 7ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுலின் இந்த ஒற்றுமைக்கான நடைப்பயணம் கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைக் கடந்து டெல்லி வழியாக தற்போது பஞ்சாப்பை எட்டியுள்ளது.
ஜனவரி 30ஆம் தேதி காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஒற்றுமைப் பயண யாத்திரை நிறைவடையும் நிலையில், பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு ஒருமித்த கருத்து கொண்ட திமுக உள்ளிட்ட 21 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

பாரத் ஜோடோ யாத்ரா
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக இந்திய ஒற்றுமை நடைபயணம் என்ற பெயரில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, பல்வேறு மாநிலங்களை கடந்து தற்போது பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறுகிறது. இந்த யாத்திரையின் போது நாடு முழுவதும் பல தரப்பட்ட மக்களை சந்தித்துள்ளார் ராகுல். ராகுல் காந்தியின் பாத யாத்திரை வரும் ஜனவரி 30ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் நிறைவடைகிறது. இதையொட்டி ஸ்ரீநகரில் நிறைவு விழாவை பிரமாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

21 கட்சிகளுக்கு அழைப்பு
நிறைவு விழாவில் கலந்துகொள்வதற்காக திமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா உள்ளிட்ட 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் அனுப்பி உள்ளார்.

பங்கேற்பீர்கள் என்று நம்புகிறேன்
இது தொடர்பாக கார்கே எழுதியுள்ள கடிதத்தில் சிக்கலான சூழ்நிலை நிலவி வரும் இத்தகைய நேரத்தில் ஒற்றுமைப் பயண யாத்திரை வலிமையான குரலாக மாறியுள்ளது. அதனால் நீங்களும் பங்கேற்றால் யாத்திரையின் நோக்கத்துக்கு வலு சேர்ப்பதாக அமையும். நீங்கள் பங்கேற்பீர்கள் என்று நம்புகிறேன். இன்று, நாடு பொருளாதார, சமூக, அரசியல் சிக்கலை சந்திக்கும்போது, எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படும் நிலையில், லட்சக்கணக்கானோரை யாத்திரை இணைக்கிறது. சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இதில் பங்கேற்றுள்ளனர். மக்களுடனான நேரடி உரையாடல்தான், யாத்திரையின் மிகப்பெரிய சாதனை எனக் குறிப்பிட்டுள்ளார்.

வரல.. ஆனாலும் அழைப்பு
காங்கிரஸ் தலைவர் கார்கே, தற்போது காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத பல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருப்பது 2024 லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி ஒத்திகை முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. உபியில் ராகுல் மேற்கொண்ட பயணத்தின்போது, அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் அவருடன் கலந்து கொள்ளாத நிலையிலும் தற்போது அவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது கவனிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், காங்கிரஸ் கட்சி, அவர்களுடனான கூட்டணியை விரும்புவதாகப் பேச்சுகள் எழுந்துள்ளன.

அழைப்பு இல்லை
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, தேவகௌடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. சீனாவில் கொரோனா மீண்டும் பரவியதைத் தொடர்ந்து, நெறிமுறைகளை அமல்படுத்துமாறு மத்திய அரசிடம் ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியது. இதன் மூலம் ராகுல் காந்தியின் பாத யாத்திரைக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி மறைமுகமாக செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே டெல்லி, பஞ்சாப், கோவா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஆம் ஆத்மி செயல்பட்டதால், வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் ஆம் ஆத்மி காங்கிரஸ் அணியில் சேர வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது. அதேபோல, ஜெகன் மோகன் ரெட்டி, பாஜகவுக்கு முழு ஆதரவு அளித்து வருவதால், அவருக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை எனத் தெரிகிறது.

மூன்றாவது அணி
பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள கட்சிகளை திரட்டி காங்கிரஸ் வலுவான கூட்டணியை அமைத்தால் தான் பாஜகவுக்கு கடும் போட்டியை அளிக்க முடியும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வரும் நிலையில், ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்பே இல்லாத சூழல் நிலவுதால், ஆம் ஆத்மி மூன்றாவது அணியாக இருக்கக்கூடும் என்ற பேச்சு நிலவுகிறது. நாடு முழுவதுமுள்ள பாஜகவுக்கு எதிரான கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள மல்லிகார்ஜூன கார்கே ஆம் ஆத்மியை புறக்கணித்துள்ளது இந்தக் கருத்தை வலுப்படுத்துகிறது.












Click it and Unblock the Notifications