தடுப்பூசிக்கு எதிராக பிரசாரம்- ராம்தேவ் மீது தேசதுரோக வழக்கு கோரும் இந்திய மருத்துவ சங்கம்
டெல்லி: கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பொய்யான அவதூறான பிரசாரங்கள் செய்து வரும் பாபா ராம்தேவ் மீது தேசதுரோக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உலக நாடுகளிலேயே கொரோனா 2-வது அலையால் இந்தியாதான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுவதை மத்திய, மாநில அரசுகள் விரைந்து முன்னெடுத்து வருகின்றன.

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு
கொரோனா தடுப்பூசிகளின் அவசியத்தை பொதுமக்களிடம் மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. கொரோனா தடுப்பூசி தொடர்பாக பொதுமக்களிடம் இருக்கும் அசத்தைப் போக்கும் விழிப்புணர்வு பிரசாரங்களையும் அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

ராம்தேவ் பகீர் வீடியோ
இந்நிலையில் யோகா குரு என்று அழைத்து கொள்கிற பாபா ராம்தேவ் வீடியோ ஒன்று மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டும் கூட 10,000 மருத்துவர்கள் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர்; அலோபதி மருத்துவத்தால்தான் பல லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர் என ராம்தேவ் பேசியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு கடிதம்
ராம்தேவின் இந்த அவதூறு பிரசாரம் மருத்துவர்களை மட்டுமின்றி கொரோனா முன்களப் பணியாளர்கள் அத்தனை பேரையும் கடும் அதிர்ச்சிக்கும் உளைச்சலுக்கும் உள்ளாக்கி இருக்கிறது. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவர் சங்கம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் ராம்தேவின் இந்த பொய், அவதூறு பிரசாரத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

நவீன மருத்துவம் மூலம் சிகிச்சை
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அரசு அழைப்பு விடுத்த போது எந்தவித தயக்கமும் இல்லாமல் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள்தான் போட்டுக் கொண்டனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் வழிகாட்டுதல்களின் கீழ்தான் நவீன மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர்கள் பல லட்சக்கணக்கான மக்களுக்கு கொரோனா சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தேசதுரோக சட்டம் பாயட்டும்
ஆனால் ராம்தேவ் போன்றவர்கள், இந்த நவீன மருத்துவம்தான் பல லட்சம் பேர் மரணத்துக்கு காரணம் என பேசியிருப்பது மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரானதாகும். ஆகையால் இந்த பொய் பிரசாரங்களை தடுத்து நிறுத்தி ராம்தேவ் மீது தேசதுரோக சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

ரூ1,000 கோடி இழப்பீடு நோட்டீஸ்
ஏற்கனவே ராம்தேவ் தம்முடைய பேச்சுக்கு 15 நாட்களில் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையெனில் ரூ1,000 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று இந்திய மருத்துவர் சங்கத்தின் உத்தரகாண்ட் கிளை நோட்டீஸ் அனுப்பி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications