அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதி! இரட்டை இலையை பெற்று தந்த மாயத்தேவர் காலமானார்! ஏராளமானோர் அஞ்சலி!
.திண்டுக்கல் : புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கட்சி தொடங்கி சந்தித்த முதல் தேர்தலிலேயே வென்ற அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதியும், திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான மாயத் தேவர் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 88.

அதிமுக உதயமான போது சந்தித்த முதல் தேர்தல் திண்டுக்கல் மக்களவை தொகுதி இடைத் தேர்தல். திமுகவில் இருந்து பிரிந்த புதிய கட்சியை தொடங்கிய எம்ஜிஆர் முதல் சந்தித்த தேர்தலிலேயே அவருக்கு வெற்றியை தேடித் தந்தது திண்டுக்கல் தொகுதி.

மிகப்பலத்துடன் இருந்த திமுகவை மூன்றாவது இடதுக்கு தள்ளி இந்த தேர்தலில் எம்ஜிஆர் களமிறக்கிய வேட்பாளர் மாயத் தேவர் பெரும் வெற்றி பெற்றார்.

அதிமுகவுக்கு தேர்தல் தோறும் வெற்றி தேடித்தரும் சின்னமான இரட்டை இலையும் இந்த தேர்தலில் தான் களம் இறங்கியது. இந்த தேர்தலில் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாம் இடத்தைப் பெற திமுக மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. அந்த அளவுக்கு மக்கள் பலத்துடன் களமிறங்கிய எம்ஜிஆர் என்ற பெயரே மாயத்தேவருக்கு வெற்றியைத் தேடி தந்தது. இதனால் அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதி என்ற பெருமையும் மாயத்தேவருக்கு உண்டு.
தொடர்ந்து 1977 ஆம் ஆண்டிலும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் அதற்கு பிறகு திமுகவில் இணைந்து மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் திமுகவில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார் மாய தேவர் தொடர்ந்து வயது முதிர்வு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற அவர் சின்னாளபட்டியில் உள்ள வீட்டில் அவரது மனைவியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில்தான் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட வந்த அவர் இன்று திடீரென காலமானார்.
அவரது மறைவுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் பல முன்னாள் அமைச்சர்கள் முக்கிய நிர்வாகிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications