For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யுபிஎஸ்சி விவகாரம்: அதிமுக கோரிக்கை நிராகரிப்பு - திட்டமிட்டபடி ஆக.24ல் தேர்வு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: யுபிஎஸ்சி தேர்வு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வியாழக்கிழமை மீண்டும் அமளி ஏற்பட்டது.

இதனிடையே, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவித்துள்ள "குரூப் 1' முதல்நிலைத் தேர்வு, திட்டமிட்டபடி வரும் 24-ஆம் தேதி நடைபெறும் என்றும் அதன் வினாத்தாள் முறையிலும் எந்தவித மாற்றமும் இருக்காது என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்தது.
யுபிஎஸ்சி தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் என்ற அ.தி.மு.க.வின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது.

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள நிலையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தினந்தோறும் புயலை கிளப்பி வருகின்றன. இந்த விவகாரம் வியாழக்கிழமையன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது.

தம்பித்துரை கோரிக்கை

அதன்படி லோக்சபாவில் கேள்வி நேரம் முடிந்ததும் அ.தி.மு.க. உறுப்பினர் எம்.தம்பிதுரை, இப்பிரச்சினையை எழுப்பினார். அவர் கூறுகையில், ‘சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மாணவர்கள் பதிலளிக்க முடியுமென்றால், ஏன் பிராந்திய மொழிகளில் பதில் அளிக்கக்கூடாது? வெவ்வேறு மொழிகளை பேசும் மக்களை அதிகமாக கொண்ட இந்தியா, ஒரு வேற்றுமை நிறைந்த நாடு. எனவே இந்த வேற்றுமையை மதிக்க வேண்டும்' என்றார்.

எதிர்கட்சிகள் ஆதரவு

அரசியலமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணைப்படி சிவில் சர்வீசஸ் தேர்வுகளை பிராந்திய மொழிகளிலும் எழுத அனுமதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதுடன், இந்த விவகாரத்தில் தெளிவான அறிக்கை வெளியிடாத மத்திய அரசை குறை கூறினார்.

தம்பிதுரையின் இந்த கருத்துக்கு காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதளம் உள்ளிட்ட மற்ற கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

திசை திருப்பக்கூடாது

இதற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு பதிலளிக்கும் போது, 24-ந் தேதி நடைபெறும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்காக ஏராளமான மாணவர்கள் மிகவும் தீவிரமாக படித்து வருகிறார்கள். எனவே இந்த நேரத்தில் அவர்களை திசை திருப்பும் வகையில் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது.

திறனறி தேர்வு

சிசாட் எனப்படும் திறனறி தேர்வில் இதுவரை ஆங்கிலமே கவலையாக இருந்தது. மாணவர்களின் தரத்துக்கு ஆங்கில மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது என ஏற்கனவே அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்த சபையில் ஏற்கனவே பலமுறை எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.

ஒரே நாள் இரவில்

இந்த திறனறி தேர்வு 2011-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பிறகும், அப்போது யாரும் எந்த அதிருப்தியும் தெரிவிக்கவில்லை. ஆனால் திடீரென சில மாணவர்கள் தற்போது குரல் எழுப்புவது ஆச்சரியமாக உள்ளது.

இந்த விவகாரத்தில், மாநில மொழிகளில் தேர்வு எழுத அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் முன் வைக்கப்படுகின்றன. ஆனால் இந்த மாற்றங்கள் அனைத்தும் ஒரேநாள் இரவில் செய்து விட முடியாது. இந்த தேர்வுக்குப்பின் இது தொடர்பாக நீண்ட விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது என்று கூறினார்.

ராஜ்யசபாவில் அமளி

ராஜ்யசபா காலையில் தொடங்கியபோது கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு யுபிஎஸ்சி விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கையை ஏற்க மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி மறுத்தார். இதையடுத்து, அதிமுக, திமுக, இடதுசாரிக் கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நடவடிக்கை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு அவை அலுவல்கள் சுமுகமாக நடைபெற்றன.

திட்டமிட்டபடி நடக்கும்

அப்போது பேசிய வெங்கையா நாயுடு, ‘இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு, ஏற்கனவே திட்டமிட்டபடி (24-ந் தேதி) நடைபெறும். இதை ஒத்திவைக்கும் திட்டம் எதுவும் இல்லை. அதன்பிறகு அரசியல் கட்சியினர் மற்றும் துறை வல்லுனர்களுடன் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு தயார்' என்று கூறினார்.

அனைத்துக்கட்சிக் கூட்டம்

இதை ஏற்றுக்கொள்ளாத உறுப்பினர்கள் ஆகஸ்டு 24-ந் தேதிக்கு முன்னரே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு பதிலளித்த பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர், ‘அனைத்து கட்சி கூட்டத்தில் மிகவும் விரிவாக விவாதிக்க வேண்டியிருக்கும். அதனால் 24-ந் தேதிக்கு முன்னர் இதில் ஒரு முடிவு காண முடியாது. எனவே அனைத்து கட்சி கூட்டத்துக்கான தேதியை நாங்கள் பின்னர் அறிவிப்போம்' என்றார்.

English summary
Bharatiya Janta Party (BJP) member Venkaiah Naidu said that this year some students are raising the issue based on which a section with 22 marks has been deleted from the UPSC examination. 'Let the exam be over and then have in-depth discussion and formulate a comprehensive approach,' said Naidu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X