For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'லட்சுமிகாந்தன் கொலை' வெப் தொடராகிறது - தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கே. உள்ளிட்டோர் சிக்கிய கதை என்ன?

By BBC News தமிழ்
|

ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய கொலை வழக்காக கருதப்படும் 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' பிரபல ஓடிடி நிறுவனமான சோனி லிவ்- ல் வெப் தொடராக உருவாகி வருகிறது.

1940-களில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கின் பின்னணி, இது தொடராக எடுக்கப்படுவதன் காரணம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கட்டுரை அலசுகிறது.

lakshmikanthan murder case

யார் இந்த லட்சுமி காந்தன்?

சி.என்.லட்சுமி காந்தன், பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட அன்றைய மதராஸ் மாகாணத்தில் 1940 ஆம் ஆண்டு 'சினிமா தூது' என்ற பத்திரிக்கையை துவங்கி நடத்தி வந்தார். இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்ததால் காகித பற்றாக்குறை இருந்தது. அதனால் புதிதாக துவங்கிய பல பத்திரிக்கை நிறுவனங்களுக்கு பேப்பர் லைசென்ஸ் வழங்கப்படவில்லை. அதில் 'சினிமா தூது' பத்திரிக்கையும் அடக்கம்.

இருப்பினும் லட்சுமி காந்தன் பல வழிகளில் முயன்று அனுமதி பெறாமலேயே பத்திரிக்கையை வெளியிட்டு வந்தார். 'சினிமா தூது' பத்திரிக்கையில் திரைத்துறையிலிருந்த முக்கிய நட்சத்திரங்களின் அந்தரங்க வாழ்க்கையை பற்றி மிகவும் வெளிப்படையாக எழுதினார். இதனால், கோபமடைந்த திரைத்துறைச் சார்ந்த சிலர் அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்து சென்று பத்திரிகை உரிமையை முடக்கினர்.

இதனை அறிந்து கொண்ட லட்சுமி காந்தன், புதியதாக பத்திரிகை துவங்க பிரிட்டிஷ் அரசு தடைவிதித்து இருந்ததால், ஏற்கெனவே துவங்கி சிறு பத்திரிக்கையாக வெளிவந்துக்கொண்டு இருந்த 'இந்து நேசன்' என்ற பத்திரிக்கையை விலை கொடுத்து வாங்கி முன்பை விட மிக அதிகமாக திரைத்துறையைச் சார்ந்த பல தரப்பட்ட நபர்களை பற்றி எழுத துவங்கினார். இது அன்றைய காலக்கட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சையாக விளங்கியது.

லட்சுமிகாந்தன் கொல்லப்பட்டது எப்படி?

தொடர்ந்து திரைத்துறையை சார்ந்தவர்களை தாக்கி 'இந்து நேசன்' பத்திரிக்கையில் எழுதி வந்த லட்சுமிகாந்தனுக்கு எதிரிகள் பெருகினர்.

இதனால் 08-11-1944 அன்று லட்சுமிகாந்தன் மதராஸ் மாகாணம் புரசைவாக்கம் பகுதியில் ரிக்‌ஷாவில் சென்ற போது மர்மநபர்களால் கத்தியால் குத்தப்பட்டார்.

உயிருக்கு போராடிய லட்சுமிகாந்தனை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இதனிடையே அடுத்த நாள் 09-11-1944 அன்று உடல்நிலை கவலைக்கிடமாகி மருத்துவமனையில் லட்சுமிகாந்தன் உயிர் பிரிந்தது.

அதன் பின் வழக்கு விசாரணையை தொடர்ந்த காவல்துறையினர் டிசம்பர் மாதம் 8 பேர் மீது லட்சுமி காந்தனை கொலை செய்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். அந்த 8 பேரில் நடிகர்கள் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு நாயுடு உள்ளிட்டோரும் அடங்குவார்கள்.

கொலை மற்றும் கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவ்வழக்கு மதராஸ் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. தியாகராஜ பாகவதர் உள்ளிட்ட 8 பேருக்காக அன்றைய பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட இந்தியாவிலிருந்த மிகப்பெரிய வழக்குரைஞர்கள் வாதிட்டனர்.

வழக்கில் தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு நாயுடு மற்றும் இன்னொருவர் மீது குற்றச்சாட்டு வலுவாக இல்லாத காரணத்தால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மீதமிருந்த தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் உட்பட அனைவருக்கும் குற்றத்தில் தொடர்பு இருப்பதாக கூறி 1945-ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்தது.

https://twitter.com/NFAIOfficial/status/1141573774510194688

தீர்ப்பை எதிர்த்து மதராஸ் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றம் அவர்கள் வாதத்தை ஏற்க மறுத்து தண்டனையை உறுதி செய்தது. இதனால் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தியாகராஜ பாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனும் 1946-ஆம் ஆண்டு தங்கள் வழக்கை லண்டனிலுள்ள 'ப்ரிவி கவுன்ஸிலுக்கு' எடுத்துச் சென்று நடத்தினர். 1947-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 'ப்ரிவி கவுன்ஸில்' வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும் என மதராஸ் உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

அதன் பின் மதராஸ் உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கை மறுவிசாரணை செய்து இருவரும் குற்றமற்றவர்கள் என 1947-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுதலை செய்தது.

விடுதலை ஆன தியாகராஜ பாகவதருக்கு அதன் பின் திரைத்துறையில் மிகப்பெரிய சறுக்கல் ஏற்பட்டது. மீண்டெழ முடியாமல் அவர் திரைத்துறையைவிட்டே விலகினார்.

வெப் தொடராக லட்சுமி காந்தன் கொலை வழக்கு

வெப் தொடராக தயாராகும் லட்சுமி காந்தன் கொலை வழக்கை இயக்குநர் சூர்ய பிரதாப் இயக்குகிறார்.

தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் ஒரு கொலை வழக்கால் எப்படி வீழ்ந்தார் என்பதை மையமாக வைத்து வெப் தொடரை இயக்க முடிவு செய்ததாக பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.

"என்னுடைய சினிமா பயணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கோச்சடையான் படத்தில் துவங்கியது. அதில் இணை இயக்குநராக பணியாற்றினேன் அதன் பின் ஈரோஸ் நிறுவனத்திற்கு 'பொன்னியின் செல்வன்' கதையை வெப் தொடராக தயாரிக்க இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்த் முயன்றார் அதை நான் இயக்குவதாக இருந்தது பல்வேறு காரணங்களுக்காக அது நடைபெறாமல் போனது அதன் பின் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த கதைக்கான தேடல்களை துவங்கிவிட்டேன் அதன் பின் பல ஓடிடி தளங்களுக்கு இக்கதையை விவரிக்கும் முயற்சியை துவங்கினேன், தற்போது இந்த வெப் தொடரின் தயாரிப்பாளர் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கார்த்திக் மூலம் சோனி லிவ் ஓடிடி தளத்திற்கும் கதையை அனுப்பினோம் மற்ற நிறுவனங்களை விட சோனி லிவ் இக்கதையில் மிகுந்த ஆர்வம் காட்டியது அதற்கு காரணமாக நான் கருதுவது அவர்கள் ஓடிடி சார்பில் வெளியிட்ட பல வெப் தொடர்களில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிட்ட தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் நீட்சியாக தான் தற்போது எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாக நம்புகிறேன்" என்றார்.

"நான் இந்த சம்பவத்தை பற்றி படிக்க துவங்கிய போது ஒரு வெப் தொடருக்கான மிகச்சிறந்த கதை கருவாக தோன்றியது, இவ்வழக்கு குறித்து மக்களுக்கு தெரிந்த பொதுவான விடயங்களை தாண்டி இதன் பின் மிகப்பெரிய அரசியல் உள்ளது அதுவே இத்தொடரின் மிக முக்கியமான பகுதி, தொடர் வெளியாகும் போது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன் தற்போது முன் தயாரிப்பு பணிகள் முடிந்துவிட்டன நடிகர், நடிகைகள் தேர்வு நடந்துக்கொண்டு இருக்கிறது இறுதியான பின் தகவல் தெரிவிக்கிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.

இந்த வெப் தொடரை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த கார்த்தி அளித்த பேட்டியில், "இந்த வெப் தொடர் நிச்சயமாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை கதை கேட்கும் போது எனக்கு இருந்தது, தற்போது முன் தயாரிப்பு பணிகள் முடிந்தவுடன் அந்த நம்பிக்கை மேலும் வலுவடைந்துள்ளது." என்றார்.

"இந்த தொடரில் எங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக இருந்த காலகட்டத்தை திரையில் கொண்டு வர வேண்டும் அதற்காக 4 பிரம்மாண்ட செட்டுகள் சென்னையில் அமைக்கும் பணி நடந்துக்கொண்டு இருக்கிறது. அது போக கல்கத்தாவில் அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம் அதே போல் மைசூரில் சில நாட்களும் இலங்கையில் சில நாட்களும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்" என்று கூறினார்.

இந்த வெப் தொடர் மிக அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட உள்ளதால் திறமையான ஷோ ரன்னர் தேவைப்பட்டது இயக்குநர் ஏ.எல்.விஜய் எனக்கு நல்ல நண்பர் ஏற்கனவே அவர் 'மதராஸப் பட்டிணம்' 'தலைவி' போன்ற படங்களை இயக்கியதால் அவர் ஷோ ரன்னராக இருந்தால் நன்றாக இருக்கும் என நான் நம்பினேன் சோனி லிவ் அதனை ஏற்றுக்கொண்டது ஏ.எல்.விஜய் அவர்களும் சம்மதம் தெரிவித்தார்" என்று கூறினார்.

தியாகராஜ பாகவதரின் பின்னணி

தியாகராஜ பாகவதர் 1934 ஆம் ஆண்டு 'பவளக்கொடி' என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர், இப்படம் சுமார் 100 வாரங்கள் ஓடியது. அதனை தொடர்ந்து மொத்தம் 15 திரைப்படங்கள் நடித்தார் அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 1944ஆம் ஆண்டும் 16 அக்டோபர் தீபாவளி அன்று வெளியான இவர் நடிப்பில் வெளியான 'ஹரிதாஸ்' என்ற திரைப்படம் 22 நவம்பர் 1946 வரை சுமார் 133 வாரங்கள் அதாவது 3 தீபாவளிகள் ஓடி சாதனை படைத்தது. அப்போதே இப்படம் 10 லட்சம் வசூலித்தும் சாதனைப்படைத்தது.

https://twitter.com/nfaiofficial/status/969063806260297728

இவ்வளவு சாதனைக்குரிய ஒருவரின் இறுதி காலம் மிக மோசமாக அமைந்தது இன்றும் கூட தியாகராஜ பாகவதரின் சந்ததியினர் மிகவும் சிரமப்படும் சூழ்நிலையில் உள்ளனர்.

கடந்த 28ம் தேதி ஜூன் மாதம் 2021ஆம் ஆண்டு சென்னை தலைமை செயலகத்தில் தியாகராஜ பாகவதரின் 2-ஆவது மனைவி ராஜம்மாள் அவர்களின் மகள் அமிர்தலட்சுமி என்பவரின் மகன் சாய் ராம் என்பவர் ஒரு கோரிக்கை மனு அளித்தார், மனுவில் தான் புகைப்பட கலைஞராக இருந்ததாகவும் கொரோனா பரவல் காரணமாக வேலை எதுவும் கிடைக்கவில்லை என்பதால் வீட்டு வாடகை கூட கொடுக்க இயலாத சூழ்நிலை உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு எட்டிய உடன் தமிழக அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குறைந்த வாடகையில் வீடு ஒன்றும் 5 லட்ச ரூபாய் உதவியாகவும் அளித்து இருந்தார்.

இதற்கு முன்னதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி ரூ.1 லட்சம் நிதி அளித்து உதவியதாகவும் நடிகர் பார்த்திபன் சில பொருளாதர உதவிகள் செய்ததாகவும் சாய்ராம் கூறினார். நடிகர் சூர்யா தங்களின் அகரம் அறக்கட்டளையின் மூலம் குழந்தைகளின் படிப்பிற்கு உதவியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
A web series based on lakshmikanthan murder case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X