For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் ரூ. 64.44 கோடி, மீதி பணம் அபராதம்: நீதிபதி குன்ஹா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Assets case: Verdict delivers crippling blow
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 64 கோடியே 44 லட்சம் போக மீதித்தொகையை செலுத்தினால் போதும் என்று ஜெயலலிதாவிற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அபராதம் கட்டத் தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனையை ஏற்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கிற்காக தமிழக அரசு வழக்கு செலவாக ரூபாய் 5 கோடியை கர்நாடக அரசுக்கு தரவேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

1991-96ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருமானத்தை மீறி ரூ.66.65 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிசாமி புகார் செய்தார். அதைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

18 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில் நேற்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

பரப்பன அக்ரஹாரா

சிறை வளாகத்தில் நீதிமன்றம் அமைத்து தீர்ப்பு அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று காலை 6 மணி முதல் நீதிமன்றம் அமைந்துள்ள பெங்களூர் பரப்பன அக்ரஹரா சிறை வளாகத்தில் இருந்து ஒரு கி.மீ. சுற்றளவிற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த பகுதியில்இருந்த கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. முதல்வர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலா, அவரது உறவினர் இளவரசி ஆகியோர் சென்னையில் இருந்து நேற்று காலை 9.45 மணிக்கு சிறை வளாகத்தில் உள்ள தனி நீதிமன்றத்திற்கு வந்தார். சுதாகரன் முன்னதாக தனி காரில் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.

நீதிமன்றத்தில் ஜெயலலிதா

காலை 10.40 மணிக்கு நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு வந்தார். சரியாக பகல் 11.20 மணிக்கு இருக்கையில் அமர்ந்த நீதிபதி, அங்கிருந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் உங்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அது குறித்து ஏதாவது கருத்து தெரிவிக்க விரும்புகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு 4 பேரும், நாங்கள் குற்றவாளிகள் அல்ல என்று பதில் அளித்தனர்.

4 பேரும் குற்றவாளிகள்

அதனையடுத்து பகல் ஒரு மணிக்கு தண்டனை விவரத்தை அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்தார். பின்னர் ஒரு மணிக்கு மீண்டும் நீதிமன்றம் கூடியது. அப்போது வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவிற்கு குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ள 3 பிரிவுகளின் மீதும் 4 ஆண்டுகள் சாதாரண சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.

அபராதம் கட்டாவிட்டால்

ரூ.100 கோடியை செலுத்த தவறினால் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

3 பிரிவுகளில் தண்டனை

பின்னர் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 3 பிரிவுகளின் கீழும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறினார்.

பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள்

மேலும், ஜெயலலிதாவிற்கு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 64 கோடியே 44 லட்சம் போக மீதித்தொகையை செலுத்தினால் போதும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அப்போது ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் சார்பிலும் தண்டனையை குறைக்கக் கோரியும், அபராதத் தொகையை குறைக்கக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தண்டனையை குறைக்க மனு

அந்த மனுக்களுக்கு பதிலளித்து அரசு வழக்கறிஞர் பவானிசிங் வாதிடும்போது, தண்டனையை எந்த சூழ்நிலையிலும் குறைக்கக்கூடாது என்று தெரிவித்தார். அதையடுத்து 4 பேரும் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

1240 பக்க தீர்ப்பு

பின்னர் மாலை 4 மணியளவில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரிடமும் 1,240 பக்கங்களை கொண்ட தீர்ப்பின் நகலை நீதிமன்ற ஊழியர்கள் அளித்தனர். அதில் 4 பேரும் கையெழுத்திட்டனர். பின்னர் ஜெயலலிதாவை பரப்பன அக்ரஹா சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். பரிசோதனைக்கு பிறகு மாலை 5.20 மணிக்கு 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

விதிக்கப்பட்ட தண்டனைகள்

அதன் பின் வெளியே வந்த அரசு வழக்கறிஞர் பவானிசிங் கூறியதாவது:ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டம் 13(2) மற்றும் 13(1)(ஈ) ஆகிய பிரிவுகளின் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 109ன் கீழும், 120ன் கீழும் குற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.

தீர்ப்பளித்த நீதிமன்றம்

தொடர்ந்து வழக்கு விசாரணையின் அடிப்படையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு 3 பிரிவுகளிலும் 4 ஆண்டுகள் சாதாரண சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதே பிரிவுகளின் கீழ் மற்ற மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சாதாரண சிறையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கு செலவு ரூ. 5கோடி

இந்த வழக்கிற்காக தமிழக அரசு வழக்கு செலவாக ரூபாய் 5 கோடியை கர்நாடக அரசுக்கு தரவேண்டும். ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் சிறைச்சாலையை மாற்றக்கோரியோ, மருத்துவ வசதிக் கோரியோ எந்தச் சிறப்புச் சலுகை கோரியோ மனு ஏதும் தாக்கல் செய்யவில்லை. அது அவர்கள் விருப்பத்தை பொறுத்தது.

மேல்முறையீடு

அவர்கள் மேல் முறையீடு செய்ய வேண்டுமானால் கர்நாடகா உயர்நீதிமன்றத்தை அணுகலாம். ஜெயலலிதா பதவி இழப்புத் தொடர்பாக எந்தக் கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு பவானி சிங் கூறினார்.

பறிமுதல் செய்யப்பட்டவை

சொகுசு பஸ் 1, .தங்க நகைகள் 7 சூட்கேஸ்,சொத்து விற்பனை பத்திரம் 19, ரோலக்ஸ் கைக்கடிகாரம் 7, வைரங்கள் 573, விலை உயர்ந்த பச்சைக்கல் 16, 290 வைரம் பதித்த தங்க ஒட்டியாணம் 1, 2,389 வைரம், 18 பச்சைக்கற்கள், ரத்தினக்கல் பதித்த ஒரு கிலோ எடை கொண்ட ஒட்டியாணம் 1,அரை கிலோ தங்க காசுமாலை 1, அரை கிலோ தங்க குடம் 1, 191 கிராம் தங்க செங்கோல் 1, இரட்டை இலையுடன் கூடிய தங்க மாங்காய் 1, வெள்ளைக்கல் பதித்த தங்க கிரீடம் 1, 573 வைரம், 16 பச்சைக்கல், 3 ரத்தனக்கல் பதித்த தங்க நெக்லஸ் 1, 1090 வைரம், 73 ரத்தினக்கல் பதித்த தங்க நெக்லஸ் 1 இதுதவிர, ஏராளமான வைரம் பதித்த வளையல்கள், மூக்குத்திகள், காது தோடுகள், ஒட்டியாணங்கள், தங்க வாள், பட்டு சேலைகள் மற்றும் காலணிகள் உள்ளிட்ட 1066 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

English summary
Earlier, Special Public Prosecutor Bhavani Singh said AIADMK leader Jayalalithaa would have to approach the Karnataka High Court for bail and a stay on the sentence. The court said the fine amount could be adjusted against the properties seized by the Directorate of Vigilance and Anti-Corruption and attached by the court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X