BBC SPECIAL: முஸ்லீம்கள் மீதான வன்முறை திட்டமிடப்பட்டதா? அதற்கான 9 காரணங்கள்

Posted By: BBC Tamil
Subscribe to Oneindia Tamil

நாட்டின் முக்கியமான பல நகரங்களில் கடைகளை தேடி தீ வைப்பது, உடைத்தெறிவது என்ற அண்மை வன்முறை சம்பவங்களில் பல ஏறக்குறைய ஒன்றுபோலவே உள்ளன.

அண்மையில் பிகார் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் வன்முறை மற்றும் கலவரங்கள் என சுமார் பத்து சம்பவங்கள் நிகழ்ந்தன. அவை ஏறக்குறைய ஒன்றுபோலவே இருக்கின்றன. உள்ளுர் பிரச்சனைகளால் தொடங்கிய பிரச்சனை பெரிய அளவில் வெடித்துள்ளது என்பதே இந்த சம்பவங்களுக்கு இடையிலான கண்ணிகள்.

எல்லா இடங்களிலும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றுபோல் இருப்பதோடு, பிரச்சனை தொடங்கியதில் இருந்து முடியும் வரை நடைபெற்ற தொடர் நிகழ்வுகளும் ஒன்றையொன்று ஒத்திருப்பதையும் காண முடிந்தது.

பிபிசி நிருபர்கள் ரஜ்னீஷ் குமார் மற்றும் தில்நவாஸ் பாஷா ஆகியோர் பிகார் மற்றும் மேற்கு வங்கத்தில் ராமநவமி ஊர்வலத்திற்கு பிறகு நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற நகரங்களுக்கு சென்று பார்வையிட்டனர்,

வெவ்வேறு நகரங்களில் ஆங்காங்கே நடைபெற்ற வன்முறை நிகழ்வுகள் எதிர்பாராத விதமாக ஏற்பட்டவை அல்ல என்றும், இவை அனைத்துமே திட்டமிடப்பட்ட சதி என்றும் கூறுவதற்கான ஒன்பது காரணங்கள் உள்ளன.

1. சீற்றமான ஊர்வலம், இளைஞர்கள், கொடிகள், பைக்...

கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி, பிகாரின் பல இடங்களிலும், முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ச்சியான தாக்குதல்கள் நடைபெற்றன. மார்ச் 17ஆம் தேதி மதியம், மத்திய அமைச்சர் அஸ்வினி செளபேவின் மகன் அர்ஜித் செளபே, இந்து புத்தாண்டை முன்னிட்டு, பாகல்பூரில் ஊர்வலம் ஒன்றை நடத்தினார்.

அதன்பிறகு ராமநவமி வரை ஔரங்காபாத், சமஸ்திபுரின் ரோஸ்டா, நவாதா போன்ற நகரங்களில் வகுப்புவாத கலவரங்கள் பரவின. இந்த எல்லா நகரங்களிலும் ராமநவமியை முன்னிட்டு ஊர்வலங்கள் நட்த்தப்பட்டன. பைக்கில் அமர்ந்தவாறு ஊர்வலத்தில் கலந்துகொண்ட இளைஞர்களையும், தலையில் காவிக் கொடியை கட்டியவர்களையும் பார்க்க முடிந்தது. அதோடு ஊர்வலத்தில் வந்த மோட்டார் சைக்கிள்களில் காவி நிறக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

ரோஸ்டாவில் நடைபெற்ற ஊர்வலத்தில் மட்டும் பைக்குகள் இடம் பெறவில்லை. ஆனால் ஊர்வலத்தில் கலந்துக் கொண்ட மக்களோ மிகுந்த சீற்றத்தில் இருந்தனர். அவர்களின் கைகளில் காவிக் கொடிகள் இருந்தன. இதற்கு முன்பு இந்த நகரங்களில் பலவற்றில் இந்து புத்தாண்டிற்கோ, ராமநவமிக்கோ இதுவரை ஊர்வலம் எதுவும் நடத்தப்பட்டதில்லை.

கடந்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்புரில் ராணா பிரதாப் ஜெயந்தி என்ற பெயரில் நடத்தப்பட்ட ஊர்வலத்திற்கு பிறகு தலித்துகள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. மேவாரை சேர்ந்த ராணா பிரதாப் சிங்குக்கு சஹாரண்புரில் ஊர்வலம் எடுத்தது இதுவரை நடைபெறாத புதுமையான நிகழ்வு.

2. பல்வேறு அமைப்புகளே ஊர்வல ஒருங்கிணைப்பாளர்கள்

இந்த ஊர்வலங்களை ஏற்பாடு செய்திருந்தவை பல்வேறு அமைப்புகள் என்றாலும், அவற்றின் பெயர்கள் வெவ்வேறாக இருந்தாலும், அவை ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தளத்துடன் தொடர்புடையவையே.

ஒளரங்கபாத் மற்றும் ரோஸ்டாவில் நடைபெற்ற ஊர்வலங்களில் பா.ஜ.க மற்றும் பஜ்ரங் தள் தலைவர்கள் நேரடியாகவே பங்கேற்றனர்.

ஒளரங்கபாதில் பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் சுஷீல் சிங், பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ. ராமாதர் சிங், இந்து இளைஞர் கழக தலைவர் அனில் சிங் ஆகியோர் கலந்துக் கொண்டனர். அவர்களில் அனில் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரோஸ்டாவில் பா.ஜ.க மற்றும் பஜ்ரங் தள் தலைவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாகல்புரில் மத்திய அமைச்சர் அஷ்வனி செளபேயின் மகன் கலந்துக் கொண்டார்.

இதற்கிடையில் சில புதிய இந்து அமைப்புகளும் மழைக்காளன்களாக திடீரென்று தோன்றியதுடன் ஊர்வலத்திலும் பங்கேற்றன. பாகல்புரில் 'காவி புரட்சி' மற்றும் ஔரங்காபாத்தில் 'பொற்கால புரட்சி' என்ற பொருள் கொண்ட அமைப்புகள் புதிதாக தோன்றியுள்ளன. வகுப்புவாத மோதல்களுக்குப் பிறகு, இந்த இரண்டு அமைப்புகளின் தலைவர்களும் சந்திக்கவோ, அது குறித்து பேசவோ தயாராக இல்லை. அதோடு, மேற்கு வங்க மாநிலம் ஆசன்சோலில், ராமநவமி ஊர்வலத்திற்கு பா.ஜ.க ஆதரவு தெரிவித்தது.

3. குறிப்பிட்ட பாதையில் ஊர்வலம் செல்லவேண்டும் என பிடிவாதம்

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளின் வழியாக ஊர்வலம் செல்லவேண்டும் என்ற பிடிவாதம் தென்பட்டது. நவாதாவில் ராமநவமிக்கு முன்னதாக மாவட்ட அதிகாரிகள் நகரில் உள்ள மதத் தலைவர்களை அழைத்து சமாதான கூட்டத்தை நடத்தினார்கள். அப்போது, முஸ்லிம் பகுதிகளில் ஊர்வலம் செல்லும்போது, 'பாகிஸ்தான் ஒழிக' என்ற முழக்கத்தை தவிர்க்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டபோது, அதற்கு பா.ஜ.க கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்தது.

நவாதா நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய அமைச்சருமான கிரிரஜ் சிங் செளகான் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? 'பாகிஸ்தான் ஒழிக' என்ற முழக்கத்தை இந்தியாவில் எழுப்பாமல் வேறு எங்கு எழுப்புவது? ஒளரங்காபாத், ரோஸ்டா மற்றும் பாகல்புர், ஆசன்சோலிலும் இதேபோன்ற சம்பவங்கள் நடந்தேறின.

ஆயினும், ஆசன்சோலில் நடைபெற்ற சம்பவங்களில், முஸ்லிம் பகுதிகளில் வசிக்கும் இந்துக் குடும்பங்களும் சிக்கலில் சிக்கின. அவர்களும் வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.

4. தூண்டுதல் முழக்கங்களும், ஆட்டம் பாட்டமும்

ஊர்வலங்கள் சென்ற பகுதிகளில், முஸ்லிம்களை 'பாகிஸ்தானிகள்' என்று அழைத்த ஊர்வலத்தினர் ஆட்டம்-பாட்டங்களையும் நடத்தினார்கள். 'இந்துக்கள் விழித்துக் கொண்டபோதெல்லாம், முஸ்லிம்கள் தப்பி ஓடுகிறார்கள்' என்பது போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஒளரங்கபாத் மற்றும் ரோஸ்டாவில் வசிக்கும் மக்கள், ஊர்வலங்களில் எழுப்பப்பட்ட முழக்கங்களை பிபிசி நிருபர்களிடம் நகலெடுத்து முழங்கிக் காண்பிக்க முயன்றனர்.

ஔரங்காபாத்தின் இஸ்லாமிய இடுகாடுகளில், ரோஸ்டாவின் மூன்று மசூதிகளில் காவிக் கொடிகள் ஏற்றப்பட்டன. அனைத்து ஊர்வலங்களிலும் ஒரே ஒலிநாடா பயன்படுத்தப்பட்டது.

ஆசான்சோலில் நடைபெற்ற ராமநவமி ஊர்வலத்தில் பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டதாக பிபிசி செய்தியாளர் தில்நாவாஸ் பஷாவிடம் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ராஜேஷ் குப்தா கூறினார்.

5. வினை - எதிர்வினை கோட்பாடு

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை "அவர்கள் நடவடிக்கைகளின் எதிர்வினை" என்று ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் கூறும் நிலையில் அதே கருத்தை பிபிசியிடம் வழிமொழிந்தார் பா.ஜ.கவின் மாநில செயலாளர் ராஜேந்திர சிங்.

இதே கருத்தை ஒளரங்காபாதை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுரேந்திர கிஷோர் சிங்கும் கூறுகிறார். ஔரங்காபாத், ரோஸ்டா மற்றும் பாகல்பூரில் நடைபெற்ற ஊர்வலங்களில், முஸ்லிம்கள் காலணிகளையும் கற்களையும் வீசியதாக வதந்திகள் பரவின.

6. கட்டுப்படுத்தப்பட்ட வன்முறை

இந்த நகரங்களில் வன்முறை பரவலாகவில்லை, எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை, இது மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதல் என கூறப்படுகிறது. ஔரங்காபாத்தில் ஊர்வலத்திற்குப் பிறகு நடைபெற்ற வன்முறையில் எரிக்கப்பட்ட 30 கடைகளில் 29 முஸ்லிம்களுக்கு சொந்தமானவை. வன்முறையின் இலக்கு முஸ்லிம்களே என்பதையே இது காட்டுகிறது.

கடைகளுக்கு தீ வைத்தவர்களுக்கு கடைகளின் உரிமையாளர் முஸ்லிம்களா இந்துக்களா என்று தெரிந்திருந்ததாக ஒளரங்காபாத் மாவட்ட நிர்வாகம் கூறுகிறது. ஒளரங்காபாதில் இந்து இளைஞர் வாஹினி தலைவர் அனில் சிங்கின் வீட்டில் இருந்த முஸ்லிம் கடைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அவை பாதுகாப்பாக இருந்தன.

இந்த வன்முறை சம்பவங்களில் உயிரிழப்பு ஏற்படவில்லை. ஆனால் இது அவர்களது வாழ்வாதாரத்தில் நீண்ட காலத்திற்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறுக்கமுடியாது.

7. நிர்வாகத்தின் பங்கு

சம்பவங்களில் நிர்வாகத்தின் பங்கு வன்முறை சம்பவங்களைத் தவிர பிற இடங்களிலும் காணப்பட்டது. மார்ச் மாதம் 26 அன்று, ஔரங்காபாத் நகரில், மசூதியில் செருப்பு வீசப்பட்டபோதும், முஸ்லிம்களின் இடுகாடுகளில் காவிக்கொடி ஏற்றப்பட்டபோதும், முஸ்லிம்களுக்கு எதிராக கீழ்த்தரமான முழக்கங்கள் எழுப்ப்பட்டபோதும் நிர்வாகத்தினர் அங்கு இருந்தனர்.

இதுபோன்ற மோசமான சம்பவங்களுக்கு பிறகும் அதற்கு அடுத்த நாள் அதாவது மார்ச் 27ஆம் நாளன்று முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் ஊர்வலங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இது குறித்த கேள்விகளுக்கு மாவட்ட நிர்வாகத்தினரின் பதில் என்ன தெரியுமா? அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாது என்று ஊர்வல ஒருங்கிணைப்பாளர்கள் எழுத்துபூர்வமாக உறுதி அளித்தார்கள் என்பதே!

இருந்தாலும், மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கையாக இருந்ததால்தான் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக நவாதா, பாகல்பூர் மற்றும் ரோஸ்டாவில் உள்ள முஸ்லிம்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், ஔரங்கபாத்தில் பாதிக்கப்பட்டவர்களோ, நிர்வாகத்தினரின் அனுமதியுடனே வன்முறைகள் நடந்ததாக கூறுகின்றனர்.

8. சமூக ஊடகத்தில் வதந்திகள்

முஸ்லிம்கள் ஊர்வலத்தைத் தாக்கியதான வதந்திகள் பரவின. ஆசன்சோலில் பெரிய கலவரம் நடைபெறுவதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவியதில், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.

9. முஸ்லிம் பயங்கரவாதம்

இதுபோன்ற சம்பவங்கள் மூலம், முஸ்லிம்களிடையே அச்சம் பரவியது. ஒளரங்காபாதில் இம்ரோஜ் என்பவரின் காலணிக்கடை எரித்து சாம்பலாக்கப்பட்டது. வளைகுடா நாடுகளில் வேலை பார்த்து சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு இந்த தொழிலில் அவர் இறங்கினார்.

இனிமேல் இந்தியாவில் எந்த தொழிலும் செய்வதில்லை என்று முடிவுக்கு வந்த அவர், குடும்பத்துடன் ஹாங்காங்கிற்கு செல்லத் தயாராகிவிட்டார். நகரில் வசிக்கும் பிற முஸ்லிம்களும் தங்கள் தொழிலை மூடிவிடும் மனநிலைக்கு வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மறுபுறத்திலோ, இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களின் நோக்கம் வெற்றி பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

'செங்கல் எறிந்தால், அதற்கு அதே வகையில் பதில் கொடுக்கப்படும்' என்று பாகல்புரை சேர்ந்த சேகர் யாதவ் என்ற இளைஞர் கூறுகிறார்.

வகுப்புவாத வெறுப்பு என்பது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கிறது, ஏனெனில் அதன் நோக்கம் ஒன்றே என்கிறார் தில்லி பல்கலைக்கழக சமூக அறிவியல் பேராசிரியர் சதீஷ் தேஷ்பாண்டே.

"முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு என்பது அரசியல் நடவடிக்கையே என்றாலும், அதற்கு சமூக ஆதரவை அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது" என்கிறார் தேஷ்பாண்டே.

மேலும், "வகுப்புவாத சம்பவங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கும்போது, சமூகத்தின் பாரபட்சமும் பட்டவர்த்தனமாகிறது. தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை இயல்பானதாக ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் அதிகரிக்கிறது."

"ஏதாவது ஒரு அமைப்பு கலகத்தில் ஈடுபடும்போது அவை திட்டமிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முறைகளை மேற்கொள்கின்றன. இந்திய அரசியலில், இத்தகைய வன்முறைகளை நிரந்தரமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெளிப்படையாக கலகம் செய்ய வேண்டிய அவசியம் இனிமேல் இல்லை. எந்தவொரு அசாதாரண நிகழ்வுமே இல்லாமல் குறைந்தபட்ச அச்சத்தை ஏற்படுத்தமுடிகிறது. அந்த சமூகம் கையறு நிலையை தலைகுனிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன" என்கிறார் சதீஷ் தேஷ்பாண்டே.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
நாட்டின் முக்கியமான பல நகரங்களில் கடைகளை தேடி தீ வைப்பது, உடைத்தெறிவது என்ற அண்மை வன்முறை சம்பவங்களில் பல ஏறக்குறைய ஒன்றுபோலவே உள்ளன.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற