For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரியலூர் மாணவி தற்கொலை, தேவாலயங்கள் மீது தாக்குதல்: பிபிசி கள ஆய்வில் புதிய தகவல்கள்

By BBC News தமிழ்
|
BCC ground report on ariyalur student death and attack on chruches
Getty Images
BCC ground report on ariyalur student death and attack on chruches

மதம் மாற வலியுறுத்தியதால் அரியலூர் மாணவி தற்கொலைசெய்து கொண்டதாக சொல்லப்படும் சம்பவத்தில் உண்மையில் நடந்தது என்ன? மாநிலம் முழுவதும் கிறிஸ்தவ நிறுவனங்கள் மீது இந்து அமைப்புகள் ஒருங்கிணைந்து தாக்குதல் நடத்துகின்றனவா?

பிபிசி தமிழ் நடத்திய ஒரு கள ஆய்வு:

பின்னணி: அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவர் தான் படித்துவந்த கிறிஸ்தவப் பள்ளிக்கூடத்தின் விடுதியில் தற்கொலைக்கு முயன்று சில நாட்களுக்குப் பிறகு உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விடுதியில் மதம் மாற வலியுறுத்தப்பட்டதால்தான் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இறந்தார் என இந்து அமைப்புகள் ஒரு வீடியோவை வெளியிட்டுக் கூறின. ஆனால், அதற்கு சில நாட்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட மற்றொரு வீடியோவில், தன்னை விடுதியில் அதிகமாக வேலைசெய்யச் சொன்னதால், தான் தற்கொலைக்கு முயன்றதாக மாணவி தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த விஸ்வ ஹிந்து பரிஷத், பாரதீய ஜனதா கட்சி, அகில பாரத வித்யார்த்தி பரிஷத் ஆகியவை சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடத்தை உடனடியாக மூடவேண்டுமென வலியுறுத்தின. இந்த நிலையில், இந்த விவகாரம் மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு அனுப்பப்பட்டிருப்பதால், இதுகுறித்த சர்ச்சைகள் தற்போதைக்கு ஓய்ந்திருக்கின்றன.

ஆனால், அரியலூர் மாணவியின் மரணமும், அதை அடுத்து, புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களில் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களால் கிறிஸ்தவர்கள் குறிவைக்கப்பட்ட சம்பவங்களும் பல கேள்விகளை எழுப்புகின்றன.

இந்நிலையில், தொடர்புடைய இடங்களில் கள ஆய்வில் ஈடுபட்டது பிபிசி தமிழ்.

அடிக்கடி வீட்டுக்கு வரும் இந்து அமைப்பினர்

அரியலூர் மாவட்டத்தின் கடைக்கோடியில், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நெருக்கமாக அமைந்திருக்கிறது சிறிய ஊரான வடுகபாளையம். மகளை இழந்த பெற்றோரைப் பார்க்க அவ்வப்போது இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள்.

அந்த மாணவியின் தந்தை முருகானந்தமும் தாய் சரண்யாவும் ஊடகங்களிடம் பேசுவதற்கு முற்றிலுமாக மறுத்தார்கள். "எல்லாம், எல்லோருக்கும் தெரிந்ததுதான். நீங்க எழுதுறதை எழுதிக்கங்க" என்கிறார் முருகானந்தம்.

முருகானந்தத்திற்கும் அவருடைய முதல் மனைவி கனிமொழிக்கும் பிறந்தவர்தான் இறந்துபோன 12ஆம் வகுப்பு மாணவி. இந்தத் தம்பதிக்கு மேலும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். தற்போது இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டிருக்கும் சரண்யாவோடும் முருகானந்தத்துக்கு ஒரு குழந்தை இருக்கிறது.

முருகானந்தத்தின் வீடு இருக்கும் தெருவுக்கு அடுத்த தெருவில் இருக்கிறார் இறந்துபோன கனிமொழியின் தாய் அங்கையர்கரசி. இவருடைய கூற்றுப்படி அந்த மாணவி, தம் பெற்றோருடன் மகிழ்ச்சியாக இல்லை. "நான் என் பொண்ணுக்கு 16 வயசா இருக்கும்போது அவனுக்கு (முருகானந்தம்) கட்டிக்கொடுத்தோம். அரைக்காணி நிலமும் கொடுத்தோம். எட்டு வருசத்துல தற்கொலை பண்ணி செத்துப்போயிட்டா. அதுல இருந்து அவுகளோட பேச்சு வார்த்தை கிடையாது. அவ செத்து சில மாதங்களிலேயே இந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அதற்குப் பிறகு, அந்தப் பிள்ளையையும் ரெண்டு பசங்களையும் எங்களோட பேசக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. எட்டு வருசமா உறவே இல்லாம இருந்தோம்" என்கிறார் அங்கையர்கரசி.

தற்போது மாணவி தற்கொலைசெய்து கொண்டிருப்பதற்கான காரணம் அவருக்குப் புரிபடவில்லை. "பள்ளிக்கூடத்துல வேல வாங்குனதா சொல்றாங்க. மதம்மாற்ற முயற்சி பண்ணதா சொல்றாங்க. இப்ப உயிருக்குப் போராடுதுன்னு சொன்னவுடனே போய்ப் பார்த்தோம். பிறகு இறந்த பிறகு துணியெடுத்துப் போட்டோம்" என்று மட்டும் சொல்கிறார்.

2 ஆண்டுகள் முன்பே அந்த மாணவி கையில் சூடு வைத்த தழும்பு

இவருடைய சகோதரி நித்யானந்த சரஸ்வதி பள்ளிக்கூடமொன்றில் தலைமையாசிரியராக இருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, இறந்துபோன மாணவியின் கையிலும் கன்னங்களிலும் சூடு வைத்த காயம் இருந்ததைப் பார்த்த நித்யானந்த சரஸ்வதி, குழந்தைகள் பாதுகாப்பு நலக் குழுமத்தில் புகார் அளித்திருக்கிறார். "அந்தத் தருணத்தில் போலீஸ் வந்து விசாரிச்சாங்க. நான் தெரிஞ்சதைச் சொன்னேன்." என்கிறார்.

"கடைசியாக பார்க்கும்போது, என் மகனிடம் மாமா என் தம்பிகளைப் பார்த்துக்கோன்னு சொல்லுச்சு" என்று கண் கலங்குகிறார் அங்கயற்கரசி.

தங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவந்த இந்து அமைப்பினரிடம் பேசும் முருகானந்தம் - சரண்யா தம்பதி, "நாங்க கொடுமைப்படுத்தியதால் அவ தற்கொலை பண்ணிக்கிட்டதா சொல்றாங்க. ஆனா நாங்க ஒன்னா எல்லாம் சுற்றுலாகூட போனோம் (புகைப்படத்தைக் காட்டுகிறார்கள்). மத்த ரெண்டு பசங்களையும் எங்களோடையே வைச்சுத்தான் படிக்க வைக்கிறோம். எங்களைப் போய் இப்படிச் சொல்றாங்க" என்கிறார்கள். இதைத் தவிர ஊடகங்களிடம் பேச அவர்கள் முன்வரவில்லை.

தற்கொலை செய்துகொண்ட மாணவி படித்த தூய இருதய மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் மாணவியின் ஊரான வடுகபாளையத்திற்கும் இந்தப் பள்ளிக்கூடம் அமைந்திருக்கும் மைக்கல்பட்டிக்கும் இடையில் வெகுதூரமில்லை. சுமார் 30 கி.மீ. தூரத்தில் கொள்ளிடம் ஆற்றுக்கு அப்பால் அமைந்திருக்கிறது அந்த ஊர்.

விடுதிக்கு செல்லும் பாதைகள் மூடல்

மாணவியின் மரணத்திற்குப் பிறகு, அந்தப் பள்ளியின் அருகிலேயோ, விடுதியின் அருகிலேயோ யாரும் செல்வதற்கு தடைசெய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்படும் அந்தப் பள்ளியைச் சேர்ந்த சகாயமேரி என்ற அருட்சகோதரி கைதுசெய்யப்பட்ட நிலையில், அந்தப் பள்ளிக்குச் செல்லும் பாதைகள் அனைத்தும் காவல்துறையினரால் மூடப்பட்டுள்ளன.

பள்ளியைப் பற்றி என்ன சொல்கிறார்கள்?

ஆனால், மைக்கல்பட்டியில் யாரைக் கேட்டாலும் அந்தப் பள்ளிக்கூடம் குறித்து மிகவும் நேர்மறையான கருத்துகளையே தெரிவிக்கின்றனர். மைக்கல்பட்டி என்ற அந்த ஊர் சுமார் 2000 குடும்பங்கள் வசிக்கும் ஒரு சிறிய பகுதி. இங்கு இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என மூன்று மதத்தைச் சேர்ந்தவர்களும் இணைந்தே வாழ்கிறார்கள்.

தங்கள் ஊரைச் சேர்ந்த பள்ளிக்கூடம் குறித்து எதிர்மறையான செய்திகள் ஊடகங்களில் வருவது குறித்து மிகுந்த வெட்கத்திலும் வருத்தத்திலும் இருக்கிறார்கள் இந்த ஊர் மக்கள். 1995ஆம் வருடம் அங்கு படித்த லதா, "நான் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை அந்தப் பள்ளிக்கூடத்தில்தான், அதே விடுதியில்தான் தங்கிப் படித்தேன். ஒரு முறைகூட இது போன்ற மதமாற்றம் குறித்து யாரும் பேசியதில்லை. என் பிள்ளைகளும் இப்போது அங்கேதான் படிக்கிறார்கள். அவர்களுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை" என்கிறார்.

"நானும் அந்தப் பள்ளிக்கூடத்தில்தான் படித்தேன். மதத்தைப் பற்றியே பேச மாட்டார்கள். கயிறு கட்டுவது பொட்டு வைப்பது குறித்தெல்லாம் யாரும் பேச மாட்டார்கள்" என்கிறார் அங்கு படித்து முடித்த ஹரிஹரன்.

தற்போது கரூரில் செவிலியராகப் பணிபுரியும் துர்கா, "நான் 2015ல் அங்கே படித்து முடித்தேன். இதுபோல நான் கேள்விப்பட்டதேயில்லை. அங்கிருக்கும் சிஸ்டர்கள் படிப்புக்கு மிகவும் உதவியாக இருப்பார்கள். உணவு மிகச் சிறப்பாக இருக்கும். பலர் மிகச் சிறந்த மதிப்பெண்களை எடுத்தார்கள். நான் இங்கே படித்து முடித்துவிட்டு, நர்சிங் முடித்து கரூரில் வேலை பார்க்கிறேன். நான் படித்த பள்ளிக்கூடத்தைப் பற்றி இப்படியெல்லாம் கேள்விப்படும்போது வருத்தமாக இருக்கிறது" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

சீக்கிரமே இந்த விவகாரம் முடிவுக்குவந்து, பள்ளிக்கூடம் மீண்டும் இயங்க ஆரம்பிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள். தேவாலய பூசைகளில் மத வேறுபாடில்லாமல் கலந்துகொள்வது, சமீபத்தில் இந்துக் கோவில் ஒன்று கட்டப்பட்டபோது அதற்கு பல்வேறு மதத்தினரும் உதவி செய்தது என பல உதாரணங்களை இந்த ஊர்க்காரர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

'ஊருக்குள் யாருக்கும் பிரச்சனையில்லை'

"பொதுவாக இம்மாதிரி மதமாற்றப் பிரச்சனை எழும்போது உள்ளூரில் உள்ளவர்கள்தானே எதிர்ப்புத் தெரிவித்து, பிரச்சனையை ஏற்படுத்துவார்கள். அதுபோல இங்கே ஏதும் ஏற்படவில்லை என்பதைக் கவனியுங்கள். இந்த ஊருக்குச் சம்பந்தமில்லாதவர்கள்தான் பிரச்சனையை ஏற்படுத்துகிறார்கள்" என்கிறார் தேசியக் கட்சி ஒன்றைச் சேர்ந்த பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவர்.

இந்த மாணவி மதமாற்றம் குறித்துப் பேசும் வீடியோவை வெளியிட்டவர் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மாவட்டச் செயலாளர் முத்துவேல். மாணவியின் பெற்றோரை சந்திக்க பிபிசி சென்றபோது, அங்கு வந்த ஏபிவிபியினருடன் வந்திருந்த முத்துவேல் எதையும் பேச மறுத்துவிட்டார். "அசோக் ஜியிடம் பேசி, ஒரு நேரத்தைக் குறித்துக்கொள்ளுங்கள். அப்போது பேசலாம்" என்றபடி சென்றுவிட்டார் முத்துவேல்.

படம் எடுத்தவர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டவர்

அவர் குறிப்பிட்ட அசோக் அரியலூர், செட்டி ஏரிக்கரையில் உள்ள ஆதிசக்தி விநாயகர் கோவிலில் பூசகராக இருக்கிறார். ஜனவரி 17ஆம் தேதி மாணவியின் தற்கொலை முயற்சி குறித்து இவர் ஃபேஸ்புக்கில் போட்ட பதிவு முதன்முதலாக, இந்த விவகாரத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ஈடுபாட்டைக் காட்டியது. அந்த வீடியோ எடுக்கப்பட்டது எப்படி?

"இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே ஜீ. அந்தப் பொண்ணோட ரிலேட்டிவ்ஸ் இந்த மாதிரி விஷயம் இருக்குன்னு சொன்னாங்க. முத்துவேல் ஜி போய் வீடியோ எடுத்தார். பிறகு வீடியோ வெளியில் வந்தது" என விநாயகர் கோவிலில் சந்தித்தபோது தெரிவித்தார் அசோக். முத்துவேலுக்காக வெகுநேரம் காத்திருந்தும் அவர் வரவில்லை. தற்போது வீடியோ எடுத்ததாகச் சொல்லப்படும் முத்துவேல், முன்பு பா.ஜ.கவில் இருந்து பிறகு நீக்கப்பட்டவர்.

இந்த விவகாரத்தில் இந்து அமைப்புகளின் தீவிரம் ஆச்சரியம் தரவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே இந்தப் பகுதிகளில் இந்து அமைப்புகள் தீவிரமாக இயங்கிவருகின்றன. அவற்றின் பலம் உண்மையிலேயே எவ்வளவு என்பது துல்லியமாக யாருக்கும் தெரியாது. அசோக்கைக் கேட்டால், மௌனமாகச் சிரிக்கிறார்.

விவகாரம் சி.பி.ஐக்கு மாற்றப்பட்ட பிறகும்கூட, இந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிட இந்து அமைப்புகள் தயாராக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த விவகாரத்தில், மற்ற கட்சிகள் காட்டும் அமைதியும் பலரைத் திகைக்க வைத்திருக்கிறது.

அரியலூர் மாணவியின் விவகாரம் ஒரு தனித்த விவகாரம் என பலரும் கருதுகிறார்கள். ஆனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு பெண்கள் மதம் மாற்ற வந்ததாகக்கூறி வாகனம் பறிக்கப்பட்டு விரட்டப்பட்ட சம்பவமும் மதுரை நகரின் மையப் பகுதியில் ஒரு கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூடத்தில் பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தகராறு செய்தத சம்பவமும் மாநிலம் முழுவதும் சிறுபான்மை கிறிஸ்தவர்களை இந்து அமைப்புகள் குறிவைக்கின்றனவா என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கின்றன.

புதுக்கோட்டை சம்பவத்தில் நடந்தது என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், இருந்திரப்பட்டி அருகே உள்ள திம்மம்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த பிரேமா என்பவரின் வீட்டுக்கு கடந்த ஜனவரி 21 ஆம் தேதி ராணி, தேவசாந்தி என்ற இரு பெண்கள் சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள சமாதானபுரம் என்ற பகுதியில் இயங்கிவரும் ஏ.ஜி. சபை என்ற கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் இருவரும் பிரேமாவைச் சந்திக்க வந்தபோது, ஊரில் மதமாற்றம் செய்ய வந்துள்ளதாகக் கூறி அந்த மாவட்டத்தின் ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளரும் இருந்திரப்பட்டி ஊராட்சியின் முன்னாள் தலைவரின் மகனுமான கணேஷ் பாபு என்பவர் வாக்குவாதம் செய்தார் என்று குற்றம்சாட்டப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் தாங்கள் வந்த வாகனம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு விரட்டிவிட்டதாகக் கூறி இலுப்பூர் காவல்நிலையத்தில் அந்தப் பெண்கள் இருவரும் புகார் அளித்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீன் பெற்றுள்ளார்.

"அவர்களிடம் நான் எந்தப் பிரச்சனையும் செய்யவில்லை. அவர்கள் இரண்டு பேரும் கிறிஸ்த தெய்வத்தை வழிபடுங்கன்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க. இங்கே மதமாற்றமெல்லாம் செய்யாதீர்கள் என்று சொன்னேன். அங்கிருந்து சென்றவர்கள் சிறிது தூரம் சென்று மேலும் சிலரிடம் பேசினார்கள். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. நானே காவல்துறைக்கு போன் செய்து சொன்னேன். காவல்துறையினர் வந்து விசாரித்துவிட்டு, அவர்களை அனுப்பிவைத்தார்கள். பிறகு பார்த்தால், என் மீது புகார் கொடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்தது. என்னை அந்த வழக்கில் கைது செய்தார்கள். ஆனால், அவர்கள் மீது நான் கொடுத்த வழக்கில் எந்த நடவடிக்கையும் இல்லை" என பிபிசியிடம் தெரிவித்தார் கணேஷ் பாபு. அவர் கொடுத்த புகாரின் விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

உங்கள் ஊரில் எவ்வளவு பேர் இவர்களால் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று கேட்டபோது, "எங்கள் ஊரில் யாரும் மாறவில்லை. ஆனால், சுற்றுவட்டார ஊர்களில் அப்படி நடப்பதாக தகவல் வந்தது" என்றார் கணேஷ்.

இது குறித்து ராணி தரப்பைக் கேட்பதற்காக சமாதானபுரம் சென்றபோது, அவர் பேச மறுத்துவிட்டார். இதற்குப் பிறகு திம்மம்பட்டியில் உள்ள பிரேமாவின் வீட்டிற்குச் சென்றபோது அவருடைய தங்கை பிரியங்கா பேசினார்.

"என்னுடைய அக்கா 8 மாத கர்ப்பமாக இருக்கிறார். இந்த நிலையில்தான் அன்று இரவு 7.30 மணியளவில் ராணியும் இன்னொருவரும் அக்காவுக்காக பிரார்த்தனை செய்ய வந்திருப்பதாகக் கூறி வந்தார்கள். அவர்கள் யாரென்று தெரியாத நிலையில், என்னுடைய அம்மா அவர்களை வரவேற்று உட்காரவைத்தார். என் அம்மாவுக்கு காலில் இருந்த பிரச்சனை குறித்து அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தபோது, எதிர் வீட்டில் இருந்த என் அண்ணன் (கணேஷ் பாபு) வந்துவிட்டார். அவர் அவர்களை அங்கிருந்து போகச் சொன்னபோது, அவர்கள் போக முடியாது என்று சொன்னார்கள். அதற்குப் பிறகுதான் பிரச்சனையாகிவிட்டது" என்றார் பிரியங்கா.

செவிலியரான பிரேமா, ஒரு கிறிஸ்தவ கல்வி நிறுவனத்தில் பயின்றவர் என்பதால் ஏற்பட்ட பழக்கத்தில் இவர்களை வரச் சொல்லியிருக்கலாம் என்கிறார் பிரியங்கா.

இது குறித்து மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அருள்மொழி அரசுவிடம் கேட்டபோது, "கடந்த 21 ஆம் தேதியன்று இரண்டு கிறிஸ்துவ பெண்கள், பிரேமா அழைத்ததன் பேரில் திம்மம்பட்டிக்குச் சென்றுள்ளனர். ஆனால், மதமாற்றம் செய்ய வந்ததாகக் கூறி அவர்களின் இரு சக்கர வாகனத்தையும் செல்போனையும் பறித்துக் கொண்டு கணேஷ் பாபு விரட்டியிருக்கிறார். முதலில், வண்டியைத் திரும்பத் தந்துவிடுவதாகச் சொன்னவர், பிறகு வண்டியைப் பற்றித் தனக்குத் தெரியாது என்று கூற ஆரம்பித்தார். இதையடுத்துத்தான் அந்தப் பெண்கள் கொடுத்த புகாரில் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

கணேஷ் பாபு கொடுத்துள்ள புகாரில், தங்கள் வீட்டிற்குள் புகுந்து கட்டாயமாக மதமாற்றம் செய்யச் சொல்லி மிரட்டியதாகவும் இல்லாவிட்டால் தீ வைத்துக் கொளுத்திவிடுவதாகவும் அந்தப் பெண்கள் கூறியதாகக் கூறப்பட்டுள்ளது. "வேறொரு ஊருக்குப் போய், செல்வாக்குமிகுந்த ஒருவரின் வீட்டிற்குள் இரண்டு பெண்கள் சென்று இதுபோல மிரட்ட முடியுமா" எனக் கேள்வியெழுப்புகிறது காவல்துறை வட்டாரம்.

இப்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு உள்பட நான்கு பிரிவுகளில் கணேஷ்பாபு மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.

கணேஷ் பாபு கைதுசெய்யப்பட்டதும் இதனை பா.ஜ.க. மிகப் பெரிய பிரச்சனையாக மாற்றியது. புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.கவினர் இலுப்பூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

மதுரை சம்பவத்தில் நடந்தது என்ன?

புதுக்கோட்டை சம்பவத்தின் சூடு ஆறுவதற்குள்ளாகவே மதுரை தெற்குவாசல் பகுதியில் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் பா.ஜ.கவினர் நுழைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரையின் நெரிசல் மிகுந்த தெற்குப் பெருமாள் மேஸ்திரி வீதியில் "இங்கே நல்வாசனை ஏஜி சர்ச் எங்கே இருக்கிறது?" என்று கேட்டால் விழிக்கிறார்கள். "சர்ச் ஏதும் இங்கே இல்லையே" என்கிறார்கள் அந்தப் பகுதிவாசிகள்.

பிறகு ஒருவழியாக அந்த முகவரியை கண்டடைந்து பார்த்தால், ஒரு மாடி வீடு. "மேல் மாடியில்தான் கொஞ்ச பேர் வந்து ஏசுவைக் கும்பிடுவார்கள். தகராறு நடந்ததற்குப் பிறகு யாரும் வருவதில்லை" என்கிறார் பக்கத்து வீட்டுப் பெண்மணி.

என்ன நடந்தது என அந்தப் சர்ச்சின் பாதிரியாரான டி பிரவீண் ராஜ்குமாரிடம் கேட்டபோது, அவர் பேச மறுத்துவிட்டார்.

காவல்துறையிடம் கோட்டபோது, "அந்த மாடி வீட்டில் சிலர் கூடி பிரார்த்தனை நடத்துவது வழக்கம். சம்பவம் நடந்த தினத்தன்று சிலர் அங்கே சென்று, மதமாற்றம் செய்வதாகக் கூறி தகராறு செய்திருக்கிறார்கள். கெட்ட வார்த்தைகளில் பேசி, நாற்காலிகளை வீசி எறிந்திருக்கிறார்கள். ஒரு தனியார் இடத்தில் இப்படி அத்து மீறி உள்ளே நுழைவது தவறு. இதில் ஈடுபட்ட ஆறு பேரைக் கைதுசெய்திருக்கிறோம்," என்று தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவின் ஓ.பி.சி. பிரிவின் மாநிலச் செயலர் ராஜாகண்ணன், இந்து முன்னணியின் மாவட்டச் செயலர் அரச பாண்டி, பா.ஜ.கவின் மண்டலப் பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், அதே கட்சியைச் சேர்ந்த மேலும் மூவர் என ஆறு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் சுமார் 200 பேர் வில்லாபுரம் தேவாலயம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டதால் கைதுசெய்யப்பட்டனர்.

மேலே சொன்ன சம்பவங்கள் தவிர, கோயம்புத்தூர் ராமநாதபுரத்தில் உள்ள டிரினிட்டி கதீட்ரல் தேவாலயத்தை ஜனவரி 24ஆம் தேதி காலை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக தற்போது சிலர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவங்களில் கோவை ட்ரினிட்டி கதீட்ரல் மீதான தாக்குதல் சம்பவம் மட்டுமே, அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்துக்கு பதிலடியாக நடத்தப்பட்டதாக தாக்குதல் நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை சம்பவமும் மதுரை நிகழ்வும் தனித்தனியாக ஒருங்கிணைக்கப்படாத வகையிலேயே நடந்திருக்கின்றன.

ஆனால், தமிழ்நாட்டில் ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் தொடர்ச்சியாக, அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்வுகள், மாநிலத்தில் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மத்தியில் அச்சத்தை விதைத்திருக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
BCC ground report on ariyalur student death and attack on chruches
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X