டெல்லி: நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி பினாமி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
பினாமி சொத்துக்கள் தடுப்பு சட்டம் 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் சொத்துகளை பதுக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு, நாடு முழுவதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

பினாமிகளின் பெயரில் சொத்துக்களை வைத்து அனுபவிப்போருக்கு, பினாமியாக செயல்பட்டவர் என தொடர்புடைய அனைவருக்கும் 7 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்க வழி வகுத்தது. இந்நிலையில் இந்த சட்டத்தின்படி 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
வருமான வரித்துறை சார்பில் இச்சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 24 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஓராண்டில் அசையாச் செத்துக்கள், நகைகள் , கார்கள், வங்கி நிதி என 900 சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேடுதல் வேட்டை தொடரும் என்றும், பறிமுதல் செய்யப்பட்ட பல சொத்துகள் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களுடையது தான் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!