For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூன்றாவது வழக்கிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன்

By BBC News தமிழ்
|
ஜெயகுமார்
BBC
ஜெயகுமார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது தொடரப்பட்ட மூன்றாவது வழக்கிலும் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதனால், விரைவில் அவர் சிறையிலிருந்து வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோது, கள்ள ஓட்டுப் போட முயன்றதாகக் கூறப்படும் ஒருவரை சட்டையைக் கழற்றி தெருவில் ஊர்வலம் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுசெய்யப்பட்டார்.

அதற்குப் பிறகு அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் ஜெயக்குமார் கைதுசெய்யப்பட்டார். அதற்குப் பிறகு நில அபகரிப்பு வழக்கு ஒன்றிலும் அவர் கைதுசெய்யப்பட்டார்.

ஏற்கனவே, முதல் இரண்டு வழக்குகள் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், மூன்றாவது வழக்கிலும் ஜாமீன் கோரி அவர் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஏடி ஜெகதீஷ் சந்திரா முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் தனக்கு தொடர்பில்லை என்றும் முன்னாள் அமைச்சர் என்பதால் தன் மீது வழக்குத் தொடரப்பட்டிருப்பதாக ஜெயக்குமார் தரப்பில் வாதிடப்பட்டது. ஜெயக்குமாருக்கு ஜாமீன் தரக்கூடாது என புகார்தாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அவர் திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் கையெழுத்திட வேண்டுமென்றும் 15 நாட்கள் அங்கே தங்கியிருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு சென்னையில் உள்ள மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் ஆஜராக வேண்டுமென்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜெயக்குமார் மீதான வழக்குகள்

தமிழ்நாட்டில் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெற்றது இதில், சென்னை ராயபுரம் 49வது வார்டில் தி.மு.க.,வினர் சிலர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து முறைகேடாக ஓட்டு போட்டதாக அங்கிருந்த அதிமுகவினர் குற்றம்சாட்டினர். இந்த நிலையில், சட்ட விரோதமாக கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்ற நபரை அதிமுகவினர் சிறைப்பிடித்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையிலேயே சிலர் பிடிபட்ட நபரை தாக்கத் தொடங்கினர். அப்போது, பிடிபட்ட அந்த நபரை அடிக்க வேண்டாம் என்றும் அவரது கையை கட்டுங்கள் என்றும் கூறிய ஜெயக்குமார், பின்னர் அந்த நபரிடம் சட்டையை கழற்றுமாறு கடுமையாக பேசும் காட்சி இடம்பெற்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.

இதையடுத்து, அந்த நபரின் சட்டை கழற்றப்பட்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில், அவரை அரை நிர்வாணமாக ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமது ஆதரவாளர்களுடன் ஜெயக்குமார் வண்ணாரப்பேட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டார். இந்த காட்சிகள் அனைத்தும் பகுதி, பகுதியாக ஊடகங்களில் வெளியாயின. அதே சமயம், ஜெயக்குமார் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு ஒருவரை அரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற செயல் சமூகவலைதளங்களில் விவாதமானது.

ராயபுரம் 49ஆவது வார்டில் பிடிபட்ட நபரை அரை நிர்வாணமாக்கி அதிமுக தொண்டர்களுடன் ஊர்வலமாக அழைத்து வரும் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார்
BBC
ராயபுரம் 49ஆவது வார்டில் பிடிபட்ட நபரை அரை நிர்வாணமாக்கி அதிமுக தொண்டர்களுடன் ஊர்வலமாக அழைத்து வரும் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார்

இந்த நிலையில், ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது பயங்கர ஆயுதங்களுடன் வன்முறையை தூண்டுதல், கலகம் விளைவித்தல், ஆபாசமாக பேசுதல் உள்பட 10 பிரிவுகளில் தண்டையார்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து பிப்ரவரி 21ஆம் தேதி இரவு ஜெயக்குமார் வசித்து வரும் பட்டினப்பாக்கம் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் அங்கு அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். நீதிமன்றத்தில் அவருக்கு மார்ச் 7ஆம் தேதிவரை காவல் விதிக்கப்பட்டது.

இரண்டாவது வழக்கு: நகர்ப்புர உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோது தி.மு.கவினர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி ராயபுரம் பகுதியில் அ.தி.மு.க தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் ஜெயக்குமார் மறியலில் ஈடுபட்டார்.

சென்னையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டது, தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நோய் பரவ காரணமாக இருந்தது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் ராயபுரம் காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 95 ஆண்கள், 18 பெண்கள் என மொத்தம் 113 பேர் மீது வழக்குப் பதிவுசெய்தனர். இந்த வழக்கிலும் அவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

மூன்றாவது வழக்கு: சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவர் சென்னை நகர காவல்துறை ஆணையரை சந்தித்துப் புகார் அளித்தார். அந்தப் புகாரில் தன்னுடைய சகோதரர் நவீன் ஜெயக்குமாரின் மருமகன் என்றும் தானும் நவீனும் ஒன்றாக இணைந்து தொழிற்சாலை ஒன்றை நடத்திவரும் நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு அந்தத் தொழிற்சாலையை ஜெயக்குமார் வலுக்கட்டாயமாக பறித்துக்கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் தனக்கு அவர் கொலைமிரட்டல் விடுத்துவருவதாகவும் கூறினார்.

இந்த வழக்கில் ஜெயக்குமார், அவருடைய மகள் ஜெயப்ரியா, மருமகன் நவீன் ஆகிய மூன்று பேர் மீது கொலை மிரட்டல், அத்துமீறி நுழைதல், குற்றம்செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

இந்த வழக்கிலும் ஜெயக்குமார் கைதுசெய்யப்பட்டிருப்பதாக பிப்ரவரி 25ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
former admk minister jayakumar got condition bail on his 3rd case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X