For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5 பாதுகாப்பான நகரங்கள்: இங்கு சென்றால் உங்களுக்கு வைரஸ் பாதிப்பு குறைவு

By BBC News தமிழ்
|

உலகெங்கிலும் உள்ள நகரங்கள் கோவிட் -19 தொற்றுநோயை கருத்தில் கொண்டு பாதுகாப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது. அதை சிறப்பாகச் செய்கின்ற நகரங்கள் இதோ.

கோவிட் போல நகர வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போட்ட எதையும் சமீபகாலங்களில் யாருமே கண்டதில்லை. நகரங்களின் அலுவலகங்கள் மூடப்பட்டது மற்றும் கட்டாய முககவசம் அணிவதில் இருந்து, உணவகக் கட்டுப்பாடுகள் வரை, தொற்றுநோய் முன்னெச்சரிக்கைகள் உலகெங்கிலும் உள்ள நகரங்களின் வாழக்கை முறையையே மாற்றி விட்டன.

இது நீண்ட காலத்திற்கு தொடரும் ஒன்றாக இருக்கக்கூடும். உண்மையில், இந்தப்பெருந்தொற்று, ஒரு "நகரமயமாக்கப்பட்ட" இனமாக, நம்மை மிகப்பெரிய அளவில் பாதித்த முதலாவது நிகழ்வாகும்.

1900களின் முற்பகுதியில் ஸ்பானிஷ் காய்ச்சல் ஏற்பட்டபோது, 14% மனிதர்கள் மட்டுமே நகரங்களில் வாழ்ந்தனர். ஆனால் இன்று அந்த எண்ணிக்கை 57% ஆக உயர்ந்துள்ளது என்று ஐநா மக்கள்தொகை பிரிவின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இதன் விளைவாக நகரங்கள் தங்கள் மக்கள்தொகையை சிறப்பாகப் பாதுகாக்க, சுகாதாரம் மற்றும் ஒட்டுமொத்த பாதுகாப்பில் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டியிருக்கிறது. எந்த மாற்றங்கள் உயர் பாதுகாப்புக்கு வழிவகுத்தன என்பதை தெளிவுபடுத்துவதற்காக, எக்கானமிஸ்ட் இதழின் நிபுணர்கள் பிரிவு, 2021ஆம் ஆண்டின் பாதுகாப்பான நகரங்களின் குறியீட்டை சமீபத்தில் வெளியிட்டது.

இது உள்கட்டமைப்பு, டிஜிட்டல் வாழ்க்கை, தனிப்பட்ட பாதுகாப்பு, சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் முக்கியமாக ஆரோக்கியம் ஆகியவற்றுடன் 76 பாதுகாப்பு குறிகாட்டிகளின் அடிப்படையில் 60 நகரங்களை வரிசைப்படுத்துகிறது. தொற்றுநோய் தயார்நிலை மற்றும் கோவிட் -19 இறப்பும், இந்த ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

பட்டியலின் முன்னணியில் உள்ள நகரங்களில் கோபன்ஹேகன், டொராண்டோ, சிங்கப்பூர், சிட்னி மற்றும் டோக்கியோ ஆகியவை அடங்கும். சமூக ஒருங்கிணைப்பு, மொத்த மக்கள் தொகை உள்ளடக்கம் மற்றும் சமூக நம்பிக்கை ஆகியவற்றின் வலுவான உணர்வுடன், ஒட்டுமொத்த பாதுகாப்பு எவ்வாறு தொடர்புபடுகிறது என்பதை இந்த நகரங்களில் பார்க்கமுடிகிறது.

தொற்றுநோய் கொண்டுவந்த மாற்றங்கள் நகரங்களை எவ்வாறு பாதுகாப்பானதாகவும், உள்ளடக்கியதாகவும் மற்றும் தாங்கும் சக்தி கொண்டதாகவும் ஆக்கியிருக்கின்றன என்பதையும் சுற்றுலா பயணிகள் இந்த நகரங்களுக்கு செல்லமுடியும்போது பாதுகாப்பாக இருக்க இன்னும் எதை தெரிந்துகொள்ளவேண்டும் என்பதையும் அறிய, நாங்கள் இந்த நகரங்களில் வசிப்பவர்களிடம் பேசினோம்.

கோபன்ஹேகன்

குறியீட்டில் முதல் இடம் பிடித்துள்ளது டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகன்.

குறியீட்டின் புதிய சுற்றுச்சூழல் காரணிகள்தான் இதற்கு முக்கிய காரணம். நீடித்ததன்மை, (புதுப்பிக்கவல்ல எரியாற்றல் ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது) காற்றின் தரம், கழிவு மேலாண்மை மற்றும் நகர்ப்புற வனப்பகுதி ஆகியன இதில் அளவிடப்பட்டன.

நகரமும் அதன் குடியிருப்பாளர்களும் தொற்றுநோய் கட்டுப்பாடுகளை சமாளிக்க முடிந்ததில், நகர்புற வனப்பகுதி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் 2021 செப்டம்பர் மாதம் முழுமையாக நீக்கப்பட்டுவிட்டன.

"பூங்காக்கள்,பசுமையான பகுதிகள் மற்றும் நீர்வழிகள், தொற்றுநோய் காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்தன. கோபன்ஹேகன் மக்கள், கையில் உணவை வாங்கிக்கொண்டு நகரத்தின் இயற்கையான காற்று நிலவும் இத்தகைய இடங்களில் சுகமாக நடந்து அந்த இடங்களை அனுபவித்தனர்," என்று அந்த நகரில் வாழ்பவரும், லாப நோக்கமற்ற 'கோபன்ஹேகன் கெப்பாசிட்டி' அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எஸ்ப்ஜார்ன் ஓவர்கார்ட் கூறினார்.

மக்களுக்கு உதவுவதற்காக நகரம் "கொரோனா வழிகாட்டிகளை" தொடர்ந்து வழங்குகிறது. அத்துடன் வெளியே இருக்கும் மக்கள் குழுக்களுக்கு இடையில் இடைவெளியை பராமரிக்க, விரிவான மற்றும் தெளிவான குறிகாட்டிகளும் அளிக்கப்படுகின்றன.

நாட்டின் சமூக உணர்வு, டேனிஷ் வார்த்தையான samfundssind என்பதில் சிறப்பாக வர்ணிக்கப்படுகிறது. மேலும் பாதுகாப்பான வாழ்க்கை சூழலை உருவாக்க அரசு அதிகாரிகள் உட்பட நாட்டின் குடிமக்கள் அனைவரும் ஒன்றாக வேலை செய்யவும், பரஸ்பர நம்பிக்கைக்கும் இது வழிவகுக்கிறது.

Here are the list of 5 protective cities

பாதுகாப்பான நகரங்கள் குறியீடு, ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பான நகரங்களுக்கு இடையே உள்ள அதிக தொடர்பைக் கண்டறிந்துள்ளது. எனவே உலகின் குறைவான ஊழல் நிலவும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் டென்மார்க்கில் அதன் குடிமக்கள், தொற்றுநோய் காலகட்டம் முழுவதும் தனது அமைப்புகள் மீதும் ஒருவருக்கொருவர் மீதும் நம்பிக்கை கொண்டிருந்ததில் ஆச்சரியமில்லை.

கோபன்ஹேகன் ஒரு மாபெரும் கோவிட் சோதனைத் திட்டத்தையும் செயல்படுத்தியது. இது சுற்றுலா பயணிகள் உட்பட அனைவருக்கும் இலவசமாக உள்ளது. சேகரிக்கப்பட்ட தரவு, தொற்றுநோயின் விரிவான கண்காணிப்பை அனுமதிக்கிறது. கூடுதலாக இந்த நகரம், தொற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய கழிவு நீர் பரிசோதனையை செயல்படுத்த உள்ளது.

டொரன்டோ

கனடாவின் மிகப்பெரிய நகரமான டொரன்டோ, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக புள்ளிகளுடன் ஒட்டுமொத்த பாதுகாப்புக் குறியீட்டில் நெருக்கமான இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. குறிப்பாக தடுப்பூசி விழிப்புணர்வு மற்றும் அதை பின்பற்றுவது என்று வரும்போது, அனைத்து சமூகங்களையும் இலக்கு வைத்து செய்யப்படும் தகவல்தொடர்புகளை மதிக்கும் உள்ளடக்கிய கலாச்சாரத்தை குடியிருப்பாளர்கள் பாராட்டுகிறார்கள்.

நகரத்தை பாதுகாப்பானதாக ஆக்கிட உதவும் வகையில் சமூகம் சார்ந்த பல தடுப்பூசி திட்டங்களை நகரம் தொடங்கியதை, டொரன்டோவில் வசிக்கும் ஃபரீதா தலாத் சுட்டிக்காட்டுகிறார்.

உதாரணமாக, வீட்டை விட்டு வெளியேற முடியாத குடியிருப்பாளர்களுக்கு முதல் டோஸை முடிக்க 'ஹோம்பவுண்ட் ஸ்பிரிண்ட் தடுப்பூசி திட்டம்'வெற்றிகரமாக உதவியது. தடுப்பூசி அனைவருக்கும் சமமாக கிடைப்பதை உறுதிசெய்ய, தடுப்பூசி முயற்சியின் ஆரம்பத்திலேயே கருப்பின விஞ்ஞானிகள் பணிக்குழு, நிறுவப்பட்டது.

நகரத்தின் பல்லின கலாச்சாரத்தின் நீண்ட வரலாறு காரணமாக உள்ளூர் மக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். "டொரன்டோவில் வசிப்பவர்கள் கனடாவுக்கு வெளியே பிறந்திருப்பது என்பது மிகவும் இயல்பானது. வெவ்வேறு இன மற்றும் கலாச்சார குழுக்கள் உண்மையில் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதையும், தனிப்பட்டு வாழாததையும் நான் கண்டேன்" என்று 1998 இல் இருந்து இந்த நகரத்தில் வசிக்கும் பிலிப் வெர்னாசா கூறினார்.

"பொதுவாக ஒரு மக்கள் குழுவில், வெவ்வேறு இனங்கள், பாலியல் திசைஅமைவுகள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கலாம். டொரண்டோ மிகவும் திறந்த மனதுடன் இருக்கும் நகரமாகும். அங்கு நீங்கள் யாராக இருந்தாலும் பாதுகாப்பாக இருப்பதை உணர முடியும்."

சிங்கப்பூர்

டிஜிட்டல் பாதுகாப்பு, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு ஆகியவற்றில் இரண்டாவது இடத்தைப் பிடித்த சிங்கப்பூர், தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில் வேகமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்த பலங்களைப் பயன்படுத்தியது, டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் தொடர்புத் தடமறிதலை விரைவாக உருவாக்கியது.

இந்த நாடு உலகின் மிக அதிக தடுப்பூசி விகிதம் கொண்ட நாடாகும் (தற்போது 80%). ஆனால் புதிய திரிபுகளின் அச்சம் காரணமாக கடுமையான கண்காணிப்பு மற்றும் தொடர்பு தடமறிதல் இப்போதும் தேவைப்படுகிறது.

"நகரத்தின் குடியிருப்புவாசிகள், கட்டடங்கள் அல்லது வளாகங்களுக்குள் நுழைவதற்கு முன், SafeEntry செக்-இன் களுக்கு தங்கள் ட்ரேஸ் டூகெதர் டோக்கன் அல்லது ஃபோன் செயலியை ஸ்கேன் செய்ய வேண்டும்," என்று ஒரு பயண வலைப்பதிவை நடத்தும் சிங்கப்பூர் குடியிருப்பாளர் சாம் லீ கூறினார்.

"பாதிக்கப்பட்டவர்களுடன் இடைகலந்த அல்லது தொடர்பு கொண்ட நபர்களை அதிகாரிகள் விரைவாகக் கண்காணிக்க இது அனுமதிக்கிறது. இதனால் வைரஸ் பரவும் சங்கிலியை கட்டுப்படுத்த அல்லது உடைக்க, தனிமைப்படுத்தல் உத்தரவை செயல்படுத்தமுடியும்."

பயணிகள் நாட்டிற்குள் வருவதற்கு முன்பு TraceTogether டோக்கனை நிறுவ வேண்டும் அல்லது அது நிறுவப்பட்ட ஒரு கைபேசியை வாடகைக்கு எடுக்க வேண்டும்.

பெரும்பாலான பணியிடங்களில் வீட்டிலிருந்து பணிபுரிவது கடைப்பிடிக்கப்படுவதால், பொதுப் போக்குவரத்தில் கூட்ட நெரிசல் குறைந்திருப்பதாக லீ கூறுகிறார். சுற்றுலா இடங்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள், வரையறுக்கப்பட்ட நுழைவாயில்களை கொண்டுள்ளன. மேலும், பொது சுகாதார உத்தரவுகளுக்கு மக்கள் இணங்குவதை உறுதி செய்யும் பொருட்டு, "பாதுகாப்பான இடைவெளி தூதர்கள்" கூட்டங்களைக் கண்காணிக்கிறார்கள். இதை கடைப்பிடிக்காத தனிநபர்கள் கடுமையான அபராதங்களை எதிர்கொள்கின்றனர். புதிதாக தொடங்கப்பட்ட ஸ்பேஸ் அவுட் மென்பொருள் கருவி மூலம் பொதுமக்கள், மால்கள், தபால் நிலையங்கள் மற்றும் மளிகைக் கடைகளில் கூட்டத்தைக் கண்டறிய முடியும்.

சிட்னி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னி, குறியீட்டில் ஒட்டுமொத்தமாக ஐந்தாவது இடத்தையும், சுகாதாரப் பாதுகாப்பில் முதல் பத்திலும் இடம்பிடித்துள்ளது.

பெருந்தொற்றின்போது அதன் எல்லைகளை முழுவதுமாக மூடிய நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும். அதிகரித்த தொற்று எண்ணிக்கையை கட்டுப்படுத்த அமல்செய்யப்பட்ட கடுமையான பொதுமுடக்கம் நேர்மறையான விளைவை ஏற்படுத்தியது.

ஆஸ்திரேலியாவில் தனிநபர் கோவிட் இறப்பு விகிதம் உலகின் மிகக் குறைந்த ஒன்றாக உள்ளது. நியூ சவுத் வேல்ஸில் தடுப்பூசிகள் விகிதம் 70% ஐ எட்டியுள்ள நிலையில் பல கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சர்வதேச எல்லைகள் நவம்பரில் திறக்கப்படக்கூடும்.

தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கப்பட்ட உணர்வுடன் கூடவே குடியிருப்பாளர்கள், சிட்னியின் தெருக்களில் தனிப்பட்ட பாதுகாப்பு உணர்வையும் அனுபவிக்கின்றனர். "நான் சிட்னியில் உணர்வதைப்போல வேறு எந்த ஒரு நாட்டிலும் பாதுகாப்பாக உணர்ந்ததில்லை," என்று பாஸ்போர்ட் டவுன் அண்டர் என்ற ஆஸ்திரேலிய பயண வலைத்தளத்தின் நிறுவனர் ஷோலே ஸ்கோர்ஜி கூறினார். அவர் 2018 ல் சிட்னிக்கு குடிபெயர்ந்தார்.

" நான் தனியாக சிட்னியை சுற்றிவந்தேன். நான் ஆபத்திலும் இருப்பதாக எப்போதும் உணர்ந்ததில்லை."

நகரத்தின் தனியுரிமைக் கொள்கை, இணையப் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல்கள், ஒட்டுமொத்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய டிஜிட்டல் பாதுகாப்பில் இந்த நகரம் முதலிடத்தில் உள்ளது. சிட்னி இந்த முயற்சியை அதன் ஸ்மார்ட் சிட்டி செயல்திட்ட கட்டமைப்போடு வழிநடத்தியது.

மிகவும் இணைக்கப்பட்ட, பாதுகாப்பான நகரங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட சில கண்டுபிடிப்புகளை இது கோடிட்டுக் காட்டுகிறது. உதாரணமாக, ஒட்டுமொத்த பயன்பாடு, போக்குவரத்து ஓட்டங்கள் மற்றும் பாதசாரிகளின் செயல்பாடு பற்றிய தகவல்களைச் சேகரிக்க, கழிவுத் தொட்டிகள், தெருவிளக்குகள் மற்றும் பெஞ்சுகளில் ஸ்மார்ட் சென்சார்களை எவ்வாறு நிறுவலாம் என்பதை இந்தத் திட்டம் கோடிட்டுக் காட்டுகிறது.

இதேபோல், ஸ்மார்ட் லைட்டிங் மற்றும் சிசிடிவி நெட்வொர்க்குகள், இருளுக்குப் பிறகான பாதுகாப்பு மற்றும் இரவு நேர பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்.

இந்த யோசனைகளில் சில தெற்கு சிட்னியில் ChillOUT ஹப் வடிவில் ஏற்கனவே அமல்செய்யப்பட்டுள்ளன: இந்த திறந்தவெளி இடங்களில் குடியிருப்பாளர்கள் ஸ்மார்ட் விளக்குகளின் கீழ் சந்திக்கலாம், வைஃபை உடன் இணையலாம் மற்றும் மின்னணு சாதனங்களை பயன்படுத்தலாம். இந்த பயன்பாடுகளின் தரவு, நகர தலைவர்களுக்கு அனுப்பப்படுகிறது.

தங்கள் குடிமக்கள் நகரத்தின் உள்கட்டமைப்புடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதை இதன் மூலம் அவர்கள் நன்கு புரிந்துகொண்டு அதை மாற்றியமைக்க முடியும்.

டோக்யோ

ஜப்பானின் தலைநகரான டோக்யோ, ஒட்டுமொத்த பாதுகாப்புக்குறியீட்டில் ஐந்தாவது இடத்திலும், சுகாதாரப் பாதுகாப்பு குறியீட்டின் உச்சத்திலும் உள்ளது.

பொதுசுகாதார வசதி, தொற்றுநோய் தயார்நிலை, ஆயுட்காலம், மன ஆரோக்கியம் மற்றும் கோவிட் -19 இறப்பு போன்ற காரணிகளை சுகாதாரப் பாதுகாப்பு குறியீடு அளவிடுகிறது. ஒலிம்பிக்கின் போது தொற்று எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், கிட்டத்தட்ட 60% மக்களை தடுப்பூசிகள் எட்டியதால், விகிதங்கள் வியத்தகு முறையில் குறைந்துவிட்டன.

இந்த நேர்மறையான செய்தியை அடுத்து நாடு முழுவதும் அமலில் இருந்த நெருக்கடி நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும், 2021 செப்டம்பர் இறுதிக்குள் படிப்படியாக கட்டுப்பாடுகளை நீக்குவதாகவும் ஜப்பான் அறிவித்தது.

மருத்துவமனைகளில் அனுமதி மற்றும் பெரிய நிகழ்வுகளில் நுழைவு ஆகியவற்றுக்கு, தடுப்பூசி பாஸ்போர்ட் பயன்படுத்துவதை ஊக்குவிக்க அந்நாடு திட்டமிட்டுள்ளது. கூடவே இந்த பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு தள்ளுபடி அல்லது கூப்பன்களை வழங்க வர்த்தக நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.

உள்கட்டமைப்பு பாதுகாப்புக்காக டோக்கியோ முதல் ஐந்து வரிசையில் இடம் பிடித்தது. போக்குவரத்து பாதுகாப்பு, பாதசாரிகளுக்கான வசதிகள் மற்றும் போக்குவரத்து நெட்வொர்க்குகள் உள்ளிட்டவை இதில் அடங்கும். ரயில் மூலம் முழுவதுமாக இணைக்கப்பட்ட நகரமான டோக்யோ, நடந்து செல்வதையும், சமூக ஈடுபாட்டையும் ஊக்குவிப்பதற்காக கட்டப்பட்டது. அக்கம் பக்க குற்றத் தடுப்பு மற்றும் கண்காணிப்பு, குற்றத்தடுப்பில் பகிரப்பட்ட பொறுப்புணர்வு வடிவத்தில் வலுவான குடிமக்கள் பங்கேற்புக்கு இது வழிவகுத்துள்ளது.

"ரயில் நிலையங்களில் அதிக எண்ணிக்கையிலான 'காணாமல் போன மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களுக்கான' மையங்களில் இருந்து, கிட்டத்தட்ட தேவையற்ற பைக் பூட்டுகள் வரை, மற்றவர்களின் நல்வாழ்வு மீது மிகுந்த மரியாதை உள்ளது," என்று டோக்யோவில் வசிப்பவரும், தி குளோபல் யூத் ரிவியூ இதழின் நிறுவகருமான சேனா சாங் கூறுகிறார்.

நகரின் மையத்தில் தனது ஷாப்பிங் பையை இழந்த ஒரு நேரத்தை அவர் நினைவு கூர்ந்தார். தான் விட்டுச்சென்ற அதே இடத்தில், அன்பான சிறு குறிப்புடன் அது இருந்தது என்று அவர் கூறினார்.

"பல நூற்றாண்டுகளாக நீடிக்கும் கூட்டுவாத கலாசாரம் மற்றும் ஒருவருக்கொருவர் காட்டும் அதீத மரியாதை, நான் வாழ்ந்த இடங்கள் அனைத்தையும் விட பாதுகாப்பான இடமாக டோக்கியோவை ஆக்கியுள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
Here are the list of 5 safe cities which u wont affect with corona.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X