For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூபாய் நோட்டு ஒழிப்பில் மக்கள் செய்த தியாகம் வீண் போகாது - மோடி நெகிழ்ச்சி

ரூ. 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் பெரும் சங்கடத்தில் உள்ளனர். ஆனால் மக்களின் இந்தத் தியாகம் வீண் போகாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

ஆக்ரா: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற உத்தரவால் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இது நாட்டையும், இளைஞர்களையும் காக்கும் திட்டமாகும். மக்கள் தற்போது செய்து வரும் தியாகம் வீண் போகாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நவம்பர் 8ம் தேதி திடீரென இந்த ரூபாய் நோட்டு ஒழிப்பு குறித்து அறிவித்தார் மோடி. இது நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அன்று முதல் இன்று வரை மக்கள் போதிய ரூபாய் நோட்டுக்கள் கிடைக்காமல் தெருத் தெருவாக அலைந்து வருகிறார்கள். அரசின் திட்டம் நல்ல திட்டம், உயரிய திட்டம் என்றாலும் கூட மக்களின் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட கையில் பணம் இல்லாத நிலைக்கு இது இட்டுச் சென்று விட்டது. இதனால் மக்கள் மிகப் பெரும் தவிப்புக்குள்ளாகி விட்டனர்.

அதை விடக் கொடுமையாக பணம் பெற வரிசையில் காத்திருந்து, வங்கிகளின் முன்பும், ஏடிஎம் மையங்கள் முன்பும் காத்துக் கிடந்து இதுவரை 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்து போயுள்ளனர். இந்த நிலையில் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு குறித்து அவர் இன்று பேசியுள்ளார்.

இன்று ஆக்ராவில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதிலிருந்து:

இந்த நாட்டு மக்களை கருப்புப் பணத்தின் பிடியிலிருந்தும், ஊழல் பிடியிலிருந்தும், கள்ளப் பணத்திலிருந்தும் விடுவிக்க பாடுபடுகிறேன். இதற்காக மக்கள் தந்து வரும் ஒத்துழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன்.

எனது நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவு தந்து வருகிறார்கள். இதற்காக வணங்குகிறேன். கடும் சிரமத்திற்கு மத்தியிலும் அவர்கள் எனக்கு ஆதரவாக இருப்பது என்னை ஆச்சரியப்படுத்துகிறது.

தலித்துகள், ஆதிவாசிகள், விவசாயிகள், தாய்மார்கள், எல்லோருமே சிரமப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் கஷ்டம் வீணாகாது என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

இந்தத் திட்டத்தை நான் அவ்வப்போது மறு ஆய்வு செய்வேன். அதில் தேவையான மாற்றங்களைச் செய்வேன் என்று அன்றே நான் கூறியுள்ளேன். அதை நான் மறக்கவில்லை.

நாட்டின் நேர்மையான மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். மக்கள் பட்ட துன்பம் வீண் போகாது. இந்தத் திட்டத்திற்காக வங்கி ஊழியர்கள் சீரிய முறையிலும், கடுமையாகவும் பபணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஊழல் செய்தவர்கள் இப்போது ஒழுங்கான பாதைக்குத் திரும்பி வருகின்றனர். மக்கள் சங்கடத்தில் இருந்தாலும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

அரசின் இந்த அறிவிப்பானது கருப்புப் பணத்தைப் பதுக்கியவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையாகும். ஏழைகளின் பணத்தை ஊழல்வாதிகள் கொள்ளையடித்து வந்தனர். அதை நாங்கள் தடுத்த நிறுத்தப் பாடுபடுகிறோம்.

இந்தத் திட்டம் வந்தது முதல் இதுவரை வங்கிகளில் 5 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் வந்துள்ளன. ஏழைகளிடமும், நடுத்தர வர்க்கத்தினரிடமும் கருப்புப் பணம் இல்லை. ஆனால் அவர்கள் வீடு கட்ட வேண்டுமானால் வீடு கட்டித் தருவோரிடம் அவர்கள் பெரும் பணத்தைத் தர வேண்டியுள்ளது. எனவே வெள்ளைப் பணத்தை அவர்கள் கருப்பாக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.

ரூபாய் நோட்டு ஒழிப்பால் சிலர் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். அதனால்தான் அவர்கள் எனக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள். அவர்கள்தான் சிட் பண்ட் மோசடிகளைச் செய்தவர்கள். இன்று எனக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். இவர்களைக் காப்பது எனது வேலை அல்ல. ஆனால் ஏழைகளைக் காப்பதுதான் எனது வேலை.

இன்று சில கருப்புப் பண முதலைகள் தங்களிடம் உள்ள பணத்தை ஏழைகளிடம் கொடுத்து உங்களது ஜன் தன் கணக்கில் 2.5 லட்சத்தைப் போடுங்கள். அதில் 2 லட்சத்தை திருப்பிக் கொடுங்கள். மீதமுள்ள 50,000ஐ நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி வருகின்றனர். மக்களே அவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள். உங்களுக்குத்தான் பிரச்சினை வரும் என்று பேசினார் மோடி.

English summary
PM Modi has said that he will review the Demonetisation system and make changes as required. He announced this at the Agra public meeting this evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X