ஹிந்து இளைஞர்களை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகிறது இந்தியன் முஜாஹிதீன்?
பாட்னா: ஹிந்து இளைஞர்களையும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு பயன்படுத்துவதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாட்னா தொடர் குண்டுவெடிப்பில் 4 ஹிந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 20 முதல் 25 வயது உடையவர்கள். இவர்கள் பாகிஸ்தானுக்கு செல்போனில் பேசியதும் பணத்தை ஏ.டி.எம்.-ல் எடுத்து பாட்னா குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுக்கு கொடுத்ததும் உறுதி செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.
இதனால் ஹிந்து இளைஞர்களையும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு பயன்படுத்துவதாக புலனாய்வு அமைப்பினர் கூறுகின்றனர். ஆனால் பாட்னா இணையதளம் ஒன்றின் செய்தி ஆசிரியர் இர்ஷாதுல் என்பவரோ, பாஜகவை சேர்ந்த பங்கஜ் என்பவரை பாட்னா குண்டுவெடிப்பு நடந்த உடனேயே போலீசார் கைது செய்தனர். ஆனால் பங்கஜ் பற்றி எந்த ஒரு தகவலையும் போலீசார் இதுவரை தெரிவிக்கவில்லை என்கிறார்.
அதேபோல் இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்படும்போது அவர்கள் குறித்த தகவல்களை பூதாகரமாக கிளப்பும் போலீசார் 4 ஹிந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்ட விதத்தை மென்மையாக கையாள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.