தகுதி நீக்கம்: உச்சநீதிமன்றத்தில் தினகரன் ஆதரவு 17 எம்எல்ஏக்கள் மனு டிஸ்மிஸ்- நீதிபதி விமலா நீக்கம்

டெல்லி: தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தினகரன் ஆதரவு 17 எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகுதி நீக்க வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதி விமலாவை நீக்கிவிட்டு நீதிபதி எம். சத்யநாராயணாவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்பது தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களின் கோரிக்கை. இதனை வலியுறுத்தி ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் 18 எம்.எல்.ஏக்களும் தனித் தனியே மனு கொடுத்தனர்.

இதையடுத்து சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த நிலையில் 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
இத்தகுதி நீக்கத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏக்கள் வழகு தொடர்ந்தனர். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் அடங்கிய பெஞ்ச் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தனர்.
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் தகுதி நீக்கம் செல்லாது என நீதிபதி சுந்தரும் தீர்ப்பளித்தனர். இதையடுத்து இவ்வழக்கு 3-வது நீதிபதி விமலா பெஞ்சுக்கு மாற்றப்பட்டது.
ஆனால் விமலாவின் உறவின் அரசு வழக்கறிஞராக இருப்பதால் தகுதி நீக்கத்துக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றமே விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என தினகரன் ஆதரவு 17 எம்.எல்.ஏக்கள் மனுத் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்கள் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் பெஞ்ச் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. 17 எம்.எல்.ஏக்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் விகாஸ் சிங், மோகன் பராசரன் ஆஜராகினர்.
அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் தகுதி நீக்க வழக்கை விசாரிக்க இருக்கும் 3-வது நீதிபதி விமலாவை நீக்குவதாகவும் நீதிபதி எம். சத்யநாராயணா வழக்கை விசாரிப்பார் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் உச்சநீதிமன்றமே இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற 17 எம்.எல்.ஏக்கள் மனுவையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!