For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரம்மாண்ட தோல்வியில் முடிந்த மோதியின் ரொக்க சூதாட்டம்

By BBC News தமிழ்
|

கணக்கில் வராத பணத்தை வெளியே கொண்டுவருவதற்கென இந்திய அரசு மேற்கொண்ட 'பண மதிப்பு நீக்க நடவடிக்கை' பலனைத் தரவில்லை என்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

பிரம்மாண்ட தோல்வியில் முடிந்த மோதியின் ரொக்க சூதாட்டம்
AFP
பிரம்மாண்ட தோல்வியில் முடிந்த மோதியின் ரொக்க சூதாட்டம்

'டிமானிடைசேஷன்' என்று ஆங்கிலத்தில் கூறப்பட்ட இத்திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னுரிமைத் திட்டமாகும்.

இத்திட்டம் ஏன் தோல்வியடைந்தது என்பதை பொருளியல் வல்லுநர் விவேக் கவுல் ஆராய்கிறார்.

கடந்த பத்து மாதமாக பல இந்தியர்கள் இது தொடர்பாகக் கேட்டுக்கொண்டிருந்த கேள்விகளுக்கு இந்திய ரிசர்வ வங்கியின் ஆண்டறிக்கையின் 195வது பக்கத்தில் பதில் உள்ளது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை வெற்றி பெற்றதா, தோல்வியடைந்ததா? ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரத்தின்படி அது ஒரு இதிகாச அளவிலான தோல்வி அடைந்தது என்று சொல்வதே சரி.

கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அரசு அறிவித்தது. இப்படி செல்லாததாக ஆக்கப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பு 15.44 லட்சம் கோடி ரூபாய்.

கள்ள நோட்டுகளையும், கணக்கில் வராத கருப்புப் பணத்தையும் ஒழிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று பிரதமர் அறிவித்தார். ஒருவர் சம்பாதித்து, அதற்கு வரி கட்டாத பணமே கருப்புப் பணம்.

அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில், அந்த நாளின் நள்ளிரவு முதல், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்தன. இந்த நோட்டுகளை வைத்திருந்தவர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தி, புதிய நோட்டுகளாக திருப்பி எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இப்படித் திருப்பி எடுப்பதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

கணக்கில் வராத பணத்தை வைத்திருப்போர் வங்கியில் அதைச் செலுத்த மாட்டார்கள், அதனால் சட்டவிரோதப் பணம் பெருமளவில் ஒழியும் என்பதே அரசின் நம்பிக்கை.

இதற்கு மாறாக, ஜூன் 30 வரை 15.28 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் வைப்பாகச் செலுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது.

பண மதிப்பு இழப்பு
ARUN SANKAR/AFP/Getty Images
பண மதிப்பு இழப்பு

இதன்படி மதிப்பு நீக்கப்பட்ட நோட்டுகளில் சுமார் 99 சதவீதம் வங்கிக்குத் திரும்பி வந்துள்ளது. எனவே, கிட்டத்தட்ட ரொக்கமாக இருந்த கருப்புப் பணம் முழுவதும் வங்கிக்கு வந்துவிட்டது. உண்மையில் அரசு நினைத்தபடி அது ஒழியவில்லை.

கருப்புப் பணம் வைத்திருந்தவர்கள், பணம் இல்லாத பிறரிடம் அதைக் கொடுத்து அவர்களது வங்கிக் கணக்கில் போட்டு தங்கள் பணத்தை காப்பாற்றிக்கொண்டதாக விளக்கம் கூறப்படுகிறது.

கள்ள நோட்டுகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிக்கும் இந்த பண நீக்க நடவடிக்கை பெரிய அளவில் உதவியதாகத் தெரியவில்லை. ஏப்ரல் 2016 முதல் மார்ச் 2017 வரையில் கண்டுபிடிக்கப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 5,73,891 என்கிறது ரிசர்வ் வங்கி புள்ளிவிவரம்.

மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட மொத்தம் 24.02 பில்லியன் நோட்டுகளில் இது பூஜ்ஜியம் சதவீதத்தை விடக் கொஞ்சம் அதிகம். அவ்வளவே. முந்தைய ஆண்டில் பணநீக்க நடவடிக்கை ஏதும் இல்லாமலே கண்டுபிடிக்கப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 4,04,794.

ரூபாய் நோட்டுக்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலித் தொழிலாளர்கள்

எனவே, பண மதிப்பு நீக்க நடவடிக்கை அதன் முதன்மையான இரண்டு நோக்கங்களை நிறைவேற்றுவதிலும் தோல்வி அடைந்துவிட்டது.

இதில் நகைச்சுவை என்னவென்றால், ரொக்கமாக எவ்வளவு கருப்புப் பணம் இருக்கிறது என்பதைப் பற்றி அரசிடம் புள்ளிவிவரம் ஏதும் இல்லை. 2016 டிசம்பர் 16 அன்று நாடாளுமன்றத்தில் எழுத்துமூலம் அளித்த பதிலில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி இதைத் தெரிவித்தார்.

கருப்புப் பணத்தில் 5 சதவீத அளவுக்கே ரொக்கமாக மக்கள் வைத்திருக்கிறார்கள் என்று வருமான வரித்துறை மேற்கொண்ட சோதனைகளில் தெரியவருகிறது.

பொதுத் தளத்தில் போதிய புள்ளிவிவரம் ஏதும் இல்லாவிட்டாலும் சில பொருளியல் வல்லுநர்கள் தாங்களாக ஒரு புள்ளிவிவரத்தைக் குறிப்பிட்டு மோடி அரசின் நடவடிக்கையை நியாயப்படுத்துகிறார்கள். அவர்களின் கணிப்புகளை எந்த தர்க்கத்தின் மீது கட்டமைக்கிறார்கள் என்பதை அவர்கள் விளக்கத் தவறுகிறார்கள்.

இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை இந்தியாவின் மிகப்பெரிய ரொக்கப் பொருளாதாரத்தை மோசமாகப் பாதித்தது.

வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்
Getty Images
வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

அமைப்புசாரா துறைகளைச் சேர்ந்த 2.5 லட்சம் தொழில் அலகுகள் மூடப்பட்டதாகவும், ரியல் எஸ்டேட் துறை பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் வேலையை இழந்ததாகவும் பாஜகவின் தொழிற்சங்கப் பிரிவான பாரதீய மஸ்தூர் சங்கமே ஒப்புக்கொண்டுள்ளது.

பரவலாக ரொக்கத்திலேயே கொடுக்கல் வாங்கல் நடக்கும் வேளாண்மைப் பொருளாதாரமும் பெரிய அளவில் அடி வாங்கியது. விவசாயிகள் விளைவித்த பருப்பு, காய்கறிகளுக்கு போதிய அளவில் விலை கிடைக்காமல் போனது. பல விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். பல மாநில அரசுகள் வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்தன.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழிப்பதால், இந்தியப் பொருளாதாரம் ஊக்கம் பெறுமா?

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த நடவடிக்கையால் பெரிய அளவில் ரொக்கப் பற்றாக்குறை ஏற்பட்டது. தங்கள் சொந்தப் பணத்தை எடுப்பதற்கு, மக்கள் பல நாள்கள் ஏ.டி.எம். வாசலில் நீண்ட வரிசைகளில் காத்துக்கிடந்தார்கள். சிலர் இதில் இறந்தும் போனார்கள்.

ஆனால் இந்த நடவடிக்கை மிகப்பெரிய தவறு என்று மோடி அரசு ஒப்புக்கொள்ளும் வாய்ப்பு குறைவு. கடந்த நவம்பரில் இருந்து சொல்லிவருவதைப் போலவே இதை நேர்மறையாகவே அது சித்திரிக்கும்.

பண மதிப்பு குறைப்பு போராட்டம்
INDRANIL MUKHERJEE/AFP/Getty Images)
பண மதிப்பு குறைப்பு போராட்டம்

எந்த ஆரோக்கியமான பொருளாதாரமும் இதுபோன்ற பண மதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொண்டதில்லை.

"இந்தியப் பண மதிப்பு நீக்க நடவடிக்கை சகஜமான அரசியல் பொருளியல் சூழ்நிலையில் ரகசியமாகவும், திடீரென்றும் மேற்கொள்ளப்பட்டது. சர்வதேசப் பொருளியல் வரலாற்றில் முன்னெப்போதும் இப்படி நடந்ததில்லை. அதீத பணவீக்கம், போர், அரசியல் கிளர்ச்சி போன்ற தீவிரமான சூழ்நிலைகளிலேயே திடீர்ப் பண மதிப்ப நீக்க நடவடிக்கைகள் பிற சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன," என்கிறது சமீபத்திய இந்தியப் பொருளியல் சர்வே.

முன்னுதாரணம் இல்லாத இந்த நடவடிக்கைக்காகத் தரப்பட்ட உண்மையான விலை என்ன என்பது பற்றிய தகவல்கள் இப்போதுதான் வெளியே வரத் தொடங்கியுள்ளன.

ரூபாய் நோட்டுகளை மாற்ற தொடர்ந்து பரிதவிக்கும் மக்கள்

பிற செய்திகள்:

சென்னை ரிசர்வ் வங்கியில் பணம் மாற்ற குவிந்த மக்கள்

BBC Tamil
English summary
India's attempt to flush out undeclared wealth did not work, central bank figures show. The move, known as "demonetisation", was a flagship policy of Prime Minister Narendra Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X